You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ப. சிதம்பரம் பிறந்தநாளுக்கு நரேந்திர மோதி வாழ்த்துவது இதுதான் முதல் முறையா? - உண்மை என்ன?
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோதி பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார்.
வாழ்த்தும், பதிலும்
உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தொடங்கும் கடிதத்தில், "எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று மோதி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வாழ்த்து மடலானது அவர் வீட்டுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த வாழ்த்து மடலுக்கு பதிலளித்த சிதம்பரம் குடும்பத்தினர், அவர் சார்பில் ட்விட்டரில் குறிப்பிட்டு இருப்பதாவது, "என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோதி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி.
பிரதமர் மோதியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத்துறைகள் அதற்கு தடையாக இருக்கின்றனவே?
தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோதியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளனர்.
சிறையில் இருக்கும் சிதம்பரத்தை கிண்டல் செய்யும் நோக்கத்துடன்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என சமூக ஊடகத்தில் சிலர் கிண்டலாக பதிவிட்டு இருந்தனர். இது எந்தளவுக்கு உண்மை?
சரி... ப.சிதம்பரத்திற்கு இதற்கு முன்பு பிறந்தநாள் கூறி இருக்கிறாரா பிரதமர் மோதி?
முதலில் பிரதமரின் ட்விட்டர் கணக்குகளை ஆராய்வோம்.
ட்விட்டர் கணக்கு
செப்டம்பர் 16ம் தேதி ப.சிதம்பரத்தின் பிறந்த நாள்.
நரேந்திர மோதியின் பக்கங்களை ஆய்வு செய்ததில் 2018ஆம் ஆண்டு அவர் ப.சிதம்பரத்திற்கு எந்த வாழ்த்தும் கூறவில்லை எனத் தெரிகிறது.
"ஸ்வஷாத்த ஹி சேவா" இயக்கத்தில் குப்பைகளை அப்புறப்படுத்திய என்.சி.சி மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். ஆனால் ப. சிதம்பரத்திற்கு வாழ்த்து சொல்லவில்லை.
அது போல 2017 ஆம் ஆண்டு, இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார் மோதி. இது குறித்த பதிவுகள்தான் அவர் பக்கத்தில் உள்ளன.
2016ஆம் ஆண்டு, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி குறித்த பதிவுகளைப் பகிர்ந்து இருக்கிறார். இந்த ஆண்டும் சிதம்பரத்திற்கு எந்த வாழ்த்துகளும் இல்லை.
2015ம் ஆண்டு சாய்னாவிடம் பேட்மிண்டன் ராக்கெட்டை பரிசாக பெற்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
முதல்முறை அல்ல
சரி ட்விட்டரில்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த ஆண்டு அனுப்பியது போல கடிதம் மூலமாக இதற்கு முன்பு வாழ்த்து தெரிவித்து இருக்கிறாரா என்று அறிய சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்தை தொடர்பு கொண்டோம்.
கார்த்தி சிதம்பரம், "இவ்வாறு கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. கடந்தாண்டும் இவ்வாறாக வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்" என குறிப்பிட்டார்.
தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்? - விடை கிடைக்குமா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்