பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு - தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு'
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனாலும் இது வரை எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் சதி இருப்பதாக கருதுகிறோம். எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 25 சதவீத இடங்களை கூடுதலாக தருவதாக மத்திய அரசு ஏமாற்ற நினைக்கிறது. 25 சதவீத கூடுதல் இடம் என்பது மெள்ள கொல்லும் விஷம் போன்றது. கொடிய விஷம் கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதற்கு ஒப்பானது. எனவே, இந்த மயக்கத்திலும், கவர்ச்சியிலும் அதிமுக அரசு மனதைப் பறிகொடுத்துவிடக் கூடாது.

பட மூலாதாரம், Getty images
'சமூக நீதி காத்த வீராங்கனை' என ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். அவரது அடிச்சுவட்டில் ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் பழனிசாமி அரசு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கக் கூடாது. 10 சதவீத இடஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் திட்டமிட்ட நடவடிக்கை. இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ஸ்டாலின் பேசிய கருத்தை வலியுறுத்தி ஜே.ஜி. பிரின்ஸ் (காங்கிரஸ்), அபூபக்கர் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பேசினர். அவர் களுக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
69 சதவீத இடஒதுக்கீட்டில் அதிமுக அரசு எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காது. அதில் மிகமிக உறுதியாக இருக் கிறோம். பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீட்டை எம்பிபிஎஸ் சேர்க்கையில் நடைமுறைப்படுத்தினால் 25 சதவீத கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என இந்திய மருத்துவக் கவுன்சில் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனை தமிழகம், கர்நாடகம் தவிர மற்ற மாநிலங் கள் ஏற்றுக்கொண்டுள்ளன. 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால் தமிழகத்துக்கு 1,000 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். அதில் மத்திய ஒதுக்கீட்டுக்கு 150 இடங்கள் போக மீத முள்ள 850 இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும். அதில் பொதுப்பிரிவுக்கு 264 இடங்கள் போக 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 586 இடங்கள் கிடைக்கும். இதற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 5 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும் என இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளதை பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதுகுறித்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர் கள், கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
முதல்வர் பழனிசாமி: 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றால் என்னென்ன கிடைக் கும் என மத்திய அரசு கடிதத்தில் கூறியதை அமைச்சர் இங்கே தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
திமுக உறுப்பினர் க.பொன்முடி: கர்நாடகம், தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு விட்டன என அமைச்சர் சொல்வது நாங்களும் ஏற்றுக் கொள்வோம் என்பதைப் போல உள்ளது. 10 சதவீத ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால் கூடுதல் இடங்களைத் தருவோம் என மத்திய அரசு கூறுவது நம்மை மிரட்டுவது போல உள்ளது. நாம் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.
முதல்வர் பழனிசாமி: 10 சதவீத ஒதுக்கீட்டை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டதைப் போல பொன்முடி பேசுவது தவறு. இதுதொடர்பாக மத்திய அரசு எழுதிய கடிதத்தின் விவரங்களை இங்கே எடுத்துக் கூறினோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் இதில் முடிவு எடுக்கப்படும். 69 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 10 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில் நாம் ஒரே பாதையில் பயணித்து வருகிறோம். எந்தச் சூழலிலும் 69 சதவீத ஒதுக்கீட்டை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தும்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: தமிழக அரசு இந்த ஆண்டு 350 எம்பிபிஎஸ் இடங்களை கூடுதலாகப் பெற்றுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து ஜூன் 28-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இந்திய மருத் துவக் கவுன்சில் கூறியது. ஆனாலும் தமிழகம் இன்னமும் முடிவு அறிவிக்க வில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு நிச்சயம் பாதுகாக்கும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தினத்தந்தி: 'வனிதாவை கடத்தல் வழக்கில் விசாரிக்க பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல போலீஸார் திட்டம்'
தெலங்கானாவில் தனது மகளை கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் புகார் அளித்ததை தொடர்ந்து அவரை விசாரிக்க தெலுங்கானா போலீசார் சென்னை வந்தனர்.

பட மூலாதாரம், Twitter
நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமாருக்கும், ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012-ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்தாகி விட்டது. இவர்களது விவாகரத்துக்கு பின் மகள், தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்ற மகளை கடத்தி சென்று விட்டதாக தெலங்கானா போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.
இதையடுத்து, வனிதா விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தற்போது வனிதா விஜயகுமார் தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருப்பதை அறிந்த ஆனந்தராஜ், கடத்தப்பட்ட மகளை மீட்டு அழைத்து செல்ல தெலங்கானா போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருடன் சென்னை வந்தார். நசரத்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த ஆனந்தராஜ் புகார் குறித்து தெரிவித்தார்.
அங்கு சென்று வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்யவும், அதற்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை கைது செய்து விசாரிக்கவும் நசரத்பேட்டை போலீசாரின் உதவியை கேட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமணி: 'பயிற்சி விமானத்தின் எரிபொருள் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு'

சூலூர் அருகே இருகூர் வான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட தேஜஸ் ரக போர் விமானம் செவ்வாய்க்கிழமை பறந்தபோது எரிபொருள் டேங்க் கழன்று கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி, விமானத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கோவை மாவட்டம், சூலூரில் 43-வது விமானப் படைப்பிரிவும், 5-வது பழுது நீக்கும் படைப்பிரிவும் உள்ளன. இங்கு மிக் 21, மிராஜ், உள்நாட்டுத் தயாரிப்பு இலகு ரக விமானமான தேஜஸ் ரக போர் விமானங்களும், தரங் எனும் ஆபத்துக் காலத்தில் உதவும் வகையிலான ஹெலிகாப்டர் படைப்பிரிவும் உள்ளன. இங்கு அவ்வப்போது விமானங்கள் பயிற்சிக்காக வானில் பறப்பது வழக்கம்.
இவ்வாறு பறக்கும்போது சூலூர், காரணம்பேட்டை, அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், பாப்பம்பட்டி, இருகூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் மீது பறந்து விமானிகள் சோதனை ஓட்டம், பயிற்சியில் ஈடுபடுவர். செவ்வாய்க்கிழமை காலை மூன்று தேஜஸ் ரக போர் விமானங்கள் பறந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது இருகூருக்கும் குரும்பபாளையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு தேஜஸ் ரக போர் விமானத்திலிருந்து கரும்புகையுடன் எரிபொருள் டேங்க் கழன்று விழுந்தது. இதனை இருகூர் பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர்.
இதனால் விமானம் கீழே விழுந்துவிட்டதாக நினைத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து போலீஸார் பார்த்தபோது, குரும்பபாளையத்துக்கு அருகிலுள்ள நந்தகுமார் என்பவரது விவசாய நிலத்தில் விமான எரிபொருள் டேங்க்கின் பாகங்கள் சிதறிக் கிடந்தன.
சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த விமானப்படை அதிகாரிகள் விழுந்தது விமானம் அல்ல, விமானத்தின் இரண்டாவது எரிபொருள் டேங்க் என தெரிவித்தனர். இதனிடையே அந்த விமானம் பத்திரமாக சூலூர் விமானப்படைதளத்தில் தரையிறங்கியதாகவும், கூடுதலாக இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட எரிபொருள் டேங்க் மட்டுமே கீழே விழுந்து சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான டேங்க் விழுந்த விவசாய நிலத்துக்கு ஒரு கி.மீ. தொலைவில்தான் பெட்ரோலிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எரிபொருள் டேங்க் விழுந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொழில்நுட்பக் கோளாறு திடீரென விமானிக்கு தெரியவந்ததால் உடனடியாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விமானத்தின் டேங்க் பகுதியை கழற்றிவிட்டதாகத் தெரிகிறது.
விமான எரிபொருள் டேங்க் விழுந்த விவசாய நிலத்தில் சுமார் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. விவசாயப் பணிக்கு ஆள்கள் யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. திடீரென விமானத்தின் பாகம் விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதியை பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மகாராஷ்டிராவில் தொடர் மழை: 35 பேர் பலி'

பட மூலாதாரம், Getty Images
தொடர் மழை காரணமாக, மகாராஷ்டிர மாநிலம், மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது உள்பட பல்வேறு சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை நீடித்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.மும்பை புறநகரான மாலாட் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில், 21 பேர் உயிரிழந்தனர். 72 பேர் காயமடைந்தனர். அவர்கள் மாநகராட்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












