டிரம்ப் பதவி நீக்க விசாரணை: ஆவேசமடைந்து இழிவான வார்த்தையை பயன்படுத்திய அமெரிக்க அதிபர்

US President Donald Trump speaks about the impeachment inquiry

பட மூலாதாரம், Reuters

இந்த வாரம் தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியுள்ளார்.

தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக ஜனநாயக கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்பாக விசாரித்து வரும் குழுக்கள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன.

இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார்.

ஆனால் இந்த விசாரணை நடப்பதை நியாயப்படுத்தியுள்ள ஜனநாயக கட்சியினர், நிச்சயம் ஒரு நேர்மையான நடைமுறையில் விசாரணை நடைபெறும் என்று நம்பிக்கை வெளிப்படுத்தியிருந்தனர்.

என்ன கூறினார் டிரம்ப்?

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய டிரம்ப், இந்த குற்றச்சாட்டில் டிரம்ப் பழிவாங்கியதாக கூறப்பட்ட முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவரையும் 'முழுமையான ஊழல் பேர்வழிகள்' என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த விசாரணை தொடர்பான புலானய்வு குழு தலைவர் ஆடம் ஸ்கிஃப் மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆடம் ஸ்கிஃப் மற்றும் நான்சி பெலோசி,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஆடம் ஸ்கிஃப் மற்றும் நான்சி பெலோசி,

மிகவும் கீழ்தரமானவர் என்றும், அவமதிப்பு நடத்தையால் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் ஸ்கிஃப் குறித்து டிரம்ப் கூறினார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் அளித்தவரின் வார்த்தைகளை ஏற்று ஸ்கிஃப் இந்த விசாரணை அறிக்கையை தயாரித்ததாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.

டிரம்ப் மீது விசாரணை ஏன்?

அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.

இவர்கள் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை, ஆனால் அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அழைத்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியின் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் 'இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் மீது விசாரணை ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்துள்ளார்.

அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

கடந்த ஜுலையில் ஆப்ரிக்க - அமெரிக்க வழக்கறிஞர் குறித்து டிரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று, ஒருவரை இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம்சாட்டினார்.

ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலிஜா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார்.

கறுப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் மிகுந்த அழுக்கான ஒரு பகுதி என டிரம்ப் கூறினார்.

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை `கொடுமைப்படுத்துபவர்` என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க மக்கள் கணக்கெடுப்புப்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமான கறுப்பின மக்கள் வாழும் மாவட்டம் குறித்து டிரம்ப் பேசியது இன ரீதியிலான தாக்குதல் என சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம் சுமத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :