You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரியங்கா காந்தி: சோன்பத்ராவில் கொல்லப்பட்ட பூர்வகுடிகளுக்கு ஆதரவாக தர்ணா - யோகி ஆதித்யநாத்துக்கு நெருக்கடி
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உ.பியின் செயலாளர் பிரியங்கா காந்தி சுனாரில் உள்ள விடுதி ஒன்றில் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலமான சோன்பத்ரா மாவட்டத்தில் நிலம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு, பின் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க சம்பவம் நடைபெற்ற சோன்பத்ராவுக்கு சென்றார் பிரியங்கா.
பிரியங்கா காந்தியை சோன்பத்ராவுக்கு செல்லக்கூடாது என போலீஸ் அதிகாரிகள் கூறியவுடன், அவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின், பிரியங்காவை நாராயண்பூரில் எங்கள் காவலில் எடுத்தோம் என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரியங்கா தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சுனார் விடுதியில், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி இல்லை என்று கூறப்பட்டது.
மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், நள்ளிரவு ஒரு மணியளவில், தன்னை அந்த விடுதியிலிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். என பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், மின்சாரம் இல்லாத பகுதியில் அவர் தர்ணாவில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காமல் தான் அங்கிருந்து செல்வதாக இல்லை என பிரியங்கா காந்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் பிரியங்காவிடம் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாதது குறித்து கேட்டபோது, "கடினமாகதான் உள்ளது. ஆனால், நான் தொடர்ந்து போராடுவேன்," என்று பிரியங்கா தெரிவித்தார்.
அதே சமயம், உத்தரப்பிரதேச போலீஸார் பிரியங்கா காந்தியை தாங்கள் காவலில் வைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
"பிரியங்கா காந்தி தற்போது எங்கள் காவலில் இல்லை. சோன்பத்ராவை தவிர, அவர் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று நாங்கள் கூறிவிட்டோம்," என்று வாரணாசி மண்டலத்தின் ஏடிஜிபி பிரஜ் பூஷன் தெரிவித்தார்.
"24 மணி நேரமாக நான் இங்கு அமர்ந்துள்ளேன். சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை பார்க்காமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்," என்று பிரியங்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு உத்தரப்பிரதேச செயலாளரான பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோன்பத்ரா சம்பவம் தொடர்பாக இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், இதற்கு காரணமாகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சோனபத்ரா பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, சோன்பத்ரா சம்பவத்தில் அரசியல் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.
சோனபத்திராவில் என்ன நடந்தது?
ஜூலை 17ஆம் தேதியன்று, உப்பா என்ற கிராமத்தில், நிலம் தொடர்பாக அந்த கிராமத்தின் தலைவர் அங்குள்ள பூர்வக்குடி மக்களுடன் ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்
- அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் என்ன?
- "நுழைவுத்தேர்வுகள் உயர்கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்தெறிந்துவிடும்": நடிகர் சூர்யா
- தேர்தலில் வாக்காளர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா? - சட்டபேரவையில் வெடித்த மோதல்
- காண்டாமிருகங்களுக்கு பாதிப்பு: 95 சதவீதம் தண்ணீரில் மூழ்கிய காசிரங்கா பூங்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்