உச்ச நீதிமன்றம் வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்குக்கு நோட்டீஸ் - வெளிநாட்டு நிதி பெறுவதில் விதிமீறலா?

இந்திரா ஜெய்சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திரா ஜெய்சிங்

லாயர்ஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை படுத்தும் சட்டத்தின் கீழ் விதிமீறல் செய்ததாகவும், அதன் எஃப் சி ஆர் ஏ பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், அயல்நாடுகளில் இருந்து தொண்டு நிறுவனத்துக்கு பெற்ற பணம் முறைகேடாக கையாளப்பட்டதாகவும் குற்றம் சாட்டி விசாரணை கோரி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தது .

இதை ஏற்று லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் , அவரது கணவர் ஆனந்த் குரோவர், தொண்டு நிறுவனமான லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கொடுத்த பாலியல் புகார் வழக்கு தள்ளுபடி செய்ததை எதிர்த்தவர் வழக்குரைஞர் இந்திரா.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

இந்நிலையில் இந்திரா ஜெய்சிங், அவரது கணவர் ஆனந்த் குரோவர், என் ஜி ஓ, லாயர்ஸ் கலெக்டிவ் உள்ளிட்டவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் உச்ச நீதிமன்ற விசாரணை குழு ரஞ்சன் கோகாய் மீது குற்றமற்றவர் என அறிவிப்பதற்கு கையாண்ட முறைகள் குறித்து தங்களது கவலைகளை கூறியதால் தற்போது பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த அதிகாரிகள் இவ்விவகாரத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்தவித கருத்தும் கூற முடியாது எனக்கூறி மறுத்துவிட்டதாக மூத்த நீதிமன்ற செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி பிபிசியிடம் கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து அந்த என்ஜிஓ-வுக்கு எந்தவித அயல்நாட்டு நிதியும் வரவில்லை என்கிறார் ஜெய்சிங். தவறான மற்றும் சட்டத்துக்கு புறம்பான வகையில் உள்துறை அமைச்சகத்தால் எப் சி ஆர் ஏ பதிவு நிறுத்திவைக்கப்பட்டது பின்னர் ரத்து செய்யப்பட்டது என்றும் ஜெய்சிங் கூறினார்.

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

நிதி முறைகேடாக கையாளப்பட்டதாக கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நரேந்திர மோதி 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் அயல்நாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் லாப நோக்கற்ற தொண்டு நிறுவன குழுக்களின் மீது கண்காணிப்பு இறுகியது.

கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான என்ஜிஒக்களின் பதிவு ரத்து செய்யப்ட்டன.

யார் நிதி கொடுத்தார்கள் என்ற விவரத்தை தர மறுத்தது அல்லது தேச விரோத செயல்களுக்கு அந்நிய நாட்டு நிதிகளை பயன்படுத்தியது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் எஃப் சி ஆர் ஏ விதிகளை இக்குழுக்கள் மீறியுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

லாயர்ஸ் கலெக்டிவ் என்ஜிஓ தமக்கும் தமது நிறுவன அதிகாரிகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :