சந்திரயான் 2: 14 நாட்கள் முடிந்த பிறகு என்னவாகும்?

பட மூலாதாரம், ISRO
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: சந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்?
சந்திரயான் 2-ல் லேண்டர் விக்ரமை விடுத்து, ரோவர் பிரக்யானை நேரடியாகத் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"14 நாட்கள் மட்டுமே நிலவில் பகல் பொழுதாக இருக்கும். செப். 7-ம் தேதி, சந்திரயான்-2 நிலவில் இறங்கியிருக்கிறது. 21-ம் தேதி வரை அங்கு சூரிய ஒளி இருக்கும். குளிர் ஆரம்பித்தபிறகு வெப்பநிலை மைனஸ் 150 டிகிரி செல்சியஸுக்குச் சென்றுவிடும். அப்பொழுது விக்ரமின் சோலார் பேட்டரிகள் செயலிழந்துவிடும்.
14 நாட்கள் முடிந்தபிறகு மிகப்பெரிய கேள்விக்குறி எழும். அதற்குள் எல்லா சாத்தியக்கூறுகளையும் நாம் முயன்று பார்க்கலாம். சில நாட்கள், சில வாரங்கள் சமிக்ஞையே இல்லாத பல செயற்கைக்கோள்களில் திரும்பத் திரும்ப முயற்சித்து உயிர்ப்பித்திருக்கிறோம். நிலவு அல்லாத இடங்களில் இது பலமுறை நடந்திருக்கிறது. அந்த நம்பிக்கை இஸ்ரோவுக்கு இருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இந்தியாவுக்கு ஏமாற்றம்"

பட மூலாதாரம், Getty Images
பல்கலைக்கழக தரவரிசை பட்டியலின் முதன்மையான இடத்தை ஒரு பல்கலைக்கழகம் கூட பெறாதது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களை பட்டியலிடுவதற்காக டைம்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 நாடுகள் அடங்கிய 1,396 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன.அதில் முதல் இடத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், இரண்டாவது இடத்தை கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், அதைத்தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளன.
இதில் முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெறவில்லை. கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 251 முதல் 300 இடங்களுக்குள் இருந்த பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சியும் தற்போது பின்தங்கி 301 முதல் 350-வது தரவரிசைப் பட்டியலுக்கு வந்துவிட்டது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: தவறை ஒப்புக்கொண்ட பியூஷ் கோயல்

பட மூலாதாரம், Getty Images
புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று தவறாக கூறியதை ஒப்புக் கொள்வதாக கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தவறிழைக்காமல் புதிதாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"ஏதாவதொரு சூழ்நிலையில் நாம் எல்லோருமே தவறு செய்வோம். புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் ஐசக் நியூட்டன் என்று கூறாமல் ஐன்ஸ்டீன் என்று தவறாகக் கூறிவிட்டேன்.
மனிதன் தவறிழைக்கவில்லை என்றால் எந்தவொரு புதிய விஷயத்தையும் தெரிந்துகொள்ள அவன் முயற்சிக்கவில்லை என்று பொருள் என ஐன்ஸ்டீனே கூறியிருக்கிறார்.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரமாக இந்தியா உருவாக வேண்டுமானால், 12 சதவீத வளர்ச்சியைக் காண வேண்டும் என்று கூறினேன். ஆனால், ஐன்ஸ்டீன் பெயரைத் தவறாகக் கூறியது முக்கியத்துவம் பெற்றுவிட்டது" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












