கர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு: நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடக மாநில சட்டப்பேரவை.

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக காங்கிரஸ் - மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது.

ஆளும் கர்நாடக காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜக-வுக்கு சாதகம் அளிக்கும் வகையில் பதவி விலகல் கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர். இவர்களது விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் எண்ணிக்கை குறைந்த சட்டப் பேரவையில் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்கும்.

இந்நிலையில், பதவி விலகல் கடிதங்களின் மீது பேரவைத் தலைவர் முடிவெடுக்காமல் தவிர்த்துவந்தார். பிறகு சிலரை நேரில் ஆஜராகவேண்டும் என்றும், சிலரது கடிதம் சரியான முறையில் அமைந்திருக்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் தங்கள் கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் உடனே முடிவெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடந்தது.

எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவைத்தலைவர் தரப்பினர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இரண்டையும் கேட்ட நீதிமன்றம் நாளை காலை 10.30-க்கு தீர்ப்பு அளிப்பதாக கூறி ஒத்திவைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :