You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூர்தர்ஷன் அதிகாரி இடைநீக்கம்: நரேந்திர மோதியின் உரையை ஒளிபரப்பாததுதான் காரணமா?
அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் சென்னையில் உள்ள நிகழ்ச்சிப் பிரிவின் துணை இயக்குநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சென்னை நிகழ்ச்சியை நேரலை செய்யத் தவறியதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் கேந்திராவில் நிகழ்ச்சிப் பிரிவின் துணை இயக்குனராக இருப்பவர் ஆர். வசுமதி. அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வசுமதி தற்போது இடைநீக்கம் செய்யப்படுவதாக பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சஷி சேகர் வேம்பதி வெளியிட்டுள்ள உத்தரவு தெரிவிக்கிறது.
வசுமதி மீது என்ன காரணத்திற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அந்த உத்தரவில் ஏதும் கூறப்படவில்லை. 1965ஆம் ஆண்டின் மத்திய குடிமைப் பணிகள் விதியின் கீழ் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக மட்டும் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சென்னையில் மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவற்றில் பிரதமர் ஆற்றிய உரைகள் தூர்தர்ஷனின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புச் செய்யப்பட்டன.
தூர்தர்ஷனின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகையில் இரண்டு நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட்டன. ஆனால், சென்னை ஐஐடியில் நடந்த 'சிங்கப்பூர் - இந்தியா ஹாக்கத்தான் 2019' நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது பொதிகையில் நேரலை செய்யப்பட்டவில்லை. வழக்கமான செய்தித் தொகுப்பில் மட்டும் இந்த உரை இடம்பெற்றது.
இது தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதியே பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்குப் பிறகு நிகழ்ச்சிப் பிரிவுக்குப் பொறுப்பான துணை இயக்குனர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமரின் அந்தக் குறிப்பிட்ட உரையை நேரலை செய்யச்சொல்லி உத்தரவிடப்பட்ட பிறகும் அது ஒளிபரப்பாகவில்லையா, நேரலை செய்யப்படாததற்குக் காரணம் என்ன என்பது குறித்து விளக்கங்கள் கோரப்பட்டுவருகின்றன.
இது தொடர்பாக சென்னை தூர்தர்ஷன் பிரிவில் யாரும் பேச முன்வரவில்லை. ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான வசுமதி தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சஷி சேகர் வேம்பதியின் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்