பாலுறவு இன்றி மனிதகுல வரலாற்றில் பலர் வாழ்ந்தும் வளம் பெற்றும் உள்ளனர்: பிரகதி சிங் #100women

பிரகதி சிங்.
படக்குறிப்பு, பிரகதி சிங்.

"மனிதகுல வரலாற்றில் பாலுறவு கொள்ளாமல் பலர் வாழ்ந்தும், வளம் பெற்றும் உள்ளார்கள். அவர்களின் கதைகள் சொல்லப்பட்டதில்லை. அதனால்தான் நான் என்ன செய்கிறேனோ அதை செய்துகொண்டிருக்கிறேன். இதன் மூலம் இந்த மனிதர்களும், இவர்களின் கதைகளும் இயல்பானதாகும்" என்று பிபிசி 100 பெண்கள் நிகழ்வில் தெரிவித்தார் டாக்டர் பிரகதி சிங்.

காதல், குடும்பம், அணுக்க உறவு ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் பேசினார்.

தனிக்குடித்தனம் என்ற கருத்தாக்கம், தொழில்மயமாக்கத்தின் கருத்தாக்கம், என்றும் மிக சமீப காலக் கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னைத் தானே மணத்தல் என்ற கருத்தாக்கம், வாழ்க்கைத் துணை தேவை என்ற கருத்தை சவாலுக்கு உட்படுத்தும் என்று தெரிவித்த அவர், திருமணமோ, குழந்தைகளோ இல்லாமல் பெண்கள் எளிதாக ஒரு அடையாளத்தைப் பெற முடிவதே பெண்களை உள்ளடக்கிய எதிர்காலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பாலின அடையாளம் அற்றவராக ஒரு நபர் உணரும்போது, அவர் எதிர்பார்க்கிற முதல் விஷயம், அவர்களைப் போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு சமூகம். தான் மட்டும் தனியல்ல என்ற உணர்வு. அதைப் போன்ற பாதுகாப்பான சமுதாய வெளிகளை நாம் உருவாக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

அத்துடன் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்வை வாழ குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ஒப்புதலைப் பெறவேண்டியதில்லை என்றார் பிரகதி.

பிபிசி 100 பெண்கள்

கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், 'பிபிசி 100 பெண்கள்' என்ற பெயரில் தத்தமது துறைகளில் சாதித்த, கவனத்தை ஈர்த்த 100 பெண்களின் கதைகளை உலகம் முழுவதுமுள்ள வாசகர்களிடையே பகிர்ந்து வருகிறோம்.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 100 பெண்களில் வில்லேரியலும் ஒருவர். 2019ஆம் ஆண்டுக்கான 'பிபிசி 100 பெண்கள்' நிகழ்வின் கருத்துரு, "The Female Future" அதாவது 'பெண்களால் ஆகும் எதிர்காலம்'. இந்த ஆண்டு பிபிசி 100 பெண்கள் நிகழ்வின் கீழ் இரண்டு சர்வதேசக் கருத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

முதலாவது நிகழ்வு கடந்த 17ஆம் தேதி லண்டனில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி நிகழ்வு டெல்லியில் இன்று (அக்டோபர் 22ஆம் தேதி) நடைபெற்றுவருகிறது.

அவருக்கு அடுத்தது டுனீஷியா நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவர் ஹைஃபா சித்ரி பேசினார்.

ஹைஃபா
படக்குறிப்பு, ஹைஃபா

2030ல் முஸ்லிம் குழந்தைகளே அதிகம் இருப்பார்கள்

முன்னதாகப் பேசிய கினா சுர்லா "உலகில் மதமாற்றம் நடக்கவில்லை என்றால் 21ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்குள் கிறித்துவர்களைவிட இஸ்லாமியர்கள் அதிகளவில் இருப்பார்கள். எதிர்காலத்தில் பிறக்கப் போகும் குழந்தைகளே தங்களுடைய மதத்தை தேர்வு செய்யும் காலமும் வரும்" என்று தெரிவித்தார்.

வெவ்வேறு மதங்களில் நிகழும் தற்போதுள்ள குழந்தை பிறப்பு விகிதம் அப்படியே தொடரும் நிலையில், மத மாற்றமும் நிகழாமல் இருக்கும் நிலையில், 2030ல் உலகில் உள்ள குழந்தைகளில் அதிகமான குழந்தைகள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவையாகவே இருக்கும் என்றார் அவர்.

கினா சுர்லா
படக்குறிப்பு, கினா சுர்லா.

அவர் எதிர்கால மதத்தில் பெண்களுக்கான இடமும், பொருத்தப்பாடும் என்பது குறித்துப் பேசினார். "பெண்களே புதிய பாதைகளை வகுப்பார்கள். பெண்களே மதத்தின் எதிர்காலம்" என்று அவர் தெரிவித்தார். உலகம் ஒவ்வொரு நாளும் மதம் சார்ந்த இடமாக மாறிவருவதாக அவர் தெரிவித்தார். மத அடிப்படை வாதம் என்பது உள்ளது என்று கூறிய அவர் மதத்தைப் பின்பற்றுகிற பெரும்பாலானவர்கள் வன்முறையாளர்கள் இல்லை என்றார் அவர்.

பெண்களின் கருவுருதல் விகிதத்தை கணக்கிடுவதைத் தாண்டி சிந்திக்கிற உலகத்தை நம்மால் படைக்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நீதிபதிகளுக்கு பதில் கணினி அல்காரிதம் முடிவெடுக்கும்: பாவோலா வில்லேரியல்

பாவோலா வில்லேரியல்
படக்குறிப்பு, பாவோலா வில்லேரியல்

எதிர்காலத்தில் நீதிபதிகளுக்குப் பதிலாக கணினி அல்காரிதம்கள் முடிவுகளை எடுக்கும். இந்த அல்காரிதம் எனப்படும் கணினி கணக்கீடுகளில் சமூகப் பாகுபாடுகள் பிரதிபலிக்கும். எனவே, இந்த அல்காரிதம் என்னும் கணினி கணக்கீடுகள் முதன்மை இடம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று இந்த நிகழ்வில் பேசிய பாவோலா வில்லேரியல் தெரிவித்தார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கணினி நிரலரான அவர் உலகம் முழுவதும் கணிப்பொறி நிரலாக்கம் நீதித்துறை அமைப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றியும் நீதித்துறையின் எதிர்காலம் குறித்தும் பேசினார்.

என்னுடைய கணிப்பொறி நிரலாக்கத்தால் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கத்தை என்னால் அளவிடமுடியாது. ஆனால், 23 ஆயிரம் பேர் நீதியை அணுகுவதற்கு தரவுப் பகுப்பாய்வு மூலம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது பெரிய அனுபவம் என்று தெரிவித்தார் அவர்.

சட்டப்படியான புலன் விசாரணையின்போது பயன்படுத்தப்படும் அல்காரிதம், இனப்பாகுபாடு இல்லாமல் பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உணர்வுத் திறன் உள்ள பெண்கள் தேவை: நட்டாஷா நோயல்

நடாஷா
படக்குறிப்பு, நடாஷா

இந்த நிகழ்வில் முன்னதாகப் பேசிய யோகா கலை நிபுணர் நட்டாஷா நோயல், அறிவுத் திறன், அதாவது ஐ.க்யூ. அதிகமுள்ள பெண்கள் மட்டுமல்ல, உணர்வுத் திறன் அதிகமுள்ள பெண்களும் நமக்குத் தேவை. நல்லமுறையில் பரிணமித்த மனிதர்களாக இருப்பதற்கு உணர்வுத் திறன் தேவை என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிபிசி 100 பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இந்தியர்களில் நட்டாஷாவும் ஒருவர்.

இந்த நிகழ்வின் பிற்பகல் அமர்வில் பேசியபோது இதனைத் தெரிவித்தார் நட்டாஷா. "என்னுடைய 7 வயதில் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். இதற்கெல்லாம் காரணம் என் உடல் என்றும், காரணம் நான் மட்டுமே என்றும் நினைத்தேன். அதனால் என் உடலை நான் வெறுத்தேன்." என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவர் மேடையிலேயே யோகா செய்து காட்டினார்.

உடலை கேலி செய்கிறவர்களைப் பற்றி கேட்டபோது, "யாராவது என்னை குண்டாக இருப்பதாக சொன்னால், ஆம் நான் குண்டாக இருக்கிறேன் என்று சொல்லி கடந்துவிடுவேன்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய விண்வெளி ஆராய்ச்சியாளர் சுஷ்மிதா மொஹந்தி, "போர்களிலும், ஆயுதங்களிலும் உலக நாடுகள் செலவிடுவதைவிட சுற்றுச்சூழல் மாசுபாடின்றி விண்வெளிக்கு செல்வதை உலக நாடுகள் யோசிக்க வேண்டும்" என்று பிபிசியின் 100 பெண்கள் நிகழ்வில் பேசியபோது விண்வெளி ஆராய்ச்சியாளர் சுஷ்மிதா மொஹந்தி தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டில் விண்வெளி விமானம்: உங்களது இருக்கை என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற பிபிசியின் 100 பெண்கள் நிகழ்வில் பேசியபோது சுஷ்மிதா மொஹந்தி தெரிவித்தார்.

விண்வெளிப் பயணத்தில் மாற்றம்

கடந்த நூற்றாண்டில் வணிக விமானப் போக்குவரத்தில் நிகழ்ந்த மாற்றம் 2030-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி பயணத்தில் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பூமி வாழ முடியாத இடமாக மாறினால் என்ன நடக்கும் என்று கூறி பார்வையாளர்களை அவர் சிந்திக்க தூண்டினார்.

இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்குள் மேலதிகமானோரை இந்த பூமி தாங்காது என்று அச்சப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

விண்வெளி பெண்ணான சுஷ்மிதா மொஹந்தி.
படக்குறிப்பு, சுஷ்மிதா மொஹந்தி.

"விண்வெளி குப்பை தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. காரணம், பூமிக்கு மிக அருகில் இருக்கும் சுற்றுவட்டப் பாதையை நாம் ஏற்கனவே குப்பைகளால் நிரப்பிவிட்டோம். அங்கு மட்டும் 30 லட்சம் குப்பை பொருட்கள் மிதந்து வருகின்றன" அவர் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தை கண்காணிக்க விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமென சுஷ்மிதா தெரிவித்தார்.

போர்கள் மற்றும் ஆயுதங்களில் முதலீடுகளை செய்யாமல், சுற்றுச்சூழல் மாசுபாடின்றி விண்வெளிக்கு செல்வதற்கு பணத்தை செலவிட அவர் கேட்டுக்கொண்டார்.

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. 2030ம் ஆண்டுக்குள் விண்வெளியின் பூமிக்கு அருகிலுள்ள வட்டப்பாதையில் மைக்ரோ சமூகங்கள் உருவாகுவதை கற்பனை செய்யுங்கள் என்று கேட்டு கொண்டார் சுஷ்மிதா மொஹந்தி.

சுஷ்மிதா பேசுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலரான மர்லின் வேரிங் இந்த நிகழ்வில் உரையாற்றினார்.

உரையாடல் அமர்வில் சுப்புலட்சுமி நந்தி மற்றும் மார்லிங் வேரிங்

இந்த பிரபஞ்சத்திற்கு தேவையான முக்கியமான உணவான தாய் பாலை பெண்களே உற்பத்தி செய்கின்றனர். பாதுகாப்பான தாய்பால் கிடைக்க செய்வதே எதிர்கால மனிதகுலத்துக்கு நாம் செய்யும் முக்கிய பணியாக இருக்கும் என்று பிபிசியின் 100 பெண்கள் (2019) நிகழ்வில் உரையாற்றிய பொருளியலாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மர்லின் வேரிங் தெரிவித்துள்ளார்.

சுபலட்சுமி நந்தியோடு இணைந்து - ஊதியமில்லாத பெண்களின் உழைப்பை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட்டால் என்னவாகும்? என்ற தலைப்பில் நடைபெற்ற உரையாடலின்போது மர்லின் வேரிங் தெரிவித்துள்ளார்.

அதிக வளங்கள் காணப்படுகின்றன. அவற்றை அதிகமாக வேலை செய்வோருக்கும், அதிகம் தேவைப்படுவோருக்கும் மறுபகிர்வு செய்ய வேண்டியது அவசியம் என்றார் மர்லின்.

ஆனால், தங்களின் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறியீட்டை அதிகரிக்க செய்வதில் ஒவ்வொரு நாடும் போட்டியிடுகிறது என்று சாடினார் என்றார்.

"ஜிடிபி (GDP) என்ற அளவீடு இந்த உலகை நாசமாக்கி வருகிறது. குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு ஜிடிபி போட்டியில் நிறுவனங்களால் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்"

பெண்கள் சார்ந்த பொருளியலை உலக அளவில் மிகவும் முக்கியமாக எடுத்துக்கொள்ள மர்லின் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களின் தலைமையிலான எதிர்காலத்தில் பொருளாதார செயல்திறனுக்கு பாலின சமத்துவம், வளர்ச்சி மற்றும் பெண்களின் மனித உரிமைகள் ஆகியவை முக்கிய மதிப்பீடுகளாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சுப்புலட்சுமி நந்தி

இந்த உரையாடலின்போது பேசிய பாலின சமத்துவ நிபுணர் சுபலட்சுமி நந்தி, ஊதியமின்றி பெண்கள் செய்யும் உழைப்பு கண்டுகொள்ளப்படாமல் இருப்பது தொடர்கிறது. சமூக நிலைமையால் பெண்களே தங்கள் பணியை மதிப்பிடுவதில்லை. எப்போது இதனை மதிப்பிட பெண்கள் தொடங்குவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

நிலத்தின் சொந்தகாரர்களாக இல்லை என்பதால், விவசாயியாக பணிபுரியும் பெண்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்கிறார் அவர்.

எல்லா பெண்களும் வேலை செய்கிறார்கள். எல்லா பெண்களும் தொழிலாளர்கள். வேலையும், தொழிலும் ஒன்றல்ல என்றார் சுபலட்சுமி நந்தி.

இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதில்லை. அவர்கள் வேலையற்றவர்கள் என்று குறிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

100 பெண்கள்

முன்னதாக, மலட்டுத்தன்மை என்பது பெண்களின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களின் மலட்டுதன்மை பற்றி நவீன ஆய்வுகள் நடத்துவதன் மூலம் இந்த அநீதியை, சமத்துவமின்மையை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும் என்று ஸ்காட்லாந்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் சாரா மார்டின்ஸ் தெரிவித்தார்.

பிபிசியின் 100 பெண்கள் (2019) நிகழ்வில் ஆண்களின் மலட்டுத்தன்மை என்ற தலைப்பில் ஆண்களின் மலட்டுத்தன்மை குறித்த கட்டுக் கதைகளை உடைத்து பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

பெண்களோடு இணைத்து பேசப்படும் மலட்டுத்தன்மை என்ற சுமையை பெண்கள் மட்டுமே சுமந்து வருகின்றனர். ஆனால், ஆண் மலட்டுதன்மையில் அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்கிறார் ஆராய்ச்சியாளர் சாரா மார்டின்ஸ் டா சில்வா.

சமத்துவமின்மையையும், பெண்களின் மலட்டுத்தன்மை தொடர்பான சுமையையும், அறிவியல், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் புத்தாக்கம் மூலம் சரிய செய்ய முடியும் என்கிறார் சாரா மார்டின்ஸ்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து, தந்தையாக ஆண்கள் தடுமாறும் நிலைமையை சுட்டிக்காட்டி அவர் பேசினார். இதனை தடுக்கும் நோக்கில், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

100 பெண்கள்

பிபிசியின் 100 பெண்கள் (2019) நிகழ்வில் எதிர்காலத்துக்கான பள்ளிகள்: பாடங்கள் இல்லை, பள்ளி கட்டடமும் இல்லை. அதிவேக யுகத்தில் கல்வியை மறு கட்டமைப்பு செய்தல். பற்றி இரானிய கல்வியாளர் ராயா பிட்ஷஹ்ரி பேசினார்.

ஆர்ட்டிஃபீசியல் இன்டலிஜென்ஸ்தான் எதிர்காலமாக அமைய போகிறது. எனவே அதற்கு ஏற்றப்படி பள்ளிகளின் எதிர்காலரம் மாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கிளெடு அமர்வின் மூலம் கட்டடங்கள் இல்லாத பள்ளிகள் மற்றும் பாடங்கள் பற்றி எதிர்கால கல்வி அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்போது இல்லாத ஓர் உலகிற்காக எவ்வாறு பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் மாணவர்கரைள உருவாக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று இல்லாத எதிர்கால உலகிற்காக இன்றைய மாணவர்களை உருவாக்குவது அவசியம் என்று ராயா பிட்ஷஹ்ரி குறிப்பிட்டுள்ளார்.

விரைவாக மாறி வரும் உலகிற்க ஏற்ப உடனயடாக மாறிவிடும் அளவில்" கல்வியின் நிலை இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைவதாக அவர் பேசியுள்ளார்.

ஆரண்யா ஜோஹர்

புது டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கிய பிபிசியின் 100 பெண்கள் (2019) நிகழ்வில் பாலியல் சமத்துவம் என்பது தொடர் போராட்டம். நாம் இதனை நிறுத்த போவதில்லை என்று கவிஞர் ஆரண்யா ஜோஹர் குறிப்பிட்டார்.

பிபிசியின் 100 பெண்கள் (#100women) நிகழ்வில், 2030ல் பாலின சமத்துவ பார்வை என்ற தலைப்பில் முதல் பேச்சாளராக 21 வயதான ஆரண்யா ஜோஹர் பேசினார்.

எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமான கல்வி வசதி, தங்களுக்கான முடிவுகளை பெண்களே எடுக்கும் நிலை, சமூக மாற்றம் மற்றும் வாழும் வழிமுறையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் நியாயமான தலைமை ஆகியவை பெண்களுக்கு இருக்கும் எதிர்கால உலகம் அமைய வேண்டுமென அவர் பேசினார்.

நீண்ட காலமாக ஆண்கள் அனுபவித்து வருகின்ற உரிமையை பெண்களும் பெற வேண்டிய தருணம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"ஒவ்வொரு முறையும் உரிமைக்காக ஒரு பெண் குரல் கொடுக்கும்போதும், அதற்கு எதிரான குரல்களை நீங்கள் கேட்டு கொண்டே இருக்கலாம். ஆனால், காலம் மாறும். எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது" என்று குறிப்பிட்டார் ஆரண்யா.

"ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால் ஒரு குடும்பமே கல்வி பெறுகிறது என்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால், ஒரு தலைமுறையே கல்வி பெறுகிறது.

கல்வி மற்றும் சமத்துவத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று அவர் குறிப்பிட்டார், “ஒரு பெண் கல்வியறிவு பெறும் ஒவ்வொரு தருணமும் உலகம் பயனடைகிறது” என்கிறார் ஆரண்யா ஜோஹர்,

பாலின சமத்துவம், மன ஆரோக்கியம் மற்றும் உடல் நேர்மறை செயல்பாடு பற்றிய விஷயங்களை வெளிப்படுத்த ஆரண்யா கவிதை பாடுதலை ஓர் ஊடகமாகப் பயன்படுத்துகிறார்.

`அழகிற்கான பிரவுன் கேர்ள்ஸ் வழிகாட்டி' என்ற அவருடைய நிகழ்ச்சியை யூடியூப்பில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

'பிபிசி 100 பெண்கள்' திட்டம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள 100 செல்வாக்கு மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களது கதைகளை வெளியிடுகிறோம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :