வங்கி சேமிப்பு: கூட்டுறவு வங்கியில் பணம் வைத்திருந்தால் பயப்பட வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜக்தீப் சீமா
- பதவி, பிபிசி
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கை, அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய வங்கித்துறையிலும் சலசலப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்களது வங்கி கணக்கிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
ரிசர்ச் வங்கியின் இந்த உத்தரவை அடுத்து, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு நாடு முழுவதும் மொத்தமுள்ள 137 கிளைகளிலும் அதிகளவில் குவிந்தனர்.
இந்நிலையில், பிஎம்சி வங்கிக்கு நேர்ந்துள்ள இந்த மோசமான சிக்கலுக்கான காரணம் என்ன? அடுத்து நடக்கப்போவது என்ன? உள்ளிட்ட மக்களிடையே பரவலாக எழுந்துள்ள கேள்விகளுக்கான பதில்களை நிதி ஆலோசகர் விவேக் கவுலிடம் முன்வைத்தோம்.

பட மூலாதாரம், Getty Images
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் ஒரு கூட்டுறவு வங்கி கொண்டுவரப்பட்டால் வாடிக்கையாளரின் பணத்திற்கு என்னவாகும்?
பிஎம்சி வங்கியில் ஏற்பட்டுள்ள சிக்கலை களைவதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்கு அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். பிஎம்சி வங்கியின் நிலை இன்னும் மோசமடையும் பட்சத்தில், வைப்பு நிதி காப்பீட்டின்படி, வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிலிருந்து அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெற முடியும்.
பிஎம்சி வங்கிக்கு எழுந்துள்ள இந்த மோசமான நிலைக்கு காரணம் என்ன?
"பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில் கூட்டுறவு வங்கிகள் குறைந்த வெளிப்படைத்தன்மையையே கொண்டுள்ளன. மிகவும் சிக்கலான மனை விற்பனை, கட்டுமானத் தொழில் (ரியல் எஸ்டேட்) நிறுவனங்களுக்கு பிஎம்சி வழங்கிய கடன் நிலுவையில் உள்ளதன் விளைவாகவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
வாராக் கடன்கள் இந்திய வங்கித்துறைக்கு எவ்வளவு அச்சுறுத்தலாக உள்ளது?
வாராக் கடன்கள் கூட்டுறவு வங்கிகளை காட்டிலும், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்களில் கிட்டத்தட்ட 15% அளவுக்கு வாரகடன்களாக உள்ளன.
வங்கிகளின் செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் குறிப்பிட்ட இடைவேளையில் பெரியளவிலான தொகையை செலவிடுவது, நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கூட்டுறவு வங்கிகளுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா?
போதுமான அளவு கட்டுப்பாடுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவே கருதுகிறேன். நாடு முழுவதும் பல்கி பெருகியுள்ள கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கிக்கு மிகவும் கடினமான பணியாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளை கட்டுப்படுத்துவதிலேயே பெருமளவு கவனம் செலுத்தும் ரிசர்வ் வங்கியால், கூட்டுறவு வங்கிகள் ஒப்பீட்டளவில் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதன் விளைவே இது.
இந்தியாவின் ஐந்து பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான பிஎம்சி வங்கியின் நிலைமை சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் சிக்கலான வங்கித் துறையின் செயல்பாடு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் சுமார் 1,500 சிறு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. அவை பல சிறு வணிகங்களுக்கும் சமூகங்களுக்கும் முக்கியமானவை.
பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் அந்தந்த மாநில அரசுகளால் மேலாண்மை செய்யப்பட்டு வரும் நிலையில், அதில் ரிசர்வ் வங்கியின் பங்கும் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், ஒரு கூட்டுறவு வங்கியின் செயல்பாடு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் வரை, அதன் மீது ரிசர்வ் வங்கியால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால், ரிசர்ச் வங்கி கூட்டுறவு வங்கிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தனது பரிந்துரைகளை மாநில அரசுகளிடம் முன்வைக்க முடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












