உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமை கோரினார்

பட மூலாதாரம், Getty Images
சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரினார் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.
முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா கட்சித் தலைவரும் அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நான்கு நாட்களுக்கு முன்பு தேசிய வாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன் சர்ச்சைக்குரிய முறையில் முதல்வர் பதவியேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை பதவி விலகினார். இதையடுத்து, இன்று நடைபெற்ற சிவசேனை இடம் பெறும் புதிய கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆட்சியமைக்க உரிமை கோருவது என்றும் இந்தக் கூட்டணி முடிவு செய்தது.
இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றும் டிசம்பர் 1-ம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் பதவியேற்பு நடைபெறும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
மகா விகாஸ் அகாதி (வளர்ச்சிக்கான பெரும் கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் பாஜகவின் நீண்ட நாள் கொள்கைக் கூட்டாளியான சிவசேனா காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துள்ளது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டபின் பேசிய உத்தவ் தாக்கரே "நான் மட்டுமல்ல. இங்குள்ள நீங்கள் அனைவருமே முதல்வர்கள்தான். இன்று நடந்ததுதான் உண்மையான ஜனநாயகம்.
நாம் அனைவரும் சேர்ந்து மாநில விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்போம். சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை உருவாக்குவோம். மாநிலத்துக்குத் தலைமை தாங்கி வழிநடத்தவேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டதில்லை. சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து நாட்டுக்கு புதிய திசைவழியை அளிக்கிறோம்" என்று தெரிவித்தார் உத்தவ் தாக்கரே.
பாஜக சார்பில் நான்கு நாள்கள் முதல்வராக இருந்து இன்று பதவி விலகிய தேவேந்திர பட்னாவிசுக்கு காட்டமாக சில பதில்களைத் தெரிவித்தார் உத்தவ் தாக்கரே.
"பொய்கள் இந்துத்துவத்தில் சேராது" என்று கூறிய உத்தவ் தேவைப்படும்போது தங்களை பாஜக கட்டித் தழுவிக் கொள்வதாகவும், வேண்டாம் என்னும்போது விட்டு விலகுவதாகவும் தெரிவித்தார்.
சித்தப்பாவை சந்திக்கும் அஜித் பவார் - கண்கள் பனிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
நடு இரவில் பாஜக பக்கம் சாய்ந்து, துணை முதல்வராகவும் பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் இன்று பதவி விலகிய நிலையில், சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிவருகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதனிடையே உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு பிரதமர் மோதியை அழைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த சிவசேனைக் கட்சித் தலைவர் சஞ்சய் ராவத், "எல்லோரையும் அழைப்போம். 'அமித்ஷாஜி'யை கூட அழைப்போம்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












