கண்டிப்பு மிக்க ஆசியப் பெற்றோர் என்னை தடுமாற்றம் உடையவளாக ஆக்கினர்: இளம் பெண்ணின் மனப் போராட்டம்

கண்டிப்பான பெற்றோர்கள் - ஓர் ஆசிய இளம் பெண்ணின் மனப் போராட்டம்

ஓர் இளம்பெண் ஆன்லைனில் ஆலோசனைகள் கேட்டால், உலகெங்கும் இருந்து அவருக்கு பதில்கள் வருகின்றன.

"நான் எப்படி தனிமையாக உணர்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டால், உலகெங்கும் இருந்து இவ்வளவு பதில்கள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. திடீரென எனக்கு நிறைய பேர் ஆலோசனைகள் கூறினர், எனக்கு நண்பராக இருக்க முன்வந்தனர். அவ்வப்போது தாங்களும்கூட அதுபோல உணர்வதாகப் பலரும் கூறினர்.

நுட்பமான ஆசிய குணங்கள் என்ற முகநூல் குழுவில், பெயர் குறிப்பிடாமல் நான் கட்டுரை எழுதியபோது உண்மையிலேயே பலவீனமாக உணர்ந்தேன். அந்தக் குழுவில் உள்ளவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என்று கருதினேன். ஏனென்றால் நாங்கள் அனைவருமே ஒரே மாதிரியான கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள்".

அது இப்படி தொடங்கியது:

ஹலோ, ஆசிய சகாக்களே.

எனக்கு உண்மையில் சில வாழ்வியல் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன! என்ன செய்வது என்று இப்போது எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய பெற்றோர்கள் அதிக கர்வம் கொண்டவர்களாகவும், என் மீது அதிக பாதுகாப்பு உணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு குழந்தையாக, நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு அவர்கள் அனுமதித்ததில்லை என்பது நினைவிருக்கிறது.

நான் ஆஸ்திரேலிய - சீன வம்சாவழியை சேர்ந்தவள். அகதியாக வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற பின்னணியில், எங்களை வளர்ப்பதில், குறிப்பாக பெண்களை வளர்ப்பதில் பெற்றோர்கள் உண்மையிலேயே மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

அவர்களை நான் நேசிக்கிறேன். ஆனால் அவர்களுடைய கண்டிப்பு, நான் உருவான விதத்தை மிகவும் பாதித்துள்ளது. எனக்கு வெட்கம், மருட்சி உள்ளது. நீண்ட காலத்துக்கு நண்பர்களுடன் சேர்ந்திருக்க முடிவதில்லை.

வளர் இளம்பருவ காலத்தில் நான் தனிமையில் இருந்தேன். இப்போதும் கூட அப்படித்தான் இருக்கிறேன் என்று சொல்வேன். ஏனென்றால், எல்லோரும் ஏற்கெனவே வலுவான நட்பு வட்டங்களைக் கொண்டிருக்கும் நிலையில், வளர்ந்த பெண்ணாக, நட்புகளை உருவாக்கிக் கொள்வது இன்னும் எனக்கு கஷ்டமாக உள்ளது.

எனது பெற்றோர்களுடைய வீட்டைவிட்டு கடந்த ஆண்டு நான் வெளியேறிவிட்டேன். ஆனால் இந்த உலகம் பற்றியும், இது எப்படி இயங்குகிறது என்பது பற்றியும் எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. பணியில் ``எப்படி செயல்படுவது'' அல்லது நண்பனுடன் வெளியில் செல்வது எப்படி, அல்லது என் சமூக வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

என் உண்மையான வயதைவிட, மனதளவில் நான் ஐந்து வயது குறைந்தவளைப் போல உணர்கிறேன்.

கண்டிப்பான பெற்றோர்கள் - ஓர் ஆசிய இளம் பெண்ணின் மனப் போராட்டம்

விரைவில் நான் 25 வயதை எட்டப் போகிறேன். இன்னும் கூட்டைவிட்டு வெளியே வராததைப் போலவே உணர்கிறேன். ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் எப்படி தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

நான் வெளியேறும்போது, இரவு 9 மணி காலக்கெடு அப்படியே இருந்தது. ``யாருடன் நீ வெளியே போகிறாய்? அங்கே எப்படி செல்வாய்? உன்னை யார் அழைத்துச் செல்வார்கள்?'' என்பது போன்ற கேள்விகளைக் கேட்பார்கள்.

``ஒன்பது மணிக்குள் வந்துவிடு. இல்லாவிட்டால் நான் காவல் துறையில் தெரிவிப்பேன்'' என்று சொல்லி கதவோரம் நின்று அம்மா குட்-பை சொல்வார்.

எனக்கான நேரக்கெடு நெருங்கும்போது, என் தாய் நிறைய எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவார். அதே நேரத்தில் என்னுடைய தந்தை இமெயில்கள் அனுப்புவார். ஆனால் வெளியில் இருக்கும் போது யாரும் இமெயில்களைப் பார்ப்பது இல்லை. எனவே மறுநாள் காலையில் தான் அவற்றை நான் பார்ப்பேன்.

``இன்னும் ஏன் வந்து சேரவில்லை'!' என்பது போன்ற விஷயங்களை தந்தை எழுதியிருப்பார். அவர் ஆச்சர்யக்குறியை பயன்படுத்தி இருந்தால், அவர் கோபமாக இருக்கிறார் என நான் புரிந்து கொள்வேன். அல்லது என்னை சமாதானப் படுத்துவதற்காக ``டின்னர் தயாராகிவிட்டது'' என்று எழுதி மென்மையான அணுகுமுறையைக் கையாள்வார்.

எனக்கு 21 வயதாக இருந்த போது அவர்கள் நிஜமாகவே காவல் துறையை அழைத்துவிட்டனர். மூன்று மாத பணிக்காலப் பயிற்சிக்காக கேன்பெராவில் இருந்து நான் சிட்னிக்கு சென்றிருந்தேன். குடும்ப நண்பருடன் நான் தங்க வைக்கப்பட்டேன். நான் வருவது, போவது உள்ளிட்டவற்றை அவர்கள் கண்காணித்து வந்தார்கள்.

கண்டிப்பு மிகுந்த என் ஆசிய பெற்றோர்கள் என்னை தடுமாற்றம் கொண்டவளாக ஆக்கிவிட்டனர் - ஒரு இளம் பெண்ணின் மனப் போராட்டம்

பணிக்காலப் பயிற்சி முடிந்தபோது, ஒரு பார்ட்டி இருந்தது. ஆனால் குடும்ப நண்பர் காத்திருந்து பார்த்துவிட்டு, பெற்றோர்களுக்குத் தெரிவித்துவிட்டார். ``இன்னும் ஏன் வீட்டுக்குச் செல்லவில்லை? உடனே நீ வீட்டுக்குப் போக வேண்டும்'' என்று அம்மாவும், அப்பாவும் தொடர்ந்து மெசேஜ்கள் அனுப்பிக் கொண்டிருந்தனர். நான் ஒரு பார்ட்டியில் இருப்பதாகவும், ஒரே சப்தமாக இருப்பதாகவும் பதில் அனுப்பினேன். ஆனால் எனது தாயார் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தார்.

கடைசியாக நான் போனை எடுத்தபோது, ``உன்னை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருக்கவில்லை என்று நாங்கள் எப்படி நம்புவது? உன்னை கடத்தியவர்களே உனது செல்போனில் மெசேஜ் டைப் செய்யவில்லை என்று எப்படி நம்புவது?!'' என்று என் தாயார் கத்தினார். நான் நலமாக இருப்பதாக அவரிடம் கூறியபோதிலும், ``உன்னை யாராவது கடத்திச் சென்றுவிட்டார்களா!'' என்று கேட்டு பதறிக் கொண்டிருந்தார்.

என் தாயார் அவ்வளவு கோபமாக பேசியதை அப்போது தான் நான் கேட்டேன். தாங்கள் சொன்னபடி காவல் துறையை பெற்றோர் அணுகியிருக்கின்றனர். எனக்கு 21 வயது ஆகிறது என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று காவல் துறையினர் கூறிவிட்டனர்!

கடந்த புத்தாண்டு நாளில் அதிகாலை 1 மணி வரையில் நான் கொண்டாட்டக் குழுவில் இருந்தேன். அப்போதும் என் பெற்றோர்கள் அதேமாதிரி நடந்து கொண்டார்கள். காவல் துறையைக் கூப்பிடப் போவதாக மிரட்டினார்கள். என்னுடன் இருக்கக் கூடியவர்கள் என்று தெரிந்த அனைவரையும் அவர்கள் தொடர்பு கொண்டனர்.

