மகாராஷ்டிரா தேர்தல்: "பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தது எங்களின் வரலாற்றுப் பிழை" - தேசியவாத காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில் பாஜக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளித்தது வரலாற்றுப் பிழையாகிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜிதேந்திர அவ்ஹத், பிபிசி மராத்தி செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிபிசி மராத்தி செய்திப் பிரிவின் `ராஷ்டிரா மகாராஷ்டிரா' என்ற தலைப்பிலான தேர்தல் நிகழ்ச்சியில் புனேவில் வெள்ளிக்கிழமை பேசிய அவ்ஹத், ``மகாராஷ்டிராவில் அலிபாக் என்ற இடத்தில் நடந்த கட்சியின் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் 35 முதல் 40 பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர். நான் சரத்பவார் (கட்சியின் தலைவர்) அருகில் நின்றிருந்தேன். நமது சித்தாந்தத்தை விட்டுக் கொடுத்தால் நமது கதை முடிந்துவிடும் என்று கூறினேன்'' என்று தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய முடிவு பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வரும் நிலையில், கட்சியில் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல அவ்ஹாத்தின் பேட்டி அமைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 2014ல் நடந்த தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை உருவானது. 122 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. ஆனால் பெரும்பான்மை பலமான 145 -க்கு இன்னும் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா தனித்துப் போட்டியிட்டது. பாஜக அரசு அமைப்பதற்கு ஆதரவு தர சிவசேனா தயாராக இல்லை.
41 உறுப்பினர்களைக் கொண்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு உதவ முன்வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க அந்தக் கட்சி முன்வந்தது. ``நிலையான அரசுக்காகவும், மகாராஷ்டிராவின் நன்மை கருதியும், பாஜக அரசு அமைக்க உதவி செய்வது மட்டுமே எங்களுக்கு உள்ள ஒரே தேர்வு வாய்ப்பு'' என்று சரத்பவார் கூறினார்.
இந்தியாவில் மிகவும் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைவதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு, பாஜகவுக்கு உதவியது. விலகிச் சென்ற சிவசேனா உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு நெருக்கடி தருவதாகவும் அது அமைந்தது. பவாரின் ஆச்சர்யப்படத்தக்க முடிவால், பாஜகவுக்கு எப்போதும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என்ற பிளான் `பி' திட்டம் இருப்பதால், சிவசேனாவின் பேரம் பேசும் வாய்ப்பு குறைந்து போய்விட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தோற்கடிக்கப்பட்ட மற்றும் `கறைபடிந்த" தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சியுடன் கூட்டணி வைப்பதைவிட, `இயல்பான தோழமை' கொண்டுள்ள சிவசேனா போன்ற கட்சியுடன் கூட்டு சேருவது தான் நல்லது என்று எல்.கே. அத்வானி போன்ற பாஜக தலைவர்கள் பலரும் கூறினர். ஒரு மாத காலம் நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சிவசேனாவின் 10 உறுப்பினர்கள் பட்நாவிஸ் அரசில் இடம் பெற்றனர்.
பவார் - மோதி நட்பு

டிசம்பர் 2014ல் அரசில் சிவசேனா சேர்ந்தபோதிலும், பாஜகவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பாசம் முடிந்துவிடவில்லை. 2015ல் தனது சொந்தப் பகுதியான புனே மாவட்டம் பாரமதியில் பிரதமர் மோதிக்கு வரவேற்பு அளித்தார் சரத்பவார். அந்தப் பயணம் `வளர்ச்சி நோக்கிலானது என்று பாரமதி தொகுதியின் எம்.பி.யும் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சூலே கூறினார்.
ஓராண்டு கழித்து 2016 ஆம் ஆண்டில் புனேவில் ஒரு விழாவில் கலந்து கொண்ட மோதி, பொதுவெளியில் பவாரை பாராட்டிப் பேசினார். ``குஜராத்தில் என்னுடைய ஆரம்ப காலத்தில் என் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் பவார் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை'' என்று அவர் கூறினார்.
2017 உள்ளாட்சித் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்தித்த பிறகு தான் அந்த இரு கட்சிகளுக்கு இடையிலான பாசம் முடிவுக்கு வந்தது.
அந்தத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை தேசியவாத காங்கிரஸ் எடுத்தது. ``இனவாத'' பாஜகவை எதிர்க்கத் தொடங்கி, ``ஸ்திரத்தன்மைக்காக"' பாஜகவை ஆதரித்த நிலை மாறி இப்போது ``பாசிஸ்ட் கட்சி'' என்று வர்ணிக்கும் அளவுக்கு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. முந்தைய முடிவுகளுக்கு விளக்கம் தர முடியாமல் அந்தக் கட்சி சிரமப்படுகிறது.
`தேசியவாத காங்கிரஸ் துறவுக் கட்சியல்ல'
நிலைப்பாட்டை முழுக்கவே மாற்றிக் கொண்ட மற்றொரு கட்சி ஸ்வாபிமானி விவசாயிகள் கட்சி. அதன் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜூ ஷெட்டி நீண்டகாலமாக சரத்பவாருக்கு எதிராகக் களம் கண்டவர். 2014ல் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து, 2017ல் வெளியேறிவிட்டார். தெற்கு மகாராஷ்டிராவில் கணிசமான ஆதரவு வைத்திருக்கும் அந்தக் கட்சி இப்போது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ளது.
பவார் குறித்து தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது பற்றி பிபிசி நிகழ்வில் வெள்ளிக்கிழமை கேட்டபோது, ``தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சன்னியாசிகள் என்று நாங்கள் சான்றிதழ் தந்துவிடவில்லை. ஆனால் பாஜகவை எதிர்த்து களம் காண்பதற்கு அவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவைப்படுகிறது. மொகலாயர்களை எதிர்க்க வேண்டுமானால், அடில்ஷா மற்றும் குதூப் ஷாவுடன் கூட்டு சேர வேண்டும் என்பதை சிவாஜி எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்'' என்று கூறினார்.
பவாரின் கூட்டணியில் உள்ள ஷெட்டி, ``தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராம ராஜியத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்தபட்சம் எங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் கிடைக்கும்'' என்று தெரிவித்தார்.
`சிவசேனா - பாஜக கூட்டணி ஏற்படும்'

பட மூலாதாரம், BBC/Rahul Ransubhe
சிவசேனா - பாஜக கூட்டணி நிச்சயமாக ஏற்படும் என்று புனே பாஜக எம்.பி.யும், முன்னாள் கேபினட் அமைச்சருமான கிரிஷ் பபத் கூறியுள்ளார். ``கணிசமான இடங்களை அளிக்குமாறு சிவசேனா வலியுறுத்தும்'' என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2014 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, இரு இந்துத்வா கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறிந்து போனது. இந்த முறை அப்படி நடக்காது என்று பிபிசி மராத்தி செய்திப் பிரிவின் தேர்தல் நிகழ்ச்சியில் பபத் கூறினார்.
பாஜக மற்றும் சிவசேனா இடையில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. மொத்த இடங்களில் பாதியை சிவசேனாவுக்கு அளிக்க வெளிப்படையாக பாஜக அறிவித்துள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி கிடைத்ததை அடுத்து, அதை நிறைவேற்ற பாஜக மறுக்கிறது.
புனேவில் நடைபெற்ற ராஷ்டிரா மகாராஷ்டிரா நிறைவு நிகழ்ச்சியில், புனேவின் இந்நாள் மற்றும் முன்னாள் பெண் மேயர்கள் மூன்று பேர் ஒரே மேடையில் பங்கேற்றனர். பாஜகவின் தற்போதைய மேயர் முக்தா திலக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மேயர் ராஜ்ரலட்சுமி போசலே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் கமல் வியாவஹாரே ஆகியோர், புனே நகரின் பிரச்சினைகள் மற்றும் அரசியலில் பெண்களின் பங்கு குறித்த விஷயங்கள் பற்றி விவாதித்தனர்.
அந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேரலை மூலமாக க் கலந்து கொண்டனர். அது ஜியோ டி.வி. ஆப், யூடியூப், முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ராஷ்டிரா மகாராஷ்டிரா அடுத்த நிகழ்ச்சி செப்டம்பர் 24 ஆம் தேதி ஔரங்கபாத்திலும், செப்டம்பர் 27ல் நாக்பூரிலும் நடைபெறுகின்றன. காங்கிரஸ் கட்சியின் அசோக் சவாண், பாஜக மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே உள்ளிட்ட உயர் தலைவர்கள் ஔரங்கபாத்தில் நடைபெறும் அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












