காஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை - தற்போதைய நிலை என்ன?

ஜம்மு காஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்படும், என்றும் அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"ஸ்ரீநகரில் மட்டும் 190க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். அரசு அலுவலகங்கள் இயல்பாக இயங்கும் என்று நம்புகிறோம். பின்னர் மற்ற பகுதிகளும் இயல்பாக்க கவனம் செலுத்தப்படும்" என்று ஜம்மு காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சல் தெரிவித்தார்.

எனினும், தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் நிலை இங்கு காணப்படவில்லை என்று களத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா கூறுகிறார்.

"அமைதியான இடங்கள் என்று கருதப்படும் பகுதிகளில் மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை" என ஆமிர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியா நிர்வகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் இயல்நிலை திரும்பவில்லை. மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டிருக்கிறது.

லேண்ட்லைன் சேவைகள் முழுவதும் விரைவில் சீரமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரெய்ஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2ஜி மொபைல் சேவைகள் வேலை செய்ய தொடங்கின.

மொபைல்-இணைய சேவைகள் முடக்கப்பட்டது ஏன்?

சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டே, மொபைல் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் கே.விஜயகுமார் தெரிவித்தார்.

"ஜம்மு காஷ்மீரில் இதற்கு முன் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லை தாண்டிய செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்தோம்" என்று அவர் கூறினார்.

செயல்படத் தொடங்கிய இணைய சேவைகள் ஞாயிற்றுக்கிழமை 10 மணி முதல் மீண்டும் முடக்கப்பட்டதாக ஜம்முவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் மோஹித் காந்தாரி தெரிவித்தார். இதுதொடர்பாக அதிகாரிகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீநகரில் சனிக்கிழமையன்று பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதாகவும், அதில் பலர் காயமடைந்ததாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக்கில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா, அங்கு அமைதியான சூழல் இருப்பதாகவும், ஆனால், பழைய ஸ்ரீநகரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

"Downtown ஸ்ரீநகரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எப்படி இருந்ததோ, அதே போலதான் இன்றும் உள்ளது. பாதுகாப்புப் படையினர் அதிகளவில் இருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் பேரிகேடுகள் மற்றும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன. அனுமதி இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக கூறினாலும், அனுமதிக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு நாங்கள் பாதுகாப்புப் படையினரால் நிறுத்தப்பட்டோம்" என்கிறார் ஆமிர்.

பழைய காஷ்மீரில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமரிலில் உள்ளது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. வட மற்றும் மத்திய காஷ்மீர் பகுதிகள் குறித்து எந்த தகவலும் இல்லை. தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பதால் மற்ற பகுதிகள் குறித்து அறிய முடியவில்லை.

ஒரு சில இடங்களில் மட்டுமே லேண்ட்லைன் சேவைகள் வேலை செய்கின்றன. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் அவை செயல்பாட்டில் இல்லை என்றும் ஆமிர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :