உலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் "விற்பனைக்கு இல்லை" என்று கிரீன்லாந்து கூறியுள்ளது.
ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: "நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல."

அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்கே ராஸ்முஸ்ஸென், "இது கண்டிப்பாக ஏப்ரல் மாதம் முதலாம் தேதி செய்யப்படும் நகைச்சுவையாக இருக்க வேண்டும். ஆனால், இது அதற்கான சரியான காலமல்ல," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை முதலில் வெளியிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், டிரம்ப் இந்த திட்டம் குறித்து "மாறுபட்ட அளவிலான தீவிரத்தன்மையுடன்" பேசியதாக தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மற்ற ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின்படி, டிரம்ப் நகைச்சுவையாக கூறினாரா அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் வேறுபடுகின்றன.

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் - ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370ஐப் பொறுத்தவரை, அது மொத்தமும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதே எங்கள் நிலையாக இருந்தது, இப்போதும் அதே நிலையே நீடிக்கிறது என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் ஐ.நாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் அங்குள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்டமியற்றும் அமைப்புகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக நல்ல ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தவும், சமூக பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கவுமே என்று சையது அக்பருதீன் தெரிவித்தார்.

'மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை எச்சரிப்பது இந்து மதத்திற்கு எதிரானதா?'

பட மூலாதாரம், Getty Images
தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வண்ணத்திலான கயிறுகளைக் கட்டிக்கொண்டுவருவதைத் தடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கை அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஜூலை 30ஆம் தேதி கல்வித் துறை இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் 2018ஆம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

காஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை இந்தியர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்ற முடிவு அப்பகுதிக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும் என்று சுதந்திர தின விழா உரையின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
இந்திய மக்களிடம் காஷ்மீர் குறித்து இந்தியா இத்தகைய எண்ணங்களை விதைப்பதன் மூலம், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் சாத்தியமாகிறது என இக்கட்டுரையின்மூலம் கூறுகிறார் டெல்லியில் உள்ள சமூக ஆய்வு நிறுவனமான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் அஷோக் மாலிக்.

ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தேர்வு

பட மூலாதாரம், AFP
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இதனை அறிவித்துள்ளது.
ரவி சாஸ்திரி 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இருப்பார். பயிற்சியாளராக நியமிக்கப்பட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான நேர்காணல் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












