வன்னியர் இட ஒதுக்கீடு: திமுக - பாமக மோதல் - நடப்பது என்ன?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், M.K.Stalin/Facebook

அடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், வன்னியர் இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமிக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் தி.மு.க. அறிவித்ததையடுத்து பா.ம.கவும் தி.மு.கவும் அறிக்கை யுத்தத்தில் இறங்கியுள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தவுடன், 1980களின் இறுதியில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும் சி.என். அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி தலைமையிலான அரசுகளில் அமைச்சராகப் பணியாற்றிய ஏ. கோவிந்தசாமிக்கும் மணி மண்டபம் அமைக்கப்படுமெனக் கூறியிருந்தார்.

உள் ஒதுக்கீடு- ஸ்டாலின் வாக்குறுதி

மேலும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தி.மு.க. ஆட்சியின்போது அளிக்கப்பட்ட பதவிகள், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு செய்யப்பட்ட நிதியுதவி, பென்ஷன், வன்னியர் நல வாரியம் அமைக்கப்பட்டது ஆகியவற்றையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், தி.மு.க. ஆட்சியமைத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

ராமதாஸ் அறிக்கை கூறுவது என்ன?

ஆனால், மு.க. ஸ்டாலினின் இந்த வாக்குறுதிகளை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தேர்தலின்போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா என்று கேள்வியெழுப்பிய ராமதாஸ், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும், மு. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவருடன் சண்டையிட்டே வன்னியர்களுக்கான உரிமைகளைப் பெற வேண்டியிருந்ததாகவும் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெற்றிருந்தபோது, வன்னியர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் தரப்படவில்லையென்றும் தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்களிலும் போதுமான பிரதிநிதித்துவம் வன்னியர்களுக்கு அளிக்கப்படவில்லையென்றும் கூறியிருந்தார்.

டாக்டர் ராமதாஸ்

பட மூலாதாரம், Dr.S.Ramadoss/Facebook

படக்குறிப்பு, டாக்டர் ராமதாஸ்

மேலும் ஏ. கோவிந்தசாமியின் மகன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பியபோது அவருக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் என்றும் கேள்வியெழுப்பியிருந்தார் ராமதாஸ். மு.க. ஸ்டாலின் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவு என்றும் அவர் கூறியிருந்தார்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை

இதையடுத்து தி.மு.கவின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ராமதாஸை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கியதற்கு ராமதாஸ் ஏன் கோபப்படவேண்டுமென்று கேள்வியெழுப்பியுள்ள பன்னீர்செல்வம், தன்னை ஜெயிலில் அடைத்த, உடல்நிலை குன்றிப்போன நிலையிலும் காடு வெட்டி குருவை அங்கும் இங்கும் இங்கும் இழுத்தடித்த அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காகவா என்று கேட்டிருக்கிறார்.

பா.ம.க. நிர்வாகிகள் பலர் மீது பொய் வழக்குப் போட்ட அ.தி.மு.கவிற்கு ராமதாஸ் சாமரம் வீசுவதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் தோற்கடிக்கப்பட்ட போதே பா.ம.கவின் பொருந்தாக் கூட்டணிக்கு வன்னியர் சமுதாயம் தக்க பதிலடி தந்துவிட்டது என்றும் இன்னொரு பதிலடி விக்ரவாண்டி தொகுதியில் கிடைக்கப் போகிறதென்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, இரு தொகுதிகளிலுமே அக்கட்சியே போட்டியிடுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் நேற்றைய அறிக்கை, விக்கிரவாண்டித் தொகுதியை மனதில் வைத்தே வெளியிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த ராதாமணி இங்கு 63,203 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த அ.தி.மு.கவின் ஆர். வேலு, 56,622 வாக்குகளைப் பெற்றார். மூன்றாவது இடத்தைப் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி 41,119 வாக்குகளைப் பெற்றார். தற்போது அ.தி.மு.க. கூட்டணியிலேயே பாட்டாளி மக்கள் கட்சியும் இருப்பதால், போட்டி கடுமையானதாக இருக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :