முதலாம் உலகப் போர்: 'எம்டன்'கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: எம்டன்'கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு
சென்னை மாநகரில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது இந்தியா ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தை 'மதரசாப்பட்டினம்' என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனைச் சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தை அமைத்திருந்தனர்.
இதனால் ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. ஜெர்மனியின் "எஸ்.எம்.எஸ். எம்டன்" என்ற நவீன போர்க்கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை நோக்கி வீரர்கள் வந்தனர். கேப்டன் வான் முல்லர் தலைமையில், வந்த கப்பலில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த பொறியாளர் செண்பகராமன் என்ற வீரரும் இடம் பெற்றிருந்தார். ஜெர்மனியின் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்தின் பிடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தார்.
செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணி அளவில், சென்னையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் "எம்டன்" கப்பல் நிலைநிறுத்தப்பட்டது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள் மின்சாரத்தை நிறுத்தி நகரையே இருளில் மூழ்கச் செய்தனர். ஆனால் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த கலங்கரை விளக்கம் மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images/ தினத்தந்தி
அந்த வெளிச்சத்தை மையமாக வைத்து, 'எம்டன்' கப்பலில் இருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டுகள் வீசினர். இதில் சென்னை துறைமுகத்திலிருந்த எண்ணெய் கிடங்குகள் வெடித்துச் சிதறின. ஒரு குண்டு விழுந்து வெடித்ததில் உயர்நீதிமன்ற சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே கிடந்தது. சேதத்தை ஏற்படுத்திவிட்டு 'எம்டன்' கப்பல் சென்னையைவிட்டு ஆழ்கடலுக்கு சென்றது. ஆங்கிலேயே கடற்படை பின்தொடர்ந்தும், 'எம்டன்' கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயப் படைக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த 'எம்டன்' கப்பல் 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி ஆஸ்திரேலிய போர் கப்பலால் சிட்னி துறைமுகம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது.
சென்னையில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசிய பகுதியான உயர்நீதிமன்ற வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசிய இடத்தை காட்டும் வகையில் உயர்நீதிமன்றத்துக்குள் நீதிபதிகள் செல்லும் வாசல் அருகில் உள்ள சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். இவர்களுடன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஏ.செல்லமுத்து, இரா.சிவசங்கர், ஜெ.எப்.பிரகாஷ், ஆர்.லட்சுமிகாந்த் உள்பட பலர் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னையில் "எம்டன்" கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால் சென்னையில் "எம்டன்" கப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் தடயங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. சாதாரண மைல் கல்லைப்போலவே இதற்கான நினைவு கல்வெட்டு தேடிக் கண்டுபிடிக்கும் நிலையில்தான் உள்ளது. எனவே தமிழக அரசு "எம்டன்" கப்பல் குண்டுவீசிய இடத்தை அடையாளம் காட்டும் வகையில் புதிதாக நினைவிடம் அமைக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி: "நீர், காற்றாலை மூலம் 3000 மெகாவாட் மின் உற்பத்தி"
நீர், காற்றாலை மூலம் 3,000 மெகாவாட்டுக்கு அதிகமான மின் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான மின்சாரத்தை அனல், நீர், காற்று, சூரிய சக்தி மூலம் தயார் செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமும், அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் தொடர்ந்து சீராக உள்ளது. எனவே, இவற்றின் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குப் பரவலாக மழை பெய்து வருவதால், இந்த மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி, நீர் மின் நிலையங்களில் 1,500 மெகாவாட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், தேனி போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின்சார உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளிலும் தற்போது 1,592 மெகாவாட்டுக்கும் அதிகமான அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து சில நாள்களுக்கு மேலும் காற்றும், மழையும் அதிகமாக வாய்ப்பிருப்பதால் மின் உற்பத்தியின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்து தமிழ்: "தமிழகம் -14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு"
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் அனேக இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு ஆந்திரா அருகே உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதால், வரும் 24, 25 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், 26-ம் தேதி கனமழை முதல் அதிகனமழை வரையும் பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம், விருதுநகர் மாவட்டம் வத்தி ராயிருப்பு ஆகிய இடங்களில் 7 செமீ, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 6 செமீ, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, பெனுகொண்டபுரம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் குஜராத் மாநில கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது மேலும் வலுப்பெற்று ஓமன் நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'வரி குறைப்பு - நிறுவனங்கள் இந்தியா வரும்`
வரி குறைப்பு நடவடிக்கையால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருமென இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
எந்த நாடும் இந்தளவுக்கு குறைந்த வரி விதிக்கவில்லை. என்றார்.
சீனா அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக சண்டையால் நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ளன.
அவர்கள் இந்தியா வர வாய்ப்பு அதிகமென நம்பிக்கை தெரிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












