பிரகாஷ் ஜவடேகர் - "நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது"

பட மூலாதாரம், MIB INDIA
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது"
'நீட்' தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நீட் தேர்வு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில், நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்றார். தற்போது அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளிடம் தேர்வு மையங்களில் தீவிர சோதனை நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளிடம் சோதனை நடத்தப்படுவதாக கூறினார்" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி: மீண்டும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தும் கமல்ஹாசன்

பட மூலாதாரம், MNM/TWITTER
தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 3, தேவர் மகன் 2 ஆகியவற்றின் படப்பிடிப்புகளுக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளதன் மூலம் மீண்டும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த தயாராகியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் கமல். இதன் புரொமோ படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியார் படப்பிடிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பிக்பாஸ் வீட்டையொட்டிய அரங்குகளில் கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் அல்லாது கமல் நடிப்பில் தேவர் மகன் படத்தின் 2-ஆம் பாகம் எடுக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து: "பொறியியல் பட்டம் முடிக்காதவர்களுக்கு அரியர் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு"

பட மூலாதாரம், SONIA NARANG
பழைய மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பதிவாளர் குமார், "பொறியியல் படிப்புகளில் ஓரிரு பாடங்கள் அரியர் இருப்பதால் பட்டத்தை முடிக்க முடியாமல் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சிரமத்தில் உள்ளனர்.
எனவே, அரியர் வைத்துள்ள மாணவர்கள் நலன் கருதி மீண்டும் தேர்வெழுத அவர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி வரும் நவம்பர், டிசம்பர் பருவத்தேர்வில் சிறப்புக் கட்டணம் செலுத்தி இதுவரை பட்டம் முடிக்காத பழைய மாணவர்கள் தேர்வு எழுதலாம்.
வளரும் தொழில்நுட்ப தேவைக்கேற்ப இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் வரும் கல்வியாண்டு முதல் சிறிய அளவிலான மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், உறுப்புக் கல்லூரிகளில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தமிழகஅரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அரசு ஒப்புதல் வழங்கியதும் இந்த ஆண்டு முதலே கட்டண உயர்வு அமலுக்கு வரும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கேஜ்ரிவாலை அறைந்தது ஏன்?"

பட மூலாதாரம், PTI
தன்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாததால்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தேர்தல் பிரசாரத்தின்போது கன்னத்தில் அறைந்ததாக இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"நான் செய்தது வெட்கக்கேடான விடயம் என்று எனக்கு தெரியும். நான் ஏன் அதை செய்தேன் என்று தெரியாமல் இருக்கிறேன். அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் கேஜ்ரிவால் இணைந்தது முதல் நான் அவரை பின்தொடர்ந்து வருகிறேன். அதன் காரணமாக அவரது பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டேன். ஆனால், எனது எதிர்பார்ப்புகளை ஏற்றவாறு கேஜ்ரிவாலின் செயல்பாடு இல்லாததே எனது செயலுக்கு காரணமென்று நான் நினைக்கிறேன். நான் செய்ததை எண்ணி தற்போது வருந்துகிறேன்" என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












