You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தித் திணிப்பு: செப்டம்பர் 20ஆம் தேதி திமுக போராட்டம் - மு.க. ஸ்டாலின்
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது.
தி.மு.க.வின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், இந்தியாவின் ஒரே அடையாளமாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார சரிவு, காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திருப்பவதற்காக அமித் ஷா இவ்வாறு கூறியிருப்பதாகவும் இது நாட்டின் பன்முகத்தன்மைக்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல்சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கும் மாறானது எனவும் தி.மு.க. கூறியுள்ளது.
மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்க முயற்சித்துவருவதாகவும் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோரை இரண்டாம் தரக் குடிமக்களாக்க முயற்சி செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் இந்தித் திணிப்பை கைவிட்டுவிட்டு நாட்டை முன்னேற்றும் உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்றும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலினிடம் தோழமைக் கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமா எனக் கேட்டபோது, "முதற்கட்டமாக, இந்தப் போராட்டங்களை தி.மு.க. சார்பில் அறிவித்திருக்கிறோம். அடுத்து என்ன நடக்கவிருக்கிறது, மத்திய அரசிடமிருந்து என்ன பதில் வருகின்றது என்பதைப் பொறுத்து, அடுத்தகட்டமாக நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு, ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கலந்துபேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முடிவெடுப்போம்" எனக் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் என பிரதமர் கூறியிருக்கிறார். இதற்கு அவரைப் பாராட்ட வேண்டாமா? இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டாமா? தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்" என்று கூறினார்.
பொன் ராதாகிருஷ்ணின் இந்தப் பேச்சுக்கு போராட்டத்தில் பதில் சொல்லப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்திப் பிரச்சனையை கிளப்பியதன் மூலம் பா.ஜ.க. தேன்கூட்டில் கைவைத்துவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்