ராதாபுரம் தொகுதி வாக்குகள் இன்று மறு எண்ணிக்கை - முடிவு மாறுமா?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: ராதாபுரம் தொகுதி வாக்குகள் இன்று மறு எண்ணிக்கை - முடிவு மாறுமா?
ராதாபுரம் தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் எண்ணப்படவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தபோது, நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பாவு தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 1-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'ராதாபுரம் தொகுதியில் பதிவான 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை. 19, 20, 21 ஆகிய சுற்றுகள் எண்ணும்போது எங்களை அனுமதிக்கவில்லை என்று மனுதாரர் அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.
எனவே, இந்த 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளையும் மீண்டும் எண்ண வேண்டும். 4-ந்தேதி (இன்று) நடைபெறும் இந்த மறு ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிட ஒரு பதிவாளரை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமிக்கவேண்டும்.
இதற்காக நெல்லை மாவட்டத்தில் இருந்து தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்றுகள் பதிவான வாக்கு எந்திரங்களை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாக்கு எண்ணிக்கைக்கு உதவி செய்ய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகுந்த அதிகாரிகளை நியமிக்கவேண்டும்'" என்று உத்தரவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "கீழடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்"

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வுப் பணிகளை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கீழடி 4-ம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் வசிப்போரும் அகழாய்வைக் காண கீழடிக்கு வருகின்றனர்.
நேற்று காந்தி ஜெயந்தியை யொட்டி விடுமுறை நாள் என்பதால் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கீழடிக்கு வந்தனர். அகழாய்வு நடந்த பகுதியை காண்பதற்கு தினமும் காலை 10 முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி: "உயர்த்தப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி"
தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை உயர்த்துவது குறித்து நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை ரூ.2.50 கோடியாக இருந்த தொகுதி மேபாட்டு நிதி தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தப்படுகிறது" என்று அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












