ஏன் இந்த தமிழக கிராமத்தில் மது, வரதட்சணை கிடையாது?

ஏன் இந்த கிராமத்தில் மது வரதட்சணை கிடையாது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக மது அருந்தாமல், வரதட்சணை வாங்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலவிளாம்பட்டி. இக்கிராமத்தில் மூப்பர் சமுதாயத்தை சேர்ந்த 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முன்னோர்கள் இக்கிராமத்திற்கு 13ம் நூற்றாண்டில் குடியேற திருச்சி கொள்ளிடம் பகுதியிலிருந்து (வடநாடு) வந்தவர்கள், அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் எப்போதும் மது அருந்துவதில்லை என சத்திய வாக்கு கொடுத்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

இக்கிராமத்தில் போதை பொருள்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என சத்தியம் செய்ததை நினைவு கூறும் வகையில் ஊர் முகப்பில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. மீறிச் செயல்படுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.

மேலும், இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கும் போது, பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை வழங்குவதில்லை. இவர்களும் வெளியூர் பெண்களை திருமணம் செய்யும் போது வரதட்சணை வாங்குவதில்லை என்ற கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். அதே போல், குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.

விவசாயமே பிரதான தொழில்

ஏன் இந்த கிராமத்தில் மது வரதட்சணை கிடையாது?

ஆலவிளாம்பட்டி கிராமத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியாக உள்ள இக்கிராமத்தில் மழை பெய்தால் மட்டும்மே விவசாயம் செழிக்கும்.வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அவ்வப்போது கிடைக்கும் என்பதால் இவர்கள் வரட்சியை தாங்கி வளர கூடிய பஞ்சு,கேள்விரகு,மல்லி, மிளாகாய் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிள்ளைகளை படிக்க வைப்பது, திருமணம் செய்து கொடுப்பது என வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராமத்தை பொருத்தமாட்டிலும் வெகுவான இளைஞர்கள் வெளி நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.இதனால் கிராமத்தில் படிக்கும் மாணவர்களை தவிர இளைஞர்களை காண முடியவில்லை.

மது போதை என்றால் என்னவென்றே தெரியாது!

ஏன் இந்த கிராமத்தில் மது வரதட்சணை கிடையாது?

"கொட்டகுடி ஊராட்சியில் உள்ள 9 கிராமங்களில் ஆலவிளாம்பட்டி கிராமமும் ஒன்று. எங்களது மூதாதையர் தெய்வங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் வகையில் இங்குள்ள இளைஞர்கள் யாரும் மது அருந்துவது கிடையாது. மது போதை என்றால் என்னவென்று கூட எங்களுக்கு தெரியாது.

மதுப்பழக்கம் இல்லாததால் எங்களது கிராமத்தில் இதுவரை பிரச்சனை என்ற ஒன்று வந்ததே இல்லை.மது பழக்கம் இல்லாததால் எங்களது சட்டை பாக்கெட்டில் வைத்துள்ள ரூபாய் நோட்டுகள் அப்படியே இருக்கிறது. மது பழக்கம் இருந்து இருந்தால் எங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் பணத்தை இழப்பதுடன் வாழ்கையையும் இழந்து இருப்போம்" என்றார் ஆலவிளாம்பட்டி கிராம இளைஞர் பிரேம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இது குறித்து வெளியூரில் இருந்து ஆலவிளாம்பட்டி கிராமத்திற்கு திருமணமாகி வந்த சுபா பிபிசி தமிழிடம் பேசுகையில்,வரதட்சணை போன்ற தொந்தரவுகள் இந்த கிராமத்தில் இல்லை.அதே போல் இக்கிராமத்து இளைஞர்களுக்கு மது பழக்கம் கிடையாது. இதன் காரணமாக இக்கிராம இளைஞர்களுக்கு வெளியூரைச் சேர்ந்த பலர் பெண் கொடுக்க போட்டி போட்டு கொண்டு முன் வருகிறார்கள்.

எனது கணவர் வீட்டில் இருந்து எனது பெற்றோரிடம் வரதட்சணை என்று கேட்கவில்லை ஆனால் எனது பெற்றோர் அவர்கள் எனக்காக சேர்த்து வைத்த நகைகளை மட்டுமே போட்டு திருமணம் செய்து கொடுத்தனர் என்றார்.

வெளிநாட்டில் மது குடித்தால்?

அழகு
படக்குறிப்பு, அழகு

இந்த கிராமத்தில் மது குடிக்க கூடாது, சூதாட கூடாது, வரதட்சணை வாங்க கூடாது என்பது எங்கள் கிராமத்தின் கட்டுபாடு அதை மீறி மது அருந்தினால் அவருக்கு அரை மொட்டை அடித்து அபராதம் விதிக்கபடுவதுடன் அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊர் விசேஷங்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் ஊருக்கு தெரியாமல் அங்கு மது அருந்தினால் அவர்களுடைய ஒரு கால், ஒரு கை வேலை செய்யாமல் போய்விடும். பின்னர் அவர்களை வெளி நாடுகளில் இருந்து அழைத்து வந்து பின்னர் அவருக்கு தண்டனை வழங்கப்படும். இது போல் இரண்டு, மூன்று முறை நடந்துள்ளது.

மேலும் குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கேமராக்களை ஊர் மக்கள் சொந்த செலவில் பொருத்தியுள்ளோம். அந்த கேமராக்கள் மூலம் சமீபத்தில் பெண் கடத்தலை தடுத்தோம். மதகுபட்டி-கல்லல் சாலையில் விபத்து ஏற்படுத்திய வாகனங்கள் மற்றும் குற்றங்களைக் கண்டுபிடிக்க இந்த கேமராக்கள் போலீஸாருக்கு உதவியாக உள்ளது என பிபிசி தமிழிடம் பேசிய ஊர் தலைவர் அழகு தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அக்கிராமத்து பெண் லட்சுமி, எங்கள் ஊர் ஆண்கள் மது குடிக்காமல் இருப்பது எங்கள் கிராம பெண்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆண்கள் மது குடிப்பதால் பெண்களின் வாழ்கை மிகவும் பாதிக்கபடுகிறது.ஆனால் எங்கள் ஊரில் அந்த பிரச்சனைகள் இல்லை.பக்கத்து ஊர் பெண்கள் எல்லாம் எங்கள் கிராமத்தை பார்த்து பெறாமைபடும் அளவில்தான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறோம் இதே போல் வரும் தலைமுறைகள் மது, வரதட்சணை இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எங்கள் கிராம மக்களின் ஆசை என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :