பருவநிலை மாற்றம்: "எனது கனவுகளை களவாடிவிட்டீர்கள்?" - அனைவரும் படிக்க கிரேட்டா தன்பெர்க் ஐ.நா உரை

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்.

சுவீடனை சேர்ந்த பதினாறு வயதான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் தொடர்பாக உறுதியாக கடந்த பல மாதங்களாக போராடி வருகிறார்.

க்ரேடா தன்பெர்க் உரை

நியூயார்க்கில் நடக்கும் பருவநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், "உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்" என்று பருவநிலை மாற்றம் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத அரசியல்வாதிகளைக் குற்றஞ்சாட்டினார்.

அனைவரையும் அசைத்துப் பார்க்கும் உரையில், "இது எல்லாம் தவறு. நான் இங்கு இருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுபக்கத்தில் இருக்கும் ஊரில் அமைந்துள்ள பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் நம்பிக்கையோடு இளைஞர்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்?" என்றார் அரசியல்வாதிகளை நோக்கி கேள்வி எழுப்பினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்திய அவர், "நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

பறத்தல் அவமானம்

விமானத்தில் பறப்பதையே அறம் சார்ந்த விஷயமாக மாற்றியதில் க்ரேட்டாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதாவது விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று 'பறத்தல் அவமானம்' எனப் பிரசாரம் செய்து வருகிறார்.

பருவநிலை விவகாரத்தில் விழிப்புணர்வை உண்டாக்க 'பருவநிலை வேலைநிறுத்தம்' எனும் கோஷத்துடன் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தைக் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இந்த போராட்டமானது திசையெங்கும் பரவி உள்ளது. அமெரிக்கா முதல் பெசண்ட் நகர் வரை இந்த போராட்டத்தை சூழலியல் செயற்பாட்டாளர்கள் நடத்திவிட்டனர்.

பிரேசில், செளதி மற்றும் டிரம்ப்

சரி. இந்த ஐ.நாவில் நடக்கும் இந்த பருவநிலை மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளவில்லையெனப் பார்ப்போம்.

ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரிஷ் ஒருங்கிணைத்த இந்த ஒரு நாள் கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள 60 தலைவர்கள் பங்கெடுத்தனர்.

கரியமில வாயு வெளியேற்றம் குறித்து திட்டம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள் என ஆண்டனியோ குட்டரிஷ் தெரிவித்து இருந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளமாட்டார் எனக் கூறப்பட்ட சூழலில், பார்வையாளராக அவர் கலந்து கொண்டார்.

டிரம்ப் பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர்.

பிரேசில், செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

அமேசான் காடுகள் பற்றி எரிந்த போது அந்நாட்டுத் தலைவர் சயீர் பொல்சனாரூ உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :