You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால் சுட்டுக்கொல்லப்பட்ட வரிக்குதிரை மற்றும் பிற செய்திகள்
சர்க்கஸ் குழுவிலிருந்து தப்பித்து நகர சாலைகளில் சுதந்திரமாக சுற்றிய வரிக்குதிரையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டதால் அதை காவல்துறையினரே சுட்டுக்கொன்ற சம்பவம் ஜெர்மனியில் நடந்தேறியுள்ளது.
ஜெர்மனியின் வடக்குப்பகுதியிலுள்ள ரோஸ்டோக் நகரத்தின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிந்த வரிக்குதிரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், கார்கள் சேதமாகி விபத்துகளும் ஏற்பட்டதால் அதை சுட்டுக்கொன்றதாக அந்நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று, அதே சர்க்கஸிலிருந்து தப்பியோடிய மற்றொரு வரிக்குதிரை உயிருடன் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிக்குதிரை மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
இந்த இரண்டு வரிக்குதிரைகளும் சர்கஸிலிருந்து எப்படி தப்பித்தன என்பதில் தெளிவில்லை.
"சாலையின் நேரெதிர் திசையில் வரிக்குதிரை சென்றதால் உடனடியாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின்னொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக மூடும் நிலை ஏற்பட்டது" என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வரிக்குதிரையை உயிருடன் பிடிக்காமல் சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழர்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர்.
25 வயதாகும் செனூரனின் குடும்பம் தமிழகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிவிட்டது.
விரிவாக படிக்க: செனூரன் முத்துசாமி: இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழர்
ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம்
ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்டு பணம் யாருக்கென லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 350 கோடி இந்திய ரூபாயாகும்.
எழுபது ஆண்டு காலமாக நிலவிய இந்தப் பிரச்சனையில், லண்டன் நீதிமன்றம் நிஜாமின் வாரிசுகளுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
தருமபுரி நதியை மீட்கும் உத்தரப்பிரதேசப் பெண் புவிதம் மீனாட்சி
உத்தரப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட மீனாட்சி ஒரு காந்தியவாதி. மாற்று கட்டட கலையின் முன்னோடிகளில் ஒருவரான லாரி பேக்கரின் மாணவி.
மும்பையில் கட்டடக் கலை பயின்ற இவருக்கு அங்கு நிலவிய நுகர்வு கலாசாரம் சலிப்பு தட்டியது. அந்த மாநகருடன் ஒட்ட முடியாமல் தவித்த இவர் தமிழகத்திற்கு பயணமாகிறார்.
இந்தியா கிராமங்களின் தொகுப்பு. நாட்டின் வளர்ச்சி என்பது கிராமங்களின் மேம்பாட்டில் இருக்கிறது என்ற காந்தியின் கருத்தியலை முழுமையாக ஏற்று தருமபுரிக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறார்.
விரிவாக படிக்க: உத்தரப் பிரதேச பெண் தருமபுரி நதியை மீட்கும் கதை
சாயிரா நரசிம்மா ரெட்டி - சினிமா விமர்சனம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இருந்த உய்யலவாடாவைச் சேர்ந்த பாளையக்காரரின் மகனான நரசிம்ம ரெட்டியின் கதை.
1840களின் பிற்பகுதியில் விவசாயிகளை திரட்டி அவர் நடத்திய புரட்சியின் கதைதான் சாயிரா நரசிம்மா ரெட்டி. வரலாற்றுக் கதையை சினிமாவுக்காக ரொம்பவே மாற்றி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
உய்யலவாடாவின் பாளையக்காரர் நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி). அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி விவசாய வரி வசூல் முறையில் சில மாற்றங்களை செய்கிறது. இதனை விவசாயிகளும் பல பாளையக்காரர்களும் எதிர்க்கிறார்கள்.
விரிவாக படிக்க: சாயிரா நரசிம்மா ரெட்டி - சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்