அத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் தெரியுமா?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "அத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் என்று தெரியுமா?"
அத்திவரதரை கடந்த 47 நாட்களில் 1 கோடி பேர் தரிசித்து உள்ளனர். தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, அத்திவரதர் சிலை இன்று மீண்டும் கோவில் குளத்துக்குள் வைக்கப்படுகிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கடைசி நாளான நேற்று இரவு 9 மணி வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.
நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.
இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும்.
அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து ஆங்கிலம் - இந்தியாவின் அணு ஆயுத பயன்பாடு

பட மூலாதாரம், Getty Images
எந்த விதமான அச்சறுத்தலும் இல்லாமல், இந்தியா தாமாகவே முதல் முறையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை எனும் கொள்கை நிலைப்பாடு தொடர்வது சூழ்நிலைகளை வைத்தே முடிவு செய்யப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நினைவு நாளான நேற்று இந்தியா 1998இல் அணு ஆயுத சோதனை நடத்திய ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சென்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா அணு ஆயுத பயன்பாட்டை பொறுப்புடன் மேற்கொள்ளும் நாடு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்து தமிழ்: "ஏடிஎம் பரிவர்த்தனை: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு"

பட மூலாதாரம், Getty Images
ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையின்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ அல்லது போதிய பணம் நிரப்பப்படாத காரணத்தினாலோ பணம் வராவிட்டால், அந்த பரிவர்த்தனை முயற்சியை, அம்மாதத்துக்கான இலவச பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கக் கூடாது என்று வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏடிஎம்-ல் போதிய பணம் நிரப்பப்படாத காரணத்தினால் பரிவர்த்தனை தடைபட்டாலும், அந்த பரிவர்த்தனை முயற்சியும் அந்த மாதத்துக்கென்று அனுமதிக்கப்பட்ட இலவச பரிவர்த் தனை எண்ணிக்கையில் சேர்க்கப் படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், வங்கிகள் தொழில்நுட்பக் குளறுபடிகளால் தடைபடும் பரிவர்த்தனை முயற்சிகளை இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையில் சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறி வுறுத்தியுள்ளது. இது தவிர்த்து, ஏடிஎம் மூலமாக இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளுதல், பிற வங்கிகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்தல் போன்ற செயல்பாடுகளையும் அனுமதிக்கப்பட்ட இலவச ஏடிஎம் பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












