You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தாக்குதல்: கைதான தமிழகத்தை சேர்ந்தோர் தொடர்பான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடைபெற்ற இலங்கை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இன்று தமிழ் நாட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து, தேசிய புலனாய்வு நிறுவன முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் கேரளா மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். கடந்த வாரம் சென்னை மண்ணடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நாகப்பட்டினத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 16 நபர்களும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, சென்னை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, நெல்லை மேலப்பாளையம், மதுரை, ஆகிய பல இடங்களில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் கீழக்கரையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை:
கடந்த 15ம் தேதி டெல்லியில் அன்சார்உல்லா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்ததில் கீழக்கரையைச் சேர்ந்த ரபி அகமது, வாலிநோக்கத்தை சேர்ந்த பாரூக், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முண்டாசீர் மற்றும் பைசல்ஷெரீப் ஆகிய நால்வரும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த நான்கு பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா என இன்று காலை விசாரித்தனர்.
மேலும், உள்துறை அமைச்சகம் தடைசெய்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தோர் ஊடுருவி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரின் பின்புலம், பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்ததாக தெரிய வந்துள்ளது. தலா 5 பேர் வீதம் 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை நிறைவு செய்தனர்.
இந்த நால்வரது பெயரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தேசவிரோத வழக்குகள் பதிவாகி உள்ளதா எனவும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.
நெல்லையில் சந்தேகத்துக்குரிய இஸ்லாமியர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமதுஇப்ராஹிம் வீட்டில் இன்று காலை கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு சுமார் 3 மணிநேரம் சோதனை மேற்கொண்டனர்.
இங்கு சோதனையை முடித்த அதிகாரிகள் அடுத்த தெருவில் உள்ள முகமது இப்ராஹிம் மனைவி செய்யதலி வீட்டிலும் சுமார் ஒரு மணிநேரம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் செல்போன், உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இன்று இராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ நடத்திய சோதனை குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பிபிசி தமிழிடம் கூறுகையில், இன்று (20.07.2019) இராமநாதபுரம் மாவட்டத்தில் சோதனை செய்யவுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று மாவட்ட காவல்துறையிடம் உதவி கேட்டு இருந்தனர்..
அதன் அடிபடையில் ஒரு குழுவுக்கு ஒரு பெண் காவலர், ஓர் ஆய்வாளர், நான்கு காவலர்கள் ஒரு காணொளி பதிவாளர் என ஏழு பேர் கொண்ட போலீஸ் குழு புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவுக்கு உதவ வழங்கப்பட்டது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஐந்து குழுக்களாக நான்கு இடத்தில் இன்று காலை 6 முதல் 11மணி வரை சோதனை நடத்தினர். சோதனையின் போது வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம் அட்டைகள் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை மட்டும் எடுத்து சென்றதாக என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- மனிதர்களின் பேராசையால் வால்பாறையில் இயல்பை இழக்கும் சிங்கவால் குரங்குகள்
- உத்தரப்பிரதேசத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி - காரணம் என்ன?
- அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் என்ன?
- "நுழைவுத்தேர்வுகள் உயர்கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்தெறிந்துவிடும்": நடிகர் சூர்யா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்