மொபைல் டேட்டா கட்டணத்தை அதிகரித்தது ரிலையன்ஸ் ஜியோ

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணத்தை பெரிதளவு குறைத்ததாக கூறப்படும் புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.
அண்மையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியாளர்கள் மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா (இணையதள வசதி) வசதியை பெற்றுவரும் இந்திய வாடிக்கையாளர்கள், இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தபோவதாக அறிவித்துள்ளதால், இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் இரண்டாவது காலாண்டு இழப்புகள் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருப்பதாக அறிவித்தபிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இந்திய தொலைதொடர்பு சந்தை மதிப்பில் பாதியளவுக்கு மேல் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
ஆனால், இந்த மொபைல் டேட்டா கட்டண அதிகரிப்பு உடனடியாக நடக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
''மேற்கத்திய நாடுகள் அல்லது வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட ஆசிய நாடுகளான கொரியா, ஜப்பான் அல்லது சீனாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் அந்த அளவுக்கு அதிகம் இல்லை. மேலும் மொபைல் டேட்டா கட்டணம் அதிகரித்தாலும், அந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த கட்டணம் குறைவாகவே இருக்கும்'' என்று தொழில்நுட்ப நிபுணரான பிரசான்டோ ராய் பிபிசியிடம் தெரிவித்தார்.
''தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் நோக்கம், வாடிக்கையாளர்களை தங்களின் சேவையை பயன்படுத்த செய்வதும், அதன் மூலம் தங்களின் வருவாயை அதிகரிப்பதும் தான். மேலும் தாங்கள் செலுத்த வேண்டிய லைசன்ஸ் கட்டணத்தில் எஞ்சிய கட்டணத்தை குறைத்து கொள்ளுமாறு அரசை கேட்டுக் கொள்வதும்தான்'' என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் இந்தியா, தனது இரண்டாவது காலாண்டில் 510 பில்லியன் ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாக தெரிவித்தது.
மேலும் இந்த இழப்பால் வோடோஃபோன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுமா என்ற அச்சமும் நிலவுகிறது. இது தொழில்துறையின் நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.
ஏன் நிறுவனங்கள் கட்டண உயர்வு செய்கின்றன?
இது குறித்து பொருளாதார நிபுணர் விவேக் கவுல் பிபிசியிடம் விவரிக்கிறார்.
ஆரம்பகட்டத்தில் தொலைப்பேசி அழைப்புகளுக்கான கட்டணம் தொடர்ந்து குறைந்து வந்தாலும், மொபைல் டேட்டாவின் கட்டணம் அதிகரித்தபடியே இருந்தது.
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் நுழைந்த பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறியது.

பட மூலாதாரம், Getty Images
மொபைல் டேட்டா விலையை குறைப்பதன் மூலம் மட்டுமே இந்த சந்தையில் நிலைபெற முடியும் என்பதால், பல நிறுவனங்கள் மொபைல் டேட்டா விலையை குறைத்தன. இதன் விளைவாக, உலகில் மலிவான மொபைல் டேட்டா இருக்கும் நிலை இந்தியாவில் உருவானது.
இதனால் சந்தையில் ஏற்கனவே நல்ல விற்பனையில் உள்ள தொலைத்தொடர்பு சேவைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டது.
விற்பனையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சமமான நிலையில் அனைத்து தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களும் போட்டியிட விரும்பி, மொபைல் டேட்டா விலையை குறைத்து மிக குறைந்த லாபத்தை மட்டுமே பெற்றனர். இன்னும் சில நிறுவனங்கள் பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.
மேலும், தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு உள்ள முக்கிய நெருக்கடி என்னவென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு கடந்த 2005ம் ஆண்டில் இருந்தே அரசாங்கம் மற்றும் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் சுமூக நிலை ஏற்படவில்லை.
ஆனால், சமீபத்தில் அரசாங்கத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 900 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வோடஃபோன் இந்தியாவின் பங்கு மதிப்பு 390 பில்லியன் ரூபாய் ஆகும்.
இதன்மூலம் நஷ்டம் மேலும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அதிக வரி மற்றும் கட்டணங்களை குறைக்காவிட்டால், வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவது சந்தேகமே என வோடஃபோனின் தலைமை நிர்வாகி நிக் ரீட் எச்சரித்துள்ளார்.
வோடஃபோன்-ஐடியா கூட்டாக செயல்பட்டு தொலைத்தொடர்பு சந்தையில் சுமார் 29% வருவாயை ஈட்டுகிறது.

பட மூலாதாரம், Reuters
ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரியால் நிதி நெருக்கடிகள் உள்ள நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வரவில்லை." என செவ்வாய்கிழமை அன்று நிக் ரீட் தெரிவித்துள்ளார். பிறகு அடுத்த நாளே இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டு, இந்திய நாட்டில் இருந்து வர்த்தகத்தை முறித்துக்கொள்ளும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் நிக் ரீட் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த மன்னிப்பை விட பெரிய பிரச்சனை என்னவென்றால், வோடஃபோன் நிறுவனம் அவர்களின் இந்திய முதலீட்டை பூஜியத்தில் வைத்துள்ளது. மேலும் வோடஃபோன் அல்லது வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தின் தலைவரான ஆதித்யா ப்ரில்லா குழுமம் புதிய முதலீட்டை கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை.
எனவே, நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிலைப்பாடை மாற்றி இந்தியாவில் அதிக முதலீட்டுகளை கொண்டுவரவில்லை என்றால், வோடபோன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இதனால் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ?
வோடஃபோன் போன்ற பெரிய நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுமானால், அது இந்தியா குறித்து நல்ல பிம்பத்தை பிரதிபலிக்காது.
சமீபத்தில் வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மட்டும் இதற்கு காரணம் அல்ல. கடந்த பத்து ஆண்டுகளாகவே வோடஃபோன் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே வரி விதிப்பு தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
எனவே வோடஃபோன் நிறுவனம் இந்தியாவைவிட்டு வெளியேறினால் மற்ற முதலீட்டாளர்கள் இந்தியாவை தேர்ந்தெடுக்க தயங்குவார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு உள்ளதா?
உடனடியான பாதிப்பு இருக்காது. வோடஃபோன் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டாலும், வரும் காலங்களில்மொபைல் டேட்டா கட்டணம் அதிகரிக்கும். ஆனால் கட்டணம் அதிகரிப்பதால் பெரிய பாதிப்பு இல்லை - உண்மையில் நல்ல விஷயமாக இருக்கும், ஏனென்றால் சந்தையில் போட்டி நிலவ விலை உயர்வே ஒரே வழியாகும்.
உண்மை என்னவென்றால், வோடஃபோன் வெளியேறினால், அடிப்படையில் இரண்டு பெரிய தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் நிலைத்திருப்பார்கள், எந்த விற்பனை தளத்திலும் இரண்டு நிறுவனங்கள் மட்டும் போட்டியிடுவது, ஆரோக்கியமான வர்த்தகமாக இருக்காது.
பிற செய்திகள்:
- இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா?
- பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
- கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா?
- உயிருக்கு போராடிய காகத்தை காப்பாற்றிய ரிக்ஷா ஓட்டுநர்- நெருங்கிய நண்பர்களானது எப்படி?
- 'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












