உணவில் மதத்தை திணித்த நபர்; இதயங்களை வென்ற சொமேட்டோவின் பதில்

ஜொமேட்டோ

பட மூலாதாரம், AFP

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ட்விட்டரில் இதயங்களை வென்ற ஜொமேட்டோ

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் ஷுக்லா எனும் நபர் ஜொமேட்டோ செயலி மூலம் தான் ஆர்டர் செய்த உணவை தம்மிடம் கொண்டு சேர்க்க இந்து மதத்தைச் சேராத ஒருவரை அனுப்பி வைத்ததால், இந்து அல்லாதவர் தமக்கு உணவு வழங்கக் கூடாது எனும் கோரிக்கை வைத்துள்ளார்.

அதை அந்த நிறுவனம் ஏற்க மறுத்ததால் அந்த உணவை வாங்க மறுத்து விட்டதாகவும், தமக்கு விருப்பம் இல்லாத ஒன்றை வாங்கத் தம்மைக் கட்டாயப் படுத்த இயலாது என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சொமேட்டோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு டேக் செய்யப்பட்டிருத்த அந்தப் பதிவில் தமக்கு பணம் திரும்பத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.

Zomato India

பட மூலாதாரம், Twitter

அந்தப் பதிவை பகிர்ந்த சொமேட்டோ நிறுவனம், "உணவுக்கு மதம் கிடையாது; உணவு ஒரு மதம்," என்று தெரிவித்திருந்தது பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.

"இந்தியாவின் மதிப்பீடு மீதும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகள் (உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள்) ஆகியோரின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் விழுமியங்களை இழந்துவிட்டு எங்களுக்கு கிடைக்கும் லாபத்தை இழப்பதில் எங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை," என்று சொமேட்டோ நிறுவனர் திபீந்தர் கோயல் தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

தங்களுக்கு விருப்பம் இல்லாத நபரிடம் இருந்து உணவை வாங்கல் சொமேட்டோ கட்டாயப்படுத்துவதால், இது குறித்து தமது வழக்கறிஞர்களிடம் விவாதிக்கப்போவதாக அமித் ஷுக்லா கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இது 'ஸ்ராவனா' மாதம் என்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உணவு விநியோகிக்கக் கூடாது என்று கோரிய சொமேட்டோ சாட் உடனான உரையாடலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

"ஆம். எனக்கு வருத்தமாக உள்ளது. நான் என்ன சொல்வது? நாங்கள் ஏழைகள்; நாங்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்," என்று ஃபயாஸ் எனும் அந்த சொமேட்டோ ஊழியர் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்த ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?

தினத்தந்தி: "சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்கள் நீக்கம்"

பற்கள்

பட மூலாதாரம், ANI

சென்னையில் 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 7 வயது சிறுவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளான். அவனது வலது புற கீழ் தாடையில் இருந்து 4க்கு 3 செ.மீட்டர் அளவிலான கட்டி ஒன்று நீக்கப்பட்டது.

இதன்பின் அங்கு அதிக அளவிலான பற்கள் இருந்துள்ளன என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்களை அவர்கள் நீக்கியுள்ளனர். முதலில் 3 வயதில் சிறுவனின் வாய் வீங்கியுள்ளது. ஆனால் அவனது பெற்றோர் இதனை பற்றி கவலை கொள்ளவில்லை. சிறுவனும் சிகிச்சை செய்ய ஒத்துழைக்கவில்லை.

இதன்பின்பு வீக்கம் பெரிய அளவிலானது. இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்து உள்ளிருந்த கட்டி நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்தே அதிக எண்ணிக்கையில் இருந்த பற்களையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்" என்று அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.

தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்த ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?

தமிழ் இந்து: "ஜெயலலிதா மரணம்: அப்போலோ எதையோ மறைக்க முயற்சிக்கிறது"

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எதையோ மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சிக்கிறது என உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க முயற்சிக்கிறது.

ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரியதில் உள்நோக்கம் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் சரியான கோணத்தில்தான் விசாரணை நடத்தியது.

எனவே, ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்" என்று கோரியுள்ளதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :