You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் நிலநடுக்கம்: 22 பேர் பலி, வீடுகள், சாலைகள் சேதம் - டெல்லியிலும் அதிர்வு
கிழக்கு பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை 5.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே அமைந்திருந்தது.
இறந்தவர்கள் எண்ணிக்கையை மிர்பூர் டி.ஐ.ஜி. குல்ஃப்ராஜ் உறுதிப்படுத்தினார்.
"இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழமுள்ளது. மிர்பூர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது" என பாகிஸ்தான் முதன்மை வானிலை வானிலை அலுவலர் முகம்மது ஹனீஃப் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம், மங்களா, டினா, லாகூர், காரியன், குஜ்ஜர் கான், குஜ்ராட், ஹஃபிசாபாத், லாலா மூசா மற்றும் மிர்பூர், முஜாஃபராபாத், காஷ்மீரின் பல இடங்கள், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. பாலங்கள் சேதமடைந்துள்ளன.
மாலை 4.01 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் சண்டிகரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"மாலை 4.43 மணி அளவில் 3.4 அளவில் நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வு நிகழ்ந்தது என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் லேசான, மிதமான பல அதிர்வுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும்" முகம்மது ஹனீஃப் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜீலம் நதிக் கால்வாயில் பிளவு - கிராமங்களில் வெள்ளம்
பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் ஜாட்லான் என்ற இடத்தில் இரண்டு பாலங்கள் இதில் சேதமடைந்துள்ளன. இதே ஊரில் கட்டட இடிபாடுகளில் குறைந்தது மூன்று பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து நதியின் துணை நதிகளில் ஒன்றான ஜீலம் நதிக் கால்வாயில் ஏற்பட்ட பிளவு காரணமாக அருகில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
கோரிசான், ஜாட்லான், பிம்பர் ஆகிய பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிபிசி செய்தியாளருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மிர்பூருக்கு செல்லும் சாலை பல இடங்களில் பிளந்துள்ளது. மிர்பூரில் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிக் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன. சில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தின் முழுப் பாதிப்புகளும் உடனடியாகத் தெரியவில்லை.
இந்தப் பகுதியில் 2005ல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பல்லாயிரக் கணக்கானோர் இறந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்