உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கை டெல்லிக்கு மாற்றும் உச்சநீதிமன்ற முடிவு பொருளற்றது: வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால்

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

உச்ச நீதிமன்றம் உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கை உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லிக்கு மாற்றியது யோகி ஆதித்யனாத் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தினமும் நடக்க வேண்டும் என்றும் 45 நாட்களுக்குள் இதை முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது, ரேபரேலி அருகே லாரி மோதிய வழக்கில் விசாரணையை 7 நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு.

கார் மீது லாரி மோதிய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு உறவுப் பெண்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய வழக்கறிஞரும் பலத்த காயமடைந்து லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்படுவது இது முதல் முறை இல்லை.

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், shoonya/BBC

இதற்கு முன்னாள் 2018 ல் ஜம்மு காஷ்மீர் கத்துவா சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அதேபோல் 2003ல் தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

2012ல் சொராபுதீன் ஷேக்கின் போலி என்கவுண்டர் வழக்கு குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

2004ல் பெஸ்ட் பேக்கரி வழக்கு குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. 2002 குஜராத் வன்முறையில் 14 பேர் பெஸ்ட் பேக்கரியினுள் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர்.

இதைத் தவிர பில்கிஸ் பானோ கூட்டு வன்புணர்வு வழக்கினை அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.

சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை இல்லாமல் போகும் சூழ்நிலைதான் இவ்வாறு ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்படுவதற்கான காரணம். இந்த நடைமுறை மக்களுக்கு நீதியின் மேல் நம்பிக்கை ஏற்பட காரணமாக அமையும் என கூறுகின்றனர்.

இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அங்கிருக்கும் நிர்வாகம் மற்றும் நீதி அமைப்பில் செல்வாக்கு இருக்கும். வெளியே மாற்றினால் அதில் மாற்றம் வரும் என்பதற்காகவே இந்த நடமுறை கையாளப்படுகிறது.

நீதிபதி

பட மூலாதாரம், Thinkstock

உன்னாவ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு குறித்து வெவ்வேறான கருத்துகள் பரவி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இது பரபரப்பை ஏற்படுத்தும் முடிவு என கூறியுள்ளார்.

அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ள வழக்கில் பெரிதாக ஏதும் இடையூறு இருக்காது ஏனென்றால் அவர்களைப் பற்றிய விஷயங்கள் எல்லா இடத்திற்கும் செல்லும் என கருத்து கூறுகிறார்.

வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் இது காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட ஒரு சிறிய முடிவு என்று கூறியுள்ளார்.

நிதிஷ் கடாரா கொலைவழக்கில் டி பி யாதவ் மகன் விகாஸ் யாதவ் மற்றும் அவருடைய தம்பியை குற்றவாளி என அறிவித்ததை மேற்கோள் காட்டுகிறார்.

2015 ல் டெல்லி உச்சநீதிமன்றத்தில் விகாஸ் யாதவ் மர்றும் விஷால் யாதவ் ஆகியோருக்கு 30 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விகாஸும் அவருடைய சகோதரன் விஷாலும் தங்களுடைய சகோதரி பாரதியுடன் சேர்ந்து நிதிஷின் உறவினர்களை எதிர்த்து வந்தனர்.

டி பி யாதவ் உத்தர பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற தலைவர். சட்ட மன்ற உறுப்பினர். வழக்கை டெல்லிக்கு மாற்றியதால் மட்டுமே அவர்கள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர். ஆனால் உன்னாவ் வழக்கில் காலம் கடந்து விட்டது . சாட்சிகள் இறந்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

ஆனால் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றப்படுவதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார்.

இந்த வழக்கில் சாட்சிகள் தங்கள் வறுமை நிலையில் இருந்து டெல்லி வந்து எப்படி சாட்சி கூறுவர்? அவர்கள் டெல்லியில் என்ன செய்வார்கள்? டெல்லியில் எதுவரை தங்குவார்கள்? அரசு அவர்களுக்கு தங்குமிடம் எதுவும் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. இவ்வாறு ஒரு வழக்கு மாற்றப்படும்போது, அதற்கான பக்கவிளைவுகள் இருக்கும் என கூறியுள்ளார்.

அலகாபாத் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்கிறார் துஷ்யந்த் தவே.

ரஞ்சன் கோகோய்

பட மூலாதாரம், Getty Images

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவில் ஒரு நீதிபதியை நியமித்து அவரை இந்த விசாரணையை செய்யச் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் குடும்பத்திற்கும் சாட்சிகளுக்கும் போலிஸ் பாதுகாப்பு அளிக்கலாம். தங்கள் சொந்த இடத்திலிருந்து அவர்கள் வெளியேறாமல் இருக்க இது உதவும் என கூறியுள்ளார்.

மேலும் குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு ஒரு போலிஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டு. அதுவும் அரசியல் குற்றச்சாட்டு. ஆனால் உன்னாவ் வழக்கில் அப்படி கிடையாது. ஒருவேளை குல்தீப் சேங்கர் நினைத்தால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

குல்தீப் சேங்கர்

பட மூலாதாரம், facebook/ kuldeep sengar

இன்னொரு புறம் காமினி ஜெய்ஸ்வால் பாதிக்கப்பட்ட குடும்பம் உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்துக்குப் பதில் அளிக்காமல் இருந்தது கோபமூட்டுவதாக கூறியுள்ளார்.

இந்த கடிதம் 17 ஜூலை அன்று எழுதப்பட்டுள்ளது. அதில் இவ்வளவு முக்கியாமன ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் அது ஏன் இன்னாள் வரை கண்டு கொள்ளப்படவில்லை என்பது புரியவில்லை. இப்போது அந்த கடிதத்துக்கான அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. அதனால் இப்போது போடப்பட்டுள்ள உத்தரவும் அர்த்தம் இல்லாமல் ஆகிவிட்ட்து. அது அவ்வளவு பெரிய கடிதமும் இல்லை. 13 நாட்கள் வரை அந்த கடிதம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இப்போது இந்த சம்பவம் நடந்திருக்கவில்லை என்றால் அந்தக் கடிதம் இதுவரை கண்டுகொள்ளப்பட்டிருக்காது.

உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 17 ஜூலை வந்த கடிதம் ஏன் 30 ஜூலை வரை கிடப்பில் இருந்தது என கேட்கப்பட்டபோது உச்சநீதிமன்றத்திற்கு ஒரு மாதத்துக்கு 5,000 முதல் 6,000 கடிதங்கள் வரை வருவதாகப் பதிலளித்தார் உச்சநீதிமன்றத் தலைமைச் செயலாளர்.

இந்த கடிதம் எழுதும் முறை 1979-80 களில் வந்தது. சில முக்கிய விஷயங்களில் வழக்குரைஞரிடம் சென்று நேரம் வீணாவது தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த நடைமுறை வந்தது. இந்த விஷயத்தில் நிறைய பேர் பதில் சொல்லவேண்டியுள்ளது. இதில் உயர்நீதிமன்றமே செயல்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் காமினி.

மேலும் அவர் இந்தியாவில் சாட்சிகளின் பாதுகாப்புக்கு எந்த சட்டவிதிகளும் இல்லை. அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு வழக்கை உத்தரபிரதேசத்திலிருந்து மாற்றலாம் என்று கருதுகிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :