பானுசித்ரா: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடும் பெண்ணின் கதை #iamthechange

காணொளிக் குறிப்பு, பானுசித்ரா: “தனி மனுஷியாக சுற்றுச்சூழலை நீங்கள் காப்பாற்ற முடியும்”
    • எழுதியவர், கிருத்திகா கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஆறாவது அத்தியாயம் இது.)

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் அணையாடைகளை (நாப்கின்கள்) தாங்களே தைத்து எவ்வாறுபயன்படுத்துவது என்பதை கிராமப்புற பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் கற்றுத்தருகிறார் பானுசித்ரா.

சென்னையிலுள்ள குன்றத்தூரில் வசிக்கும் பானுசித்ரா ஒரு பட்டதாரி. தனது முதல் கருச்சிதைவிற்குப் பிறகு, தான் சாப்பிடும் உணவுகளிலிருந்து அனைத்தின்மீது கவனத்தை திருப்பிய அவர், ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட அணையாடைகளால் தனது கருச்சிதைவு நடந்திருக்குமா என்பதையும் சிந்தித்துள்ளார்.

இதுவரை எந்த மருத்துவரும் அதை நேரடியாக கூறவில்லை என்றாலும், ரசாயணங்கள் கலந்து விற்கப்படும் அணையாடைகளால் ஏற்படும் உபாதைகளை அறிந்த பிறகு, அவற்றை தவிர்த்து, துணிகளால் செய்யப்பட்ட அணையாடைகளை செய்யத் தொடங்கினார் பானு.

தொடர் முயற்சி

"முதன்முதலில் நான் தயாரித்த அணையாடையால், அதிகப்படியான ரத்தப்போக்கை சமாளிக்க முடியவில்லை. அதை என்னால், 4 மணிநேரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்தது. அதை தொடர்ந்து, பல்வேறு துணிகளையும், பல்வேறு விதங்களிலும் பயன்படுத்தி அணையாடை உருவாக்க முயற்சித்தேன். 4 முதல் 5 மாதங்களுக்கு இந்த அணையாடை சோதனை முயற்சி நடந்தது" என்று தனது பயணத்தின் தொடக்கப்புள்ளியை விவரிக்கிறார் பானுசித்ரா.

பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அணையாடைகளை கையால் தைத்து தயாரிக்க முடிந்தாலும், அவற்றை சோதித்துப் பார்க்க தோழிகளும், நண்பர்களும் அதை பயன்படுத்திப் பார்க்க முன்வரவில்லை என்கிறார் பானுசித்ரா.

"எண்ண ஓட்டத்தில் நான் பின்னோக்கி செல்வதாக நண்பர்கள் யோசித்தார்கள். பெண்கள் முன்னேறிவரும் காலம் இது, நிறைய சாதிக்க இருக்கிறது. கடைகளில் கிடைக்கும் அணையாடைகள் பயன்படுத்த வசதியாக இருக்கும்போது, எங்களை மீண்டும் துணியை பயன்படுத்த சொல்கிறாயே என்றே கேட்டார்கள்" என்று அவர் நினைவுகூர்ந்தார்.

பானு சித்ரா
படக்குறிப்பு, பானு சித்ரா

"மக்களிடம் போய், துணியால் செய்யப்பட்ட அணையாடைகளுக்கு மாறிவிடுங்கள் என்று கூறினால், யாரும் செய்ய மாட்டார்கள். தற்போதுள்ள பரபரப்பான வாழ்க்கையில் பெண்களுக்கு அது மிகவும் கடினம். ஆனால், அதிலுள்ள பலன்களை எடுத்து விளக்கும்போது, அவர்களின் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தை பார்க்க முடிந்தது. இதை எனக்கு புரிய வைத்தது என்னுடைய நண்பர்கள்தான்"

விழிப்புணர்வே வழி

"கடைகளில் கிடைக்கும் அணையாடைகளால், நாம் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிறோம். இதை மக்களுக்கு எடுத்து சொல்ல நான் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த முடிவு செய்தேன். முதலில் கிராமங்களில் என்னுடைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கினேன். அங்கு சென்றபோது மக்களுக்கு எந்த அளவிற்கு விழிப்புணர்வு தேவை என்பதை புரிந்துகொண்டு, வீட்டிலேயே தங்களின் அணையாடையை செய்துகொள்வது எப்படி என்று கற்றுத்தரத் தொடங்கினேன்" என்று அவர் தெரிவித்தார்.

