"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்" - உண்மை நிலவரம் என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையம்

பட மூலாதாரம், Getty Images

கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என அந்த அணுமின் நிலையம் மறுத்துள்ளது. அங்குள்ள கணிப்பொறிகள் இணையத்தோடு இணைக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன.

இந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர்.

இந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று அதிகாலை 12.30 மணிக்கு நீராவி உற்பத்தி குறைவாக இருப்பதால், இரண்டாவது அணு உலையின் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிகழ்வையும் சைபர் தாக்குதல் குறித்த சமூக வலைதள செய்திகளையும் இணைத்து சில செய்திகள் பரப்பப்பட்டன.

இந்த நிலையில் இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கமளித்துள்ளது. அதில், "இந்திய அணுசக்தி நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் தனியாக இயங்குபவை. வெளியில் உள்ள வலைபின்னலுடனோ, இணையத்துடனோ இணைக்கப்படாதவை. அணுசக்தி நிலைய கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லாதது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன. அணு உலையை இயக்குவது தொடர்பாகவோ, பாதுகாப்பு தொடர்பாகவோ எவ்வித பிரச்சனையும் இல்லை" எனக் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களைப் பகிர, அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :