சிவப்பிரசாத் ராவ்: ஆந்திரப் பிரதேச முன்னாள் சபாநாயகர் கோடெலா தற்கொலை

ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் கோடெலா சிவப்பிரசாத் ராவ் இன்று திங்கள் கிழமை இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக, அவரது குடும்ப மற்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

போலீசார் இது தற்கொலை என்று அதிகாரபூர்வமாகக் கூறவில்லை. பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்குக் காத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

நரசராவ் பேட்டையில் அறுவை சிகிச்சை நிபுணராக புகழ் பெற்ற மருத்துவர் இவர். என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கியபோது அதன் பல பிரிவுகளை இவர் கவனித்துள்ளார். குண்டூர் மாவட்டத்தின் நரசராவ்பேட்டை கோஷ்டி அரசியலுக்குப் பெயர் போனது. அந்த மாவட்டத்தில் தனது அதிரடி அரசியலால் அறியப்பட்டவர் சிவப்பிரசாத் ராவ்.

சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்ததில் இருந்து அந்தக் கட்சி உறுப்பினர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன.

அரசாங்கம் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுவருவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டுகிறது.

சிவப்பிரசாத ராவ் அகால மரணமடைந்ததற்கு மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்துக்கு ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாக ஆளுநர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவராக அவரது பணிகள் நினைவுகூரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் குறித்த நடிகர் சித்தார்த்நேர்காணலை காண:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: