'இனி இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை' - பிரதமர் மோதி பெருமிதம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்) - 'இனி இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை' - பிரதமர் மோதி பெருமிதம்

60 மாதங்களில் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளை கட்டி தந்ததை கண்டு, உலக நாடுகள் வியப்படைந்துள்ளன. இதற்காக இன்று உலக நாடுகள் அனைத்தும் நம்மை பாராட்டி, விருது வழங்கி கவுரவிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சபர்மதியில், 20 ஆயிரம் கிராமத்தலைவர்கள் மத்தியில் 'தூய்மை இந்தியா விழா' நேற்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோதி பேசியதாவது:

"திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்பது, தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு படி மட்டுமே. கழிப்பறை வசதி இல்லாத மக்களுக்கு விரைவில் கழிப்பறை வசதி செய்து தரப்படும். நீர் பாதுகாப்பும் முக்கியமானது. நீர் சேமிப்புக்கு ரூ.3.5 லட்சம் கோடி அரசு செலவிடும்.

சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, இவை அனைத்தும் காந்திக்கு மிகவும் பிடித்தவை.

இவைகள் அனைத்துக்குள் பிளாஸ்டிக் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே 2022ம் ஆண்டுக்குள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழித்த நாடு என்ற இலக்கை நாம் அடைய வேண்டும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "விமர்சிப்பதை அடக்கினால் தவறுகள்தான் இன்னும் அதிகமாகும்"

அரசின் கொள்கை தவறுகளை விமர்சிப்பதை அடக்கினால், அந்த தவறுகள் இன்னும் அதிகமாகும். ஆட்சியாளர்கள் விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"ஒவ்வொரு விமர்சனத்துக்கும் அரசு நிர்வாகிகளிடம் இருந்து தொலைபேசி அழைப்புவந்து விமர்சனத்தை திரும்பப்பெறுங்கள் என்று வந்தால், அல்லது ஆளும் கட்சியின் சமூகவலைதள வசைப்படை, போன்றவை விமர்சனத்தை அடக்கி ஒடுக்கவே செய்யும்.

அனைத்தும் இதமான சூழலில் இருக்கிறது, ஆட்சி நடக்கிறது என்று அரசு நம்ப வைக்கிறது, ஆனால், நீண்டகாலத்துக்கு கடினமான உண்மைகளை மறைத்துவிட முடியாது.

சிலநேரங்களில் சந்தேகமில்லாமல் சில விமர்சனங்கள் அதாவது பத்திரிகையில் தவறான தகவல்கள் அடிப்படையில், தனிப்பட்ட ரீதியான தாக்குதல்கள் வரக்கூடும். நான் பணியில் இருந்தபோது எனக்கும் கூட அந்த அனுபவம் இருந்திருக்கிறது. வெளிப்படையாக வரும் விமர்னங்களை அரசு அடக்குவது என்பது, அவர்களே அவர்களுக்கு செய்யும் மோசமான சேவையாகும்" என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்க வீரராக சாதித்து காட்டிய ரோகித் சர்மா - டைம்ஸ் ஆஃப் இந்தியா

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே புதன்கிழமை தொடங்கிய முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பத்தில் நிதனமாக விளையாடிய போதும், பின்னர் நன்கு அடித்தாடினர். தொடக்க வீரர்களை பிரிக்க தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை இந்தியா எடுத்திருந்த சூழலில், மழை குறுக்கிட்டது. மாலை வரை மழை தொடர்ந்ததால் ஆட்டம் அதற்கு பிரகு நடக்கவில்லை.

மாயங்க் அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் உள்ளார். மறுமுனையில் விளையாடிய ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் உதவியுடன் 174 பந்துகளில் 115 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தொடக்க வீரராக களமிறங்கி முதல்முறையாக ரோகித் சதமடித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே மூன்று கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது. முன்னதாக இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 டி20 போட்டி தொடரில் 1-1 என சமன் ஆனது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :