ஷி ஜின்பிங் : "இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" - தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோதி

சீனா

பட மூலாதாரம், NARENDRA MODI / TWITTER

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடத்தவுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்தடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சரியாக 2:10 மணிக்கு விமானத்தில் இறங்கிய ஷி ஜின்-பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் தமிழில் ட்வீட் செய்துள்ள பிரதமர் மோதி, "அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே! இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்

சீன அதிபரை வரவேற்கும் வகையில் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

விமான நிலையத்தில் இருந்து நேராக ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலுக்கு செல்கிறார் சீன அதிபர். அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு புறப்படுவார்.

அவருக்கு இரவு உணவாக தமிழ் உணவு வகைகள் வழங்கப்படும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தக்காளி ரசம், அறைத்துவிட்ட சாம்பார், கடலை குருமா, கவனியரிசி அல்வா ஆகியவை வழங்கப்படும்.

முன்னதாக காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பிற்காக நரேந்திர மோதி திருவிடைந்தைக்கு ஹெலிபேட் மூலம் வந்து சேர்ந்தார்.

மோதி

பட மூலாதாரம், PIB

இது குறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்."

மேலும் பிரதமர் நரேந்திர மோதியின் ட்விட்டர் பக்கத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சீன அதிபருக்கு எதிராக கோஷம்; ஐந்து திபெத்தியர்கள் கைது

இதற்கிடையே, இரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தங்கவிருக்கும் ஹோட்டலுக்கு முன்பாக போராட்டம் நடத்த முயன்ற, திபத்தியர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை சென்னை நகரக் காவல்துறைக் கைது செய்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். பிரதமர் மோதி, கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் தங்கும் நிலையில், சீன அதிபர் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் தங்குகிறார்.

இதனால், அந்த ஹோட்டலைச் சுற்றிக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று காலை சுமார் பத்தரை மணியளவில் ஹோட்டல் முன்பாக வந்த ஐந்து திபத்தியர்கள், சீன அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களில் ஒருவர் தங்கள் கையில் திபெத்தியக் கொடியை வைத்திருந்தார்.

சீன அதிபருக்கு எதிராக கோஷம்; திபெத்தியர்கள் கைது

இவர்கள் ஐந்து பேரும் உடனடியாக காவல்துறையால் தடுத்து, வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இதுதவிர, பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஆறு திபத்தியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

சீன அதிபரின் வருகையை ஒட்டி கடந்த சில நாட்களில் போராட்டம் செய்ய முயன்றதாக சுமார் 20 திபெத்தியர்கள் சென்னையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நிகழ்வுகள் என்னென்ன?

வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் சென்னை வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், மாலை ஐந்து மணியளவில் மாமல்லபுரத்தில் உள்ள கலாசாரச் சின்னங்களை பிரதமருடன் இணைந்து பார்வையிடுகிறார்.

மோடி வரவேற்பு

பட மூலாதாரம், ARUN SANKAR

திங்கட்கிழமைவரை, கடும்கட்டுப்பாட்டுடன் இந்த இடங்களைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமையிலிருந்து இந்த மூன்று இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு கடற்கரைக் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு இரவு விருந்தும் அங்கே நடக்கும். இதில்தான் தமிழக அரசைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளக்கூடும்.

ட்ரண்டிங்கில் gobackmodi

இன்று (வெள்ளிக்கிழமை) சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் சூழலில், மீண்டும் #gobackmodi இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

சீன அதிபரின் வருகையால் gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டாகி வருகிறது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழி பதிவை ஹாஷ்டேகில் பயன்படுத்தி வருகின்றனர்.

Gobackmodi என்பது நேற்று (வியாழக்கிழமை) இரவிலிருந்து இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது இரண்டு மணி நேரமாக tnwelcomesmodi என்பதும் ட்ரண்டாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :