வோடாஃபோன் நிறுவனத்தில் நஷ்டம்: நீங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE
இந்திய பெருநிறுவனங்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வோடாஃபோன் நிறுவனம் 50 கோடி ரூபாய் அளவிற்கான ஒரு பெரும் நஷ்டத்தை இந்த வாரம் சந்தித்துள்ளது.
எதனால் இந்த நஷ்டம்? இதனால் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள வேண்டுமா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பொருளாதார வல்லுநரும் எழுத்தாளருமான பிரஞ்சல் ஷர்மா.
பிபிசியின் கிஞ்சல் பாண்ட்யா, இ-மெயில் வழியாக எடுத்த அவரது நேர்க்காணலின் தொகுப்பு:
கேள்வி: இந்தியாவில் வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் நஷ்டத்திற்கு முக்கிய காரணம் என்ன?
அலைக்கற்றைகளின் அதிக விலை, வருவாய் பங்கீட்டுக் கொள்கை மற்றும் வாடிக்கையாளர்கள் மூலம் குறைந்த வருமானம், இத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு காரணமாக இருக்கலாம்.
கேள்வி: இந்தியத் தொலைத்தொடர்புத்துறையை இது எப்படிப் பாதிக்கும்?
இந்தியா ஒரு பெரிய சந்தையாக இருந்தாலும், தொலைத் தொடர்புத்துறை சற்று வலுவிழந்து இருக்கிறது. அதிக செலவுகள், அதிக வரி விதிப்புகள், மற்றும் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை இவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இந்திய அரசும் இத்துறைக்கு போதுமான ஆதரவைத் தரவில்லை.
அலைக்கற்றை விற்பனை, வருவாய்ப் பங்கீடு, வரி விதிப்புகள் ஆகியற்றின் மூலம், வருவாய் ஈட்ட வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது.
கேள்வி: இந்தியத் தொலைதொடர்புத்துறை தற்போது என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறது?
தொலைத் தொடர்புத்துறையின் தற்போதைய நிலைக்கு தொடர்புடைய அனைவருமே காரணம். அலைக்கற்றைகளை அதிக விலைக்கு விற்கும் அரசு, அதே சமயத்தில், வருவாயில் இருந்தும் பங்கு எடுத்துக் கொள்கிறது. சரியாகத் திட்டமிடாமல் ஏலம் நடத்துவது மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் பல ஆப்பரேடர்களின் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்கிறது. இதனால் பல ஆப்பரேட்டர்கள் இதிலிருந்து விலகிவிடுகிறார்கள்.
கேள்வி: ஜியோவின் வருகை இந்திய தொலைத்தொடர்புத்துறையை எப்படி மாற்றியது?

பட மூலாதாரம், Getty Images
ஏற்கனவே நலிந்து இருந்த தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ வந்து, குறைந்த விலையில் சேவையை வழங்கத் தொடங்கியது. இது ஏற்கனவே இருந்த நிறுவனங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
கேள்வி: இதனால் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள வேண்டுமா?
ஆம். வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம்தான் இது. கோடிக்கணக்கான மொபைல் பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தேர்வுகள் குறைந்து கொண்டே வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களில் ஆரோக்கியமான போட்டி மற்றும் சரியான முதலீடு இல்லையென்றால் ஆதாயங்களை இழக்க நேரிடும்.
சந்தையில் ஒரே ஒரு நிறுவனத்தின் ஆளுமை இருந்தால், சேவைகளின் தரம் குறைந்து, விலையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
இத்துறையில் பல நிறுவனங்களின் பங்கீடு இல்லை என்றால், பொருளாதார வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்திக் கொள்ள முடியாது. நான்காவது தொழில்துறை புரட்சிக்காலத்தில், தேசத்திற்கு வலுவான தொலைத்தொடர்புத்துறை தேவையாக இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