ஒரு பார்ட்டிக்கு நான் வெளியே செல்வது அபூர்வம். என் பெற்றோர்கள் இடைவிடாமல் அழைத்துக் கொண்டே இருந்ததால், என்னால் அதை அனுபவிக்க முடியவில்லை.

இதையெல்லாம் சமாளிக்கும் வயது எனக்கு வந்துவிட்டது.

நல்ல நட்புகளை உருவாக்க முடியாமல் எனது பெற்றோரின் நடத்தைகள் என்னைத் தடுத்துவிட்டன என்று நான் நினைக்கிறேன்.

தொடக்கப் பள்ளியில் படித்தபோது, நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால்,பெண்கள் வெளியில் தங்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தனர் - அது `தவறான சிந்தனையை' உருவாக்கிவிடும்.

என்னுடன் வகுப்பில் படிப்பவர்கள் பற்றி எல்லா தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஒரு வியட்நாமிய மாணவியுடன் வெளியில் செல்வதற்கு என்னை அனுமதித்தார்கள், அதற்கு அவர்களிடம் நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அந்தப் பெண்ணின் பெற்றோரை அவர்களுக்குத் தெரியும். இன்னொரு தோழி லெபனான் மாணவி. அவள் படிப்பில் கெட்டிக்காரி என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். மற்ற நண்பர்களும் பெண்களாக மட்டுமே இருக்க வேண்டியிருந்தது.

எனக்கு 13 வயதாக இருந்தபோது, ஆன்லைனில் யாருடன் பேசுகிறேன் என்பதை அவர்கள் கண்காணித்தார்கள். ஒரு முறை என்னுடைய இமெயிலை அவர்கள் திறந்து பார்த்தபோது, நூற்றுக்கணக்கான இமெயில்களை அழித்துவிட்டுப் போனார்கள்.

எனக்கு 15 வயதாக இருந்தபோது, சாலையை கடப்பதற்கும் என்னை கை பிடித்து அழைத்துச் செல்வார் எனது தாயார்.

இதற்கெல்லாம் மேலாக, என் பெற்றோர்களின் நடத்தை காரணமாக எனது அண்ணன் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டார். அவனுக்கு 30 வயதாகிறது. இன்னும் வேலைக்குப் போகவில்லை. எப்போதும் அவன் வீட்டை விட்டு வெளியே போனதில்லை. எப்போதும் விடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பான்.

என் பெற்றோர்களைத் தான் அவன் குறை சொல்கிறான். மூத்தப் பிள்ளை என்பதால், தங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அவன் மீது திணித்தார்கள். தேர்வில் அவன் 96/100 மதிப்பெண் பெற்றான். அப்போதும் நன்றாக படிக்கவில்லை என்று திட்டு வாங்கினான். நல்ல பல்கலைக்கழகத்துக்குச் சென்று மாஸ்டர் பட்டம் பெற்றான். ஆனால் குறைந்த சம்பளத்துடன் கூடிய நிர்வாகப் பணியை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அவனுடைய தற்பெருமை தடுத்தது. இதை எனது தாயார் ஊக்குவிக்கிறார். பாரம் தூக்குதல், சில்லரை வணிகம் அல்லது துரித உணவு - என எந்த வகை வேலையாக இருந்தாலும் அவனை சேர்த்துவிடலாம் என தந்தை முயற்சி செய்கிறார். ஆனால் தாயார் அதற்கு எதிராக இருக்கிறார். ஏனென்றால் ``அவனுக்கு மாஸ்டர் பட்டம் இருக்கிறது!.'' 29 வயதைக் கடந்தும் இன்னும் அவர்களைச் சார்ந்தே இருக்கிறான்.

நிராகரிப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. உணர்வு சார்ந்த திறன் கிடையாது. அல்லது இந்த உலக செயல்களுக்கு ஏற்ப அவனுக்கு தொடர்பியல் திறன்கள் கிடையாது.

என் பெற்றோர்கள் பயணம் சென்றால், அவனையும் அழைத்துச் செல்கின்றனர். இன்னமும் அவனை குழந்தையாகவே நடத்துகின்றனர். இது கேலிக்கூத்தாக இருக்கிறது.

எனது இரண்டாவது சகோதரன் பள்ளிக்கூடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றான். அதனால் அவன் மீது அழுத்தம் குறைவாகவே உள்ளது. அவன் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவில்லை. 16 வயதில் இருந்தே உழைக்கத் தொடங்கிவிட்டான். இப்போது நிதி ஆலோசகர் பணியில், சராசரிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறான். அவனுக்கு இப்போது வயது 27. எங்கள் பெற்றோருக்கு நெருக்கமாக அவன் இல்லை.

என் தங்கைதான் கடைசி. என் பெற்றோரிடம் எப்படி இனிமையாகப் பேசுவது என்று அவளுக்குத் தெரியும். எப்படி பொய் சொல்வது என்று கற்றுக் கொண்டிருக்கிறாள். எனவே அவளால் சுதந்திரமாக இருக்க முடியும். என் பெற்றோர்களை எப்படி கையாள்வது என்பதில் அவள் கைதேர்ந்துவிட்டாள். ஏனென்றால், எங்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவள் பார்த்திருக்கிறாள்.

``என்னை கண்காணிப்பதை எப்போது தான் நிறுத்திக் கொள்வீர்கள்'' என்று என் தாயாரிடம் நேரடியாகவே நான் ஒரு முறை கேட்டேன்.

``உனக்கு 40 வயதானாலும், நான் அப்படி தான் செய்து கொண்டிருப்பேன்'' என்று அவர் பதில் அளித்தார். அவர் மிகவும் உண்மையாகத்தான் அப்படி கூறியிருக்கிறார். அதுவரையில் நான் வாழ்க்கையில் தனியாகத்தான் இருப்பேன் என்று நினைத்திருக்கிறார்.

மாணவிகள் தங்கள் வேலை பற்றியோ அல்லது டேட்டிங் செல்வது பற்றியோ சாட் செய்வதற்கு குரூப்கள் இருப்பதையும், ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள குரூப்கள் இருப்பதையும் திரைப்படங்களில் நான் பார்த்திருக்கிறேன். அது மாதிரி நண்பர்கள் எனக்கு இருந்திருந்தால், காதல் உறவுகளிலான முயற்சிகளில் நான் பல தவறுகளை செய்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.

எனது பதிவுக்குப் பிறகு நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டார்கள். எனக்கு கடிதங்கள் எழுதினார்கள். முடிந்த வரை சீக்கிரமாக நான் பதில் எழுதினேன். அது எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விவரிக்கத் தொடங்குவதற்குக் கூட என்னால் முடியவில்லை.

கண்டிப்பான பெற்றோர்கள் - ஓர் ஆசிய இளம் பெண்ணின் மனப் போராட்டம்

தனது பெற்றோர்களும் அதிக கண்டிப்புடன் இருக்கிறார்கள் என்றும் என்றும் அதனால் அவர்களை எதிர்த்துவிட்டதாகவும் ஒரு பையன் எழுதியிருக்கிறான். அவன் வெளியே சென்று, கிடைக்காமல் போன அனைத்தையும் அனுபவித்துப் பார்த்திருக்கிறான். போதை மருந்துகள், மது, ஓர் இரவுக்கு மட்டுமான உறவு என அனுபவித்திருக்கிறான். நம்பிக்கை இல்லாமல் இருப்பது எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தும் என்பது பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம். தொலைபேசியில் நாங்கள் இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறோம். அநேகமாக அவன் எனக்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

பலரும் புத்தகங்களைப் பரிந்துரை செய்தார்கள் - சுய உதவிப் புத்தகங்கள், நாவல்களைப் பரிந்துரை செய்தார்கள். என் அறையில் நிறைய போஸ்டர்கள் இருக்கின்றன. எனவே அவர்களுடைய பரிந்துரைகளையும், டிப்ஸ்களையும் அதில் நான் ஒட்டி வைக்கப் போகிறேன். மன ஆரோக்கியம் பற்றி யாருடனோ பேசுவதைக் காட்டிலும், உளவியல் நிபுணரை சந்தியுங்கள் என்று கூறியுள்ள ஒரு மெசேஜ் எனக்கு உதவிகரமாக இருப்பதாக நினைக்கிறேன்.

