சுபஸ்ரீ மரணமும், பேனர் சம்பவமும்: ''மகளின் மரணத்திற்கு அரசாங்கம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை'' - தந்தை கவலை

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் பேனர் விழுந்ததைத் தொடர்ந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில், தமிழக அரசாங்கம் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்று சுபஸ்ரீயின் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

கடந்த வாரம் வியாழன் அன்று துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வரும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று டிஜிடல் பேனர்களை வைத்திருந்தார்.

முன்னாள் கவுன்சிலரும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான சி. ஜெயகோபால் வைத்த அந்த பேனர் சரியாக கட்டப்படாததால், பள்ளிக்கரணை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சுபஸ்ரீ மீது அது விழுந்தது. சுபஸ்ரீ நிலைதடுமாறிய போது, அவரது வண்டியின் பின்புறம் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி அவர்மீது எறியதில் அவர் பலியானார். பேனர் விழுந்து, லாரி அவர் மீது ஏறிய காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

சுபஸ்ரீயின் இறப்பை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதியின்றி பேனர் வைக்கும் நிகழ்வுகளில் தான் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார். நடிகர் மற்றும் மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

லாரி ஓட்டுநர், பேனர் வைத்த ஜெயகோபாலின் பெயர்கள் முதல் தகவலறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதை தவிர இதுவரை அரசாங்கம் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என வருத்தத்தோடு பேசினார் சுபஸ்ரீயின் தந்தை ரவி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

''சிசிடிவி காட்சிகள் உண்மையை சொல்லிவிட்டன. என் மகள் விபத்தில் இறக்கவில்லை. பேனர் விழாமல் இருந்திருந்தால், அவள் நேராக சென்றிருப்பாள், லாரியும் அவளை கடந்து சென்றிருக்கும். இந்த சம்பவத்தில், பேனர் வைத்ததால்தான் என் மகள் இறந்துவிட்டாள். அரசாங்கம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. என் மகளுக்கு நீதி கிடைக்குமா?,''என கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார் சுபஸ்ரீயின் தந்தை ரவி.

"விபத்தில் சுபஸ்ரீ இறந்துபோகாமல், கை, கால்களில் அடிபட்ட நிலையில் உயிர் தப்பியிருந்தால் தமிழக அரசு மீது அவள் வழக்கு தொடுத்திருப்பாள்" என்கிறார் அவரது தாய் கீதா.

''என் மகள் தன்னம்பிக்கை மிகுந்தவள். இறந்துபோகாமல் இருந்திருந்தால், கை, கால்களில் அடிபட்டிருந்தால், மீண்டுவந்து நிச்சயமாக தமிழக அரசு மீது வழக்கு போட்டிருப்பாள். பிறந்தோம், வாழ்ந்தோம் என இருக்கக்கூடாது, இந்த சமூகத்திற்கு நாம் நன்மை செய்யவேண்டும் என அடிக்கடி சொல்லுவாள். அவளின் மரணத்திற்குப் பிறகாவது பேனர் வைக்கும் கலாசாரம் முடிவுக்கு வரவேண்டும். எங்களைப் போல வேறு எந்த பெற்றோரும் குழந்தையை இழக்கக்கூடாது,''என்கிறார் கீதா.

சுபஸ்ரீயின் இழப்பில் இருந்து அவரது குடும்பம் மீள பல தன்னார்வலர்கள் வந்து ஆறுதல் சொல்கிறார்கள். பல இளைஞர்கள் வந்து, சுபஸ்ரீயின் பெற்றோருக்கு தைரியம் சொல்கிறாரகள். சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் கலைச்செல்வன் என்ற இளைஞர் பிபிசி தமிழ் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்திக்கச் சென்ற சமயத்தில் அங்கிருந்தார்.

''சுபஸ்ரீயின் இறப்பைப் பற்றி செய்தியில் பார்த்தவுடன் அழுதுவிட்டேன். இந்த இழப்பின் வலி அதிகமானது. ஆனால் அவரின் பெற்றோர் மீண்டுவரவேண்டும். சுபஸ்ரீ யார் என இதுநாள் வரை தெரியாது. ஆனால் சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு என்னால் முடிந்த ஆறுதல் வார்தைகளை சொல்லவந்தேன்,''என்றார் கலைச்செல்வன்.

குழந்தையை இழந்த தாய் ஒருவர் தனது மகனின் புகைப்படத்துடன் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வந்திருந்தார். ''மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என் மகனை இழந்தேன். உங்களின் வலி எனக்கு புரியும்,''என ரவி-கீதா தம்பதியை ஆறுதல் படுத்தினார்.

சுபஸ்ரீயின் மரணம் குறித்த வழக்கை விசாரித்துவரும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது ஜெயகோபால் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்பதைத் தவிர பிற தகவல்களை தற்போது தெரிவிக்கமுடியாது என்றனர்.

Who Killed Subasri? நேற்று ரகு, இன்று சுபஸ்ரீ, நாளை? - கொதிக்கும் சமூக ஊடகப் பயனர்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: