கர்நாடக அரசியல் சிக்கல்: வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் குமாரசாமி

பட மூலாதாரம், Getty Images
கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி வியாழக்கிழமை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார். சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் இதனை முறைப்படி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
எனவே மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தங்கள் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த இன்னும் மூன்று நாள் அவகாசம் இருக்கிறது.
அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக நோட்டீஸ் அளித்த நிலையில், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதென்ற முடிவு அவை நடவடிக்கை ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக அவையில் முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி குறிப்புகள் உள்ளிட்ட அவை நிகழ்ச்சி நிரல் தொடங்குவதற்கு முன்பாகவே எழுந்த குமாரசாமி, தமது அரசு ஸ்திரமில்லாமல் இருப்பதாக புரளி பரவியிருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர அனுமதிக்கவேண்டும் என்று அவைத்தலைவரை கேட்டுக்கொண்டார்.
நடவடிக்கை ஆலோசனைக் குழுவில் அரசின் ஸ்திரத்தன்மை குறித்து நிறைய விவாதங்கள் நடந்த நிலையில், வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் வரையில் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும்படி தங்கள் எம்.எல்.ஏ.க்கள் சிலரை ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொள்ளக்கூடும் என்று சந்தேகிப்பதால் பாஜக தமது எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதி ஒன்றில் தங்கவைத்துள்ளது.
தற்போதைய நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டால் 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர் எண்ணிக்கை 209 ஆகும். இரண்டு சுயேச்சைகள் தற்போது பாஜக-வுக்கு ஆதரவு அளிப்பதால் சட்டப் பேரவையில் அந்தக் கட்சியின் பலம் 105ல் இருந்து 107 ஆக உயரும். இதனால், ஆளும் கூட்டணி அரசு மைனாரிட்டி அரசாகமாறும்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த விஷயத்தில் சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ள அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்பதும் கூர்ந்து கவனிக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