மலைகளை சென்றடைந்த பிளாஸ்டிக்

இதுவரை பதினைந்திற்கும் அதிகமான கிராமப்புற பள்ளிகளுக்கு சென்று, மாணவிகளுக்கும் அவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வும், அணையாடை தயாரிக்கும் முறையையும் கற்றுத்தந்துள்ளார் பானுசித்ரா.

மலைகிராமங்களில் வாழும் மக்கள், பண்டைகால முறைப்படி எப்படி கடைபிடிக்கிறார்கள் என்று கற்க, கோத்தகிரியிலுள்ள மலைவாழ் மக்களை சந்தித்த பானுசித்ராவிற்கு கிடைத்த தகவல்கள் ஏமாற்றத்தையே அளித்தன.

" அவர்களும் கடைகளில் கிடைக்கும் அணையாடைகளுக்கு மாறியுள்ளது தெரியவந்தது. அவர்களும் எல்லாவற்றிற்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்பதை பார்க்க வருத்தமாக இருந்தது. அவர்களுக்கும் அணையாடைகளை வீட்டிலேயே செய்துகொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுத்துவிட்டு வந்தோம்" என்று வருத்தத்துடன் கூறுகிறார் பானுசித்ரா.

Presentational grey line

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

Presentational grey line

சுகாதாரமும், சுற்றுச்சூழலும்

"இந்த அணையாடைகளால் ஏற்படும் சுற்றுசூழல் கேடுகளுக்கு பெண்களும் பங்களிக்கின்றனர் என்பதும் எனக்கு வருத்தமளிக்கிறது. ஒரு பெண், ஒரு மாதவிடாயின் போது, 8 அணையாடைகளை பயன்படுத்துகிறார் என்றால், ஐந்து ஆண்டுகளில் அது 250 அணையாடைகளை தாண்டுகிறது. ஆனால், இந்த அணையாடைகள் சில மணிநேரங்கள் பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்கு மக்காமல் சுற்றுசூழலை பாதிக்கின்றன."

"அதே பெண், துணியால் செய்யப்பட்ட மக்கும் தன்மைகொண்ட அணையாடைகளை பயன்படுத்தும்போது, நான்கு அல்லது ஐந்து அணையாடைகள் போதும். அவற்றை சுத்தம் செய்து நீங்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.

மாற்றம் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்

"தனி மனிதனின் மாற்றத்திலிருந்தே சமூக மாற்றம் தொடங்குகிறது. ஒரு குடும்பத்தில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றத்திற்கு ஊன்றுகோலாக உள்ளது. அதை செய்ய பெண்களைவிட சிறப்பானவர்கள் யார்?"

"இந்த எண்ணத்தை மனதில் வைத்தே நான் எல்லோருக்கும் அணையாடைகளை தயாரிக்க கற்றுத் தருகிறேன். உங்கள் வீட்டிலுள்ள பழைய பருத்தி துணியை எடுத்து வந்து, எவ்வாறு இவற்றை கையால் செய்வது என்பதை நீங்கள் சில மணிநேரங்களில் கற்றுக்கொள்ள முடியும்."

"கற்றுக்கொள்ளும் பெண், அவரின் தோழிக்கும், மகளுக்கும், சகோதரிகளுக்கு இதை கற்றுத்தருவார். இது ஒரு தற்சார்பு வாழ்வியலை ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக்கும்" என்று நம்புவதாக கூறுகிறார் பானுசித்ரா.

தனி மனிதராக ஒருவரால் எந்த அளவிற்கு, சமூகத்திலுள்ளவர்களின் சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பெண்கள் பணியாற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக வாழ்கிறார் பானுசித்ரா.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :