மேற்கு வங்கத்தில் கரையை கடந்த புல்புல் புயல் - இருவர் பலி மற்றும் பிற செய்திகள்

புல்புல் புயல்

பட மூலாதாரம், Getty Images

வங்கக் கடலில் உருவான புல்புல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) மாலை உள்ளூர் நேரப்படி 06:30 மணிக்கு மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு அருகே புல்புல் கரையை கடந்தது. இதன் காரணமாக, கடல் சீற்றம் அடைந்து சுமார் 2 மீட்டர் வரை கடல் அலைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புல்புல் புயலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா விமான நிலையம் உட்பட பல துறைமுகங்களும், விமான நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.

புயல் கரையை கடப்பதற்குமுன், ட்விட்டரில் கருத்து தெரிவித்த மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, மக்கள் அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கும்படியும், பத்திரமாக இருக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.

புல்புல் புயல் இன்னும் வடக்கு நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Presentational grey line

'முஸ்லிம்களுக்கு ஐந்து ஏக்கர் மாற்று நிலம் தேவையில்லை' - அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

பட மூலாதாரம், ANI

பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி.

உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களில் உச்சமானதுதான். ஆனால், அங்கு தவறு நடக்க வாய்ப்பில்லை என்று கூற முடியாது என ஹைதராபாத்தில் பிபிசி தெலுங்கு சேவையின் தீப்தி பத்தினிக்கு அளித்த பேட்டியில் அவர் அயோத்தி தீர்ப்பை விமர்சித்துள்ளார்.

தீர்ப்பு குறித்த தனது திருப்தியின்மையை வெளிப்படுத்த தமக்கு உரிமையுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"அல்லாவுக்காக இல்லத்தை எழுப்ப இடம் வாங்க முடியாத அளவுக்கு வறிய நிலையில் முஸ்லிம்கள் இல்லை. இந்த ஐந்து ஏக்கர் மாற்று நிலம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை. ஹைதராபாத் நகரத் தெருக்களுக்கு வந்து நாங்கள் பிச்சை எடுத்தால் கூட, மக்கள் அதைவிட அதிகமாகக் கொடுப்பார்கள்," என்று கூறியுள்ளார் அவர்.

Presentational grey line

அயோத்தி வழக்கின் கதை: மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும்

அயோத்தி

மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 - 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.

ஆனால் பாபர் அல்லது பாகி இந்த நிலத்தை எப்படி வசப்படுத்தினார்கள் என்பது பற்றியும், மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கே என்ன இருந்தது என்பது பற்றியும் எந்த ஆவணங்களும் கிடையாது.

முகலாய மன்னர்கள், நவாப்கள், பிற்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்த மசூதியின் பராமரிப்புக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது

பல சமயங்களில் இந்த இடம் தொடர்பான சர்ச்சையில் உள்ளூர் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே மோதல்கள் நடந்திருப்பதாகத் தகவல்கள் உள்ளன.

Presentational grey line

அயோத்தி தீர்ப்பு: முக்கிய சான்றை மறைக்க தொல்லியல் துறை முயன்றது - பேராசிரியர் டி.என். ஜா

அயோத்தி தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் டி.என். ஜா பிரபல வரலாற்று ஆய்வாளர். இன்று வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள "ராம்ஜென்ம பூமி-பாபர் மசூதி: தேசத்திற்கு வரலாற்றாளர்களின் அறிக்கை" என்ற அறிக்கையை எழுதிய வரலாற்று ஆய்வாளர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்.

போராசிரியர் சூரஜ் பான், அர்தர் அலி, ஆர். எஸ். ஷர்மா மற்றும் டி.என்.ஜா ஆகிய அந்த நான்கு சுயாதீன வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் சான்றுகளில் தீவிர ஆய்வு நடத்தி, பாபர் மசூதிக்கு அடியில் கட்டப்பட்டிருந்தது இந்து கோயில் அல்ல என்று அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அயோத்தி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், அது பற்றி டிஎன் ஜா என்ன சொல்கிறார்.

Presentational grey line

'சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்' - உச்ச நீதிமன்றம்

அயோத்தி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும்.

சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுகையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :