You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘’நரேந்திர மோதியின் பேச்சு ஆக்ரோஷமாக இருந்தது’’ - டிரம்ப்; காஷ்மீர் குறித்து இம்ரான் கான் கூறியது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் திங்கள்கிழமையன்று நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர்.
இந்த இரு தலைவர்களின் சந்திப்புக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.
இதில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், ஞாயிற்றுக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்குத் தரப்பட்ட மிகப்பெரிய வரவேற்பு நிகழ்வாக 'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50,000 பேருக்கும் மேல் திரண்டிருந்தனர்.
''ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சு மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அவர் அவ்வாறு பேசப்போகிறார் என்பது எனக்குத் தெரியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் அவரது பேச்சு பிடித்திருந்தது. ஆனால் அவரது உரை ஆக்ரோஷமாக இருந்தது'' என்று டிரம்ப் கூறினார்.
ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில், பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் பேசிய மோதி, '' காஷ்மீரில் அண்மையில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது ஒரு சிலருக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தங்கள் நாட்டை முறையாக நிர்வகிக்கத் தெரியாதவர்கள். தங்கள் பகுதியில் தீவிரவாதத்தைப் பாதுகாத்து வளர்ப்பவர்கள் இவர்கள்'' என்று பேசினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது இரு நாடுகளுக்கும் நன்மையாக அமையும் என்று டிரம்ப் கூறினார்.
தனக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவருடனும் நல்ல உறவு இருப்பதாகவும், மோதி மற்றும் இம்ரான் ஆகிய இருவரும் விருப்பப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தான் உதவத் தயார் என்று டிரம்ப் கூறினார்.
ஆனால், இரு நாடுகளும் விருப்பப்பட்டால் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளில் தான் உதவப்போவதாக டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.
இம்ரான் கான் கூறியது என்ன?
காஷ்மீரில் நிலவும் மனித உரிமை குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு, அங்கு மக்கள் அமைதியாக வாழ, அனைவரும் சமமாக நடத்தப்படுவதே தனது விருப்பம் என்று அமெரிக்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இம்ரான் கான், உலகின் மிகவும் வலிமையான நாட்டின் அதிபராக, பல நாடுகளிலும் நடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வல்லமை டொனால்ட் டிரம்புக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
''உலகின் மிகவும் வலிமையான நாடாக உள்ள அமெரிக்காவுக்குச் சர்வதேச ரீதியாக சில கடமைகள் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய நீங்கள் விருப்பம் தெரிவித்தீர்கள். ஆனால், எங்களுடன் பேச இந்தியா மறுத்து வருகிறது'' என்று இம்ரான் கான் மேலும் கூறினார்.
"காஷ்மீர் பிரச்சனை மிகத் தீவிரமான பிரச்சனையாக உருவெடுக்கும் என்று நான் நினைக்கிறேன். உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாகத் திகழும் அமெரிக்காவால் ஐ.நா.வில் தனது கருத்துக்களைச் சிறப்பாக வலியுறுத்த முடியும். அதனால் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேலும் கூறினார்.
முன்னதாக, ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில், தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிராக ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது எனப் பிரதமர் மோதி பேசினார்.
''அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவம் மற்றும் இந்தியாவில் நடந்த நவம்பர் 26 தாக்குதல் சம்பவம் என்று எதுவாக இருந்தாலும், சதிகாரர்கள் ஒரு நாட்டிலிருந்து வந்துள்ளார்கள்'' என்று நரேந்திர மோதி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- "எனது கனவுகளை களவாடிவிட்டீர்கள்?": பருவநிலை மாற்றம் தொடர்பாக கிரேட்டாவின் உரை
- வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? - சமூக ஊடகத்தில் வகுப்பெடுத்த அமெரிக்க ராணுவ வீரர்
- நிலக்கரி இல்லாத மின்சாரம்; இலக்கை இரட்டிப்பாக்குவதாக ஐநாவில் மோதி அறிவிப்பு
- நீதிமன்ற தீர்ப்பை மீறி இந்து ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம் - பதற்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்