பொழுதுபோக்கு அம்சமாக எதையாவது உருவாக்கிக் கொண்டால், இயல்பாகவே நண்பர்கள் கிடைப்பார்கள் என்று மற்றொருவர் அறிவுரை கூறியுள்ளார். சொல்வதைப் போல அது எளிதானது இல்லை என்றாலும், அது சரியானதாகத் தோன்றுகிறது.

நான் குழந்தையாக இருந்தபோது பியானோ வாசிப்பேன். ஓவியங்கள் வரைவேன். கைத் தையல் செய்வேன். ஆனால் இவை எல்லாமே தனி நபராகச் செய்யும் செயல்கள்.

பலகை வைத்து விளையாடும் விளையாட்டுகள் எனக்குப் பிடிக்கும். ஆனால், அதைத் தொடங்குவதற்கு வேறு சிலர் தேவை.

இப்போது டேபிள் டென்னிஸ் அல்லது பாட்மிண்டன் போன்ற மற்ற சிலவற்றை முயற்சித்துப் பார்க்க நான் விரும்புகிறேன்.

யாருடனாவது கடற்கரைக்குச் செல்ல வேண்டும், முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வெளிநாடுகளுக்குச் செல்வது எனக்குப் பிடிக்கும்.

எனக்கு சவுகரியமான வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மகிழ்ச்சி என்பது தான் என்னுடைய நோக்கம். ஆனால் அது ஒரு மாதிரி மேலோட்டமானது, அதையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒரு சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தால், அதனுடன் இணைந்து மகிழ்ச்சியும் நண்பர்களும் கிடைப்பார்கள். அதை சாதிப்பது எளிதானது.

கரேனுக்கு வந்த சில பயனுள்ள டிப்ஸ்கள்:

•உங்களுக்கு தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பிடித்திருந்தால், அதன் ரசிகர்கள் குழுக்களைத் தொடர்பு கொள்வதில் தயக்கம் வேண்டாம்! அவர்கள் நட்பானவர்கள். மற்றவர்களுக்குப் பிடித்தமானதில் உங்களுக்கும் ஆர்வம் இருந்தால், தொடர்புகளை உருவாக்குவதில் அது உதவியாக இருக்கும்.

•உத்தரவாத வாசகத்துடன் செயல்களைச் செய்வது உளவியல் ரீதியிலான ஒரு நுட்பம். ``என்னை நம்புங்கள்' என்பது என் பெற்றோர்களிடம் நான் பயன்படுத்தும் வாசகம். எனவே உண்மைகளை அவர்களிடம் நீங்கள் சொல்லும் போது, கடைசியில் `என்னை நம்புங்கள்' என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது விஷயங்களைக் கேட்கும் போது தலையை அசைக்கவும், புன்னகைக்கவும் முயற்சி செய்யுங்கள்.

•நற்செயல் விஷயங்களில் ஈடுபாடு காட்டுங்கள், புத்தக கிளப், இசைக் குழு, ப்ரிஸ்பீ போட்டி - என எதிலாவது பங்கேற்பு செய்யுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்று தோன்றாவிட்டாலும், வெவ்வேறு விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள். உலகில் எந்த அளவுக்கு அதிகமாக நீங்கள் ஈடுபாடு காட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமாக கற்றுக் கொள்வீர்கள், அந்த அளவுக்கு அதிகமாக உங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

•தைரியமாக மக்களிடம் கேளுங்கள். இல்லை என்று அவர்கள் சொன்னால், தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த செயலுக்குச் செல்லுங்கள்.

•சூழ்நிலைகள் பற்றி அக்கறை காட்டாதவராக இருந்தால், விடுபட்டுப் போவீர்கள். மெல்ல ஆரம்பித்து, நெருக்கமான வட்டத்தில் (பணியிடம்/ ஒருமித்த ஆர்வம் உள்ள குழுக்கள்/ கிளப்கள்/ கூடுதல் வகுப்புகள் போன்றவற்றில்) ஆர்வம் காட்டி, அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

•உண்மையிலேயே நீங்கள் யார் என்பதைக் கண்டறியுங்கள். நீங்களாக வெளியில் சென்று, விருந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது அதிகமான நம்பிக்கையும், சவுகரியமும் தோன்றும்போது, உங்களைப் போன்ற சிந்தனையுள்ளவர்களை ஈர்ப்பீர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :