கிரண்பேடியை ‘ஹிட்லரின் தங்கை’ என விமர்சித்த நாராயணசாமி - நடந்தது என்ன?

கோப்புப்படம்

பட மூலாதாரம், CM_PUDUCHERRY

புதுச்சேரி துணைநிலை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் நாராயணசாமி இருவருக்கும் இடையே மோதல்போக்கு கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக தொடர்ந்து வரும் நிலையில். கிரண்பேடியை சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை என கூறி கடுமையாக விமர்ச்சித்துள்ளார் நாராயணசாமி.

புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக கூட்டணி 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் மத்திய அரசானது கிரண்பேடியை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலில் போட்டியிடாமல் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார் நாராயணசாமி. அதைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு எம்எல்ஏ ராஜிநாமா செய்த பின்பு போட்டியிட்டு வென்றார்.

நாட்கள் செல்ல செல்ல துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என பொது மக்கள் கேள்வி எழுப்பும் சூழ்நிலைக்கு தள்ளியது.

துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கான கோப்புகள், மக்களுக்கான நலத்திட்ட கோப்புகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுவதாகவும், சில கோப்புகள் கிடப்பில் இருப்பதாதாகவும் குற்றம்சாட்டினார் முதல்வர் நாராயணசாமி.

இது குறித்து பதில் தெரிவித்த கிரண்பேடி, "என்னிடம் வரும் கோப்புகள் முறையாக இருக்கும் பட்சத்தில் அதை நான் உடனடியாக கையெழுத்திட்டு அனுப்புவதாகும், என்னிடம் கோப்புகள் ஏதும் கிடப்பில் இல்லை எனவும், முறையான விளக்கம் இல்லாத கோப்புகளை மட்டுமே நான் விளக்கம் கேட்டு அனுப்புவதாக கூறினார்".

கிரண்பேடி

பட மூலாதாரம், KIRAN BEDI

இப்படி கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மோதல் போக்கு சில நேரங்களில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் ஒருவ்ருக்கு ஒருவர் கடுமையாக விமர்ச்சித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, "தரமில்லாத ஒருவர் பதவியில் இருக்கிறார். புதுச்சேரி மாநில வளர்ச்சியை பற்றியும் மக்களை பற்றியும் கவலைப்படுவதில்லை. அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மதிக்காமல் தர்பார் நடத்துகின்றார்'' என கிரண்பேடியை குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், "புதுச்சேரி அரசுக்கே அதிகாரமுள்ளது. அதன் மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. வந்தபின் அரசு அதிகாரிகள் சிலரின் கணக்கு தீர்க்கப்படும் என்றும், இது தொடர்பாக நிறையபேர் சிறை செல்ல நேரிடும் என்றும், நீதிமன்றத்தை அவமதித்தவர்களும் சிறை செல்லவேண்டியதிருக்கும் என கூறினார். மேலும் கிரண்பேடியை சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சி என கூறி இவையனைத்தும் நான் மனக்குமுறலில் சொல்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து கேட்பதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் அலுவலகத்தை தொர்பு கொண்டபோது, "இது குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்த துணைநிலை ஆளுநர் விரும்பவில்லை" என கிரண்பேடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த கிரண்பேடி, "பொது இடத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள அவர் பொது இடங்களில் சிலை வைக்க உச்சநீதிமன்றம் 2013ம் தடைசெய்து உத்தரவிட்டதுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பை புதுச்சேரி மாநிலம் முழுவதும் தலைமை செயலாளர் பின்பற்ற வேண்டும்" என உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி பதில் கூறும்போது," சிலை வைக்க உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளோம்" என தெரிவித்தார் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :