You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா: "நுழைவுத்தேர்வுகள் உயர்கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்தெறிந்துவிடும்"
கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது என்றும், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் நடிகர் சூர்யா அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விபரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அகரம் அமைப்பு மூலமாக, சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி பயில்கிற வாய்ப்பை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ள சூர்யா, மாணவர்களின் குடும்பச் சூழலையும், கல்விச் சூழலையும் ஆய்வு செய்து அகரம் தன்னார்வலர்கள் பகிரும் அனுபவங்களைக் கேட்டு கண்கள் கலங்கும் என்று கூறியுள்ளார்.
”நீட் இருந்திருந்தால் சாத்தியமில்லை”
"பெற்றோரை இழந்த ஒரு மாணவி இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றுகிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன் சென்னை ஸ்டான்லியில் மருத்துவர். நீட் தேர்வு மட்டும் இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர்களாகி இருக்க முடியாது என்றும், அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவர்களான மாணவர்கள் தகுதியிலும், தரத்திலும் சிறந்தே விளங்குகின்றனர்." என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
”நுழைவுத்தேர்வுகள் அச்சமூட்டுகின்றன”
நீட் அறிமுகமான பிறகு, அகரம் மூலமாக அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக்கூட மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியவில்லை என வருத்தப்படும் சூர்யா, புதிய கல்வி கொள்கையில் எல்லாவிதமான பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது என்றும், இது உயர்கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்தெறிந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”துணை நின்றவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்”
மேலும், "கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எதிர் கருத்துகள் வந்தபோது, என் கருத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி," என்று நெகிழ்ச்சி அடையும் சூர்யா, சசமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும், மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கல்வியாளர்ளுடன் உரையாடி தெளிவைப் பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
”திருத்தங்கள் தேவை”
இறுதியாக வரைவு அறிக்கை குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளை பதியும்படி ஒரு மத்திய அரசின் லிங்கையும் சுட்டிக்காட்டியுள்ள சூர்யா, மத்திய அரசு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஏழை மாணவர்களுக்குக் கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை விரிவாக தமிழில்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்