நீட் தேர்வு: 15 லட்சம் மாணவர்கள், 154 மையங்கள் - பலத்த உடை கட்டுப்பாடுகள்

நீட் தேர்வு: 15 லட்சம் மாணவர்கள், 154 மையங்கள்

இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான கட்டாய நீட் நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகிறார்கள்.

இதற்காக தமிழகத்தில் சென்னை,கோவை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை உட்பட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் 13 மையங்களில் நடக்கும் நீட் தேர்வில் 13 ஆயிரத்து 324 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்த முறை ஆதார் அட்டையும் 2 புகைப்படமும் இருந்தால் மட்டும் உள்ளே அனுமதிக்கபடுகின்றனர். ஆனால் மாணவிகள் ஷால் மற்றும் ஹீல்ஸ் அணிந்த செருப்பு, காதணி, வலையல் அணிய தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல் மாணவர்கள் முழு கை சட்டை மற்றும் பெல்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளதால் அதன் நடைமுறைகள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரிய சிரமம் ஏதும் இல்லை என்று மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

ஃபானி புயல் பாதிப்பின் காரணமாக ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அந்த மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் நிவாரண பணிகள் முடிந்த பின்னர், தேர்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு வரை சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வை இந்த ஆண்டு என்டிஏ என்ற தேசிய அளவிலான தேர்வு முகமை நடத்தவுள்ளது. கடந்த ஆண்டை போலவே மாணவர்கள் அணிந்து வரும் உடை, தேர்வுக்கான அடையாள அட்டை, சரியான நேரத்தில் மையத்தில் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு: 15 லட்சம் மாணவர்கள், 154 மையங்கள்

சிபிஎஸ்இ மூலம் நடத்தப்பட்ட நீட் தேர்வில், கேள்வித்தாளில் வாக்கியப்பிழை, எழுத்துப்பிழை இருந்ததால் கடந்த ஆண்டு மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அதேபோல, கடந்த ஆண்டு தேர்வு மையங்கள் ஓதுக்கீடு செய்வதிலும் சிக்கல் நீடித்தது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை கல்வியாளர்கள் பலரும் எதிர்த்தனர்.

கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த ஆண்டு, மாணவர்கள் அவரவர் மாநிலத்தில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 154 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாராக உள்ளன.

2013ல் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே இந்த தேர்வு குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. முறையாக தேர்வு நடத்தப்படவில்லை என்றும், அதை நடத்துவதில் உள்ள நிர்வாக சிக்கல்கள் மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது எனவும் கல்வியாளர்கள் கூறிவந்தனர். பல மாணவர் அமைப்புகள் தேர்வை ரத்து செய்யவேண்டும் என போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு: 15 லட்சம் மாணவர்கள், 154 மையங்கள் - பலத்த உடை கட்டுப்பாடுகள்

12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். தமிழகத்தில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா ஆகியோர் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கியபோதும், நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. .

தமிழகத்தில் காணப்பட்ட தொடர் எதிர்ப்பால் நீட் தேர்வு ஒரு முக்கிய சமூக பிரச்சனையாக இங்கு உருவெடுத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் இந்த பிரச்னையை பற்றி பேசவேண்டிய கட்டாயத்திற்கு அரசியல்தலைவர்கள் தள்ளப்பட்டனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், அவர்களோடு பேசி, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு வலியுறுத்துவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு: 15 லட்சம் மாணவர்கள், 154 மையங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :