அமெரிக்க விமான கடத்தல்: தவறாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை - என்ன நடந்தது? மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க விமான கடத்தல்: தவறாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை - என்ன நடந்தது?

அமெரிக்க விமான கடத்தல் ஒன்றில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிரீஸில் கைது செய்யப்பட்ட லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். பெயர் குழப்பத்தின் காரணமாக அவர் தவறுதலாகக் கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

டி.டபுள்யூ.ஏ 847 விமானமானது 1985ஆம் ஆண்டு ஏதென்ஸிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கடத்தப்பட்டது. இஸ்ரேலிய சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளை விடுவிக்கக் கோரி விமானத்தில் இருந்த சிலர் கோரிக்கை வைத்தனர்.

விமானத்திலிருந்த பயணிகள் சிலரையும் தாக்கினர். இதில் அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். இந்த கடத்தலில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை 65 வயதுடைய முகமது சலே கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவருக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததை அடுத்து முகமது விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் நிலநடுக்கம்: 22 பேர் பலி, வீடுகள், சாலைகள் சேதம் - டெல்லியிலும் அதிர்வு

கிழக்கு பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை 5.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே அமைந்திருந்தது.

இறந்தவர்கள் எண்ணிக்கையை மிர்பூர் டி.ஐ.ஜி. குல்ஃப்ராஜ் உறுதிப்படுத்தினார்.

நரேந்திர மோதி இந்தியாவின் தந்தை: டிரம்ப் புகழாரம்

ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோதி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்புக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டினர்.

இலங்கையில் சர்ச்சைக்குரிய டிக்கிரி யானை இறந்தது

அண்மையில் அதிகமாக பேசப்பட்ட, சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த டிக்கிரி யானை இறந்துள்ளது.

இந்த யானை இன்று செவ்வாய்க்கிழமை மாலை இறந்ததாக யானையின் உரிமையாளர் பி.பி.சி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளது.

சசி தரூர் பகிர்ந்த நேரு - இந்திரா காந்தி புகைப்படத்தின் உண்மை என்ன? #BBCFactCheck

ஜவஹர்லால் நேருவையும், இந்திரா காந்தியையும் பெருங்கூட்டம் சூழந்து நின்று பார்க்கும் புகைப்படம் ஒன்றை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் டிவிட்டரில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் 1954ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது எடுத்த புகைப்படம் என்ற தகவலோடு தரூர் இந்த புகைப்படத்தை திங்கள்கிழமை இரவு டிவிட்டரில் பகிர்ந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :