'தமிழக அரசியலில் மீண்டும் தழைக்கும் பழைய கலாசாரம்'

கருணாநிதி, ஜெயலலிதா

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் நடைபெறும் அரசு விழாக்களில் எதிர்க்கட்சியான தி.மு.க வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறைதீர்வு கூட்டம் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க வைச் சேர்ந்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், அ.தி.மு.க அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், தி.மு.க வினர் வெற்றிப்பெற்ற தொகுதிகளின் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு பாரபட்சம் பார்ப்பதாகவும் பேசினார்.

இதனால், மேடையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் நந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் உதவியோடு நந்தகுமார் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, 'அரசை விமர்சித்து விளம்பரம் தேடப் பார்க்கிறார்கள்' என கூறினார்.

இதேபோல், கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களோடு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வந்திருந்தார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Mk stalin facebook page

படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின்

அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதனால், காவல் துறையினருக்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் அவரோடு வந்தவர்கள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், ''உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதிமுகவினர் அரசு விழாக்களை நடத்தி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் அரசு விழாக்களில் தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை. மக்களின் பணத்தில் அ.தி.மு.க விளம்பரம் செய்து வருகிறது,'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், இச்சம்பவங்கள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கங்களில், ''வேலூரில் திமுகவை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்!'' என பதிவு செய்துள்ளார்.

கருணாநிதி

அரசு விழாக்களில் எதிர்கட்சி பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவது கருணாநிதி - ஜெயலலிதா காலத்தில்தான் உச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

''எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு விழாக்களில் திமுகவினருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும். அவருக்கு பின்னர் உருவான கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி காலங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில்தான் எதிர்க்கட்சியினர் புறக்கணிக்கப்படும் கலாசாரம் துவங்கியது. குறிப்பாக, 1991 முதல் 1996 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற அரசு விழாக்களில் தி.மு.க பிரதிநிதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். ''

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

''அதற்குபிறகு, தி.மு.க நடத்தும் அரசு விழாக்களில் அ.தி.மு.க பிரதிநிதிகளின் பெயர்கள் இருந்தாலும் அ.தி.மு.க வினர் நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார்கள். காரணம், திமுகவோடு இணக்கமாக இருக்கிறோம் என ஜெயலலிதாவிற்கு புகார் சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம். இருதுருவ திராவிட அரசியலில் அரசு விழாக்களில் எதிர்க்கட்சியினர் புறக்கணிப்படும் சம்பவங்கள் புதிதல்ல, ஆனால் சமீபத்தில் சற்றேகுறைந்து இருந்தது. குறிப்பாக, சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் மேடையிலேயே அவரிடம் திமுகவினர் புகார்களை தெரிவிக்கும் அளவிற்கு ஜனநாயகம் மீண்டும் வலுபெறத் துவங்கியிருந்தது. இந்நிலையில், பழைய கலாசாரம் மீண்டும் தழைத்தோங்கியுள்ளது. அரசு விழாக்களில் ஆளும் கட்சியை புகழ்ந்து எதிர்க்கட்சியினர் பேச வேண்டும் என எதிர்ப்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். மக்கள் முன்னிலையில் விமர்சனங்களை முறையாக முன்வைப்பதும், அதனை நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் நிலையை நோக்கியும் அரசியல் கட்சிகள் நகர வேண்டும்'' என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: