நடிகர் விஜய்: அட்லி இயக்கும் 'பிகில்' திரைப்படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறதா?

பட மூலாதாரம், AGS
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "விஜய்யின் 'பிகில்' படம் முன்கூட்டியே ரிலீஸ்?"
அட்லி இயக்கும் 'பிகில்' படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.
தீபாவளிக்கு வருவதாக இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களை தள்ளி வைத்துள்ளதால் பிகில் மட்டுமே தீபாவளிக்கு தனித்து திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே 24-ந் தேதி வியாழக்கிழமையன்று படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதனால் வசூல் மேலும் உயரும் என்று நம்புகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாக பிகில் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் படம் தயாராகி உள்ளது

இந்து தமிழ்: "ராஜீவ் கொலை வழக்கு: ஆளுநரிடம் விளக்கம் எதுவும் கேட்க முடியாது"

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு கடந்த 2018, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானத்துக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து, தீர்மானத்துக்கு விரைவாக ஆளுநரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு உத்தர விடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நியமன பதவியில் உள்ள ஆளுநரிடம் அனுப்பிய தீர்மானத்துக்கு ஏன் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஜனநாயக ரீதியில் கேள்வி கேட்க முடியும். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது'' என வாதிட்டார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிடும்போது, ''அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கென தனிப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது.
மேலும் தீர்மானமோ, கடிதமோ எதுவாக இருந்தாலும் மாநில அரசால் ஆளுநருக்கு அனுப்பி வைக்க மட்டுமே முடியும். அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆளுநரிடம் கேள்வியோ, விளக்கமோ மாநில அரசால் கேட்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


தினமணி: 'தில்லியில் திமுக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு'

பட மூலாதாரம், Getty Images
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி நாடாளுமன்ற சாலை காவல் சரக துணை ஆணையர் அலுவலகத்தில் வழக்குரைஞரும், தேமுதிகவின் தில்லி செயலருமான ஜி.எஸ்.மணி மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக உள்ளிட்ட கட்சிகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற வகையில், இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, அரசியல் தலைவர்கள் வீட்டு சிறைபிடிப்பு, இன்டர்நெட் சேவை ரத்து, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, பயங்கரவாத செயல் முறியடிப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஆகவே, அது தொடர்பான விவகாரங்களில் போராட்டம் நடத்துவது உச்சநீதிமன்ற நீதி வழங்கும் நடைமுறைகளுக்கு எதிரானது. மேலும், இப்போராட்டம் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை நாடு முழுவதும் உருவாக்கும் வகையிலும், எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்றவற்றை ஊக்குவிக்கின்ற வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் என்பதால், இப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜி.எஸ்.மணி கூறுகையில், உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து இப்போராட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுப்பதாக காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றார்.
காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை தில்லி ஜந்தர் மந்தரில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "இஸ்ரேல் செல்லும் தமிழக முதல்வர்"

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் நாட்டில் நீர் மேலாண்மைத் திட்டம் சிறப்பாக இருப்பதால், அதை அறிந்து வந்து தமிழகத்தில் செயல்படுத்தும் நோக்கில் தன்னுடைய தலைமையில் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அபிநவம் ஏரியில் குடி மராமத்துப் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவர் இவ்வாறாக செய்தியாளர்களிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.
மேலும் அவர், "இஸ்ரேலில் நீர் மேலாண்மை சிறப்பாக இருப்பதால், அதை அறிந்து வந்து தமிழகத்தில் செயல்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் சென்று வரத் திட்டமிட்டுள்ளேன். அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ. 184 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தென்னை மரம் பட்டுப்போனால் அதற்கான இழப்பீடாக மத்திய அரசால் ரூ. 100-ம், மாநில அரசால் ரூ. 1, 200-ம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது." என்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












