ரஜினிகாந்த்: 'தமிழக மக்கள் 2021இல் அற்புதம் நிகழ்த்துவார்கள்'

rajnikanth

பட மூலாதாரம், MIGUEL MEDINA / getty images

2021ஆம் ஆண்டில் தமிழக மக்கள் அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

முதலில் தனக்குக் கிடைத்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிப்பதாக ரஜினி கூறினார். அதற்குப் பிறகு அவரிடம், கமலும் ரஜினியும் இணைந்து தேர்தலை சந்தித்தால் யார் முதல்வர் எனக் கேட்கப்பட்டது.

"தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழலில், அப்போது எடுக்க வேண்டிய முடிவு. கட்சி ஆரம்பித்த பிறகு தொண்டர்களையெல்லாம் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவு. அதுவரை அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை" என்றார்.

அவரும் கமலும் இணைந்து செயல்படுவார்கள் என்று சொல்லப்படுவதை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "2021ல் தமிழக மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்" என்று குறிப்பிட்டார் ரஜினி காந்த்.

இதற்கிடையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் ரஜினியின் இந்தக் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, "2021ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என்பதையே அவர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்" என்றார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :