நீட் தேர்வு: ராகுல் காந்தி சென்னையில் சொன்னதும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி

பட மூலாதாரம், Mohd Zakir/Hindustan Times via Getty Images

நீட் தேர்வு நீக்கப்படுமெனவும் பள்ளிக் கல்வி உள்ளிட்ட சில அம்சங்கள் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுமென்றும் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.

நீட் தேர்வு நீக்கப்படுமா என்றும், மத்தியப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுமா என்றும் ராகுல் காந்தியின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பிபிசி கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 13ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அந்த செய்தியாளர் சந்திப்பில், பிபிசியின் சார்பில் இரு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

"தமிழ்நாட்டில் நீட் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. அதைப் பற்றிய காங்கிரஸின் பார்வை என்ன, கல்வி தற்போது பொதுப் பட்டியலில் இருக்கிறது. அதனை மாநிலப் பட்டியலுக்குத் தருவீர்களா?" என்று கேட்கப்பட்டது.

இதைக் கேட்ட ராகுல் காந்தி, அருகில் அமர்ந்திருந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் கலந்தாலோசித்தார். பிறகு, "பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை மாநிலங்களிடம்தான் இருக்க வேண்டும். ஆனால், உயர்கல்வியின் சில அம்சங்கள் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். நீட் தேர்வைப் பொறுத்தவரை நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். அவற்றைப் பேசித் தீர்க்கலாம்" என்று பதிலளித்தார்.

ப. சிதம்பரத்திடம் கலந்தாலோசிககும் ராகுல் காந்தி

ஆனால், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றும் நீட் தேர்வு குறித்து எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லையென்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இலங்கை
இலங்கை

இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்தும் பொதுப் பட்டியலில் உள்ள சில துறைகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்தும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அளித்துள்ளது.

நீட் தேர்வு குறித்து கல்வி என்ற பிரிவின் கீழ் வாக்குறுதி அளித்திருக்கும் காங்கிரஸ், "நீட் தேர்வானது சில மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. மேலும்அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களைச் சேர்க்கும் மாநிலங்களின் உரிமையிலும் இது தலையிடுகிறது. ஆகவே, நாங்கள் நீட் தேர்வை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். பதிலாக, அதே தரத்தில் மாநில அளவிலான தேர்வை அறிமுகப்படுத்துவோம்." என்று கூறியுள்ளது.

மேலும் பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும், உயர் கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அனிதா, விவசாயிகள் போராட்டம், இந்திய நாணயம்

பட மூலாதாரம், BBC/AFP/GETTY

அதேபோல, பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களைப் பற்றிப் பேசும்போது, "அரசியல் சாசனத்தின் ஏழாவது பட்டியலில் உள்ள துறைகளின் பகிர்வு குறித்து மறுபரிசீலனை செய்வோம். பொது கருத்து எட்டப்பட்டு, பொதுப் பட்டியலில் உள்ள சில அம்சங்கள் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

பள்ளிக் கல்வி, ஆரம்பகட்ட மருத்துவம், இரண்டாம் கட்ட மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, குடிநீர், மின்சார விநியோகம் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கிறது. இந்த விவகாரங்களில் மாநில அரசுகளுக்கு ஆதரவான செயல்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தத் தேர்வு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, பள்ளி இறுதித் தேர்வில் 1176 மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனதால், அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இலங்கை
இலங்கை

இதையடுத்து இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு 2018ஆம் ஆண்டு பிரதீபா என்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் இதேபோல நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

"அனிதாவின் போராட்டத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் பா.ஜ.கவைத் தவிர எல்லாக் கட்சிகளுமே நீட் தேர்வு வேண்டாமென்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அதனை தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தந்திருப்பது சந்தோஷமளிக்கிறது. மாநிலக் கட்சிகளும் இதே வாக்குறுதிகளை அளித்தாலும் அவர்களால் செய்ய முடியுமா என்பது தெரியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியே இம்மாதிரி வாக்குறுதி அளித்திருப்பது அனிதா மரணத்தால் எழுந்த போராட்டத்திற்குக் கிடைத்த நியாயமாகவே பார்க்கிறேன்" என பிபிசியிடம் கூறினார் அனிதாவின் சகோதரரான மணிரத்னம்.

விவசாயிகள் போராட்டம்

அதேபோல இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A பிரிவு நீக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள், மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

இலங்கை
இலங்கை

"என் மீது மட்டும் 21 தேசத் துரோக வழக்குகள் இருக்கின்றன. இப்போது சட்டத்தை நீக்க வாக்குறுதி அளித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், இதை காங்கிரசும் மிகத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது.

தவிர, ஒரு விஷயத்திற்காக போராடுபவரை தேசத் துரோகி என முத்திரை குத்தும் பழக்கத்தை நிறுத்தவேண்டும். உண்மையான தேசத் துரோகிகளைவிட்டுவிட்டு, மக்களுக்காக போராடுபவர்கள்தான் இந்தச் சட்டத்தின் கீழ் பெரிதும் கைதுசெய்யப்படுகிறார்கள். வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. ஆகவே இது தொடர்பான மனப்போக்கும் மாற வேண்டும்" என்கிறார் அணுசக்திக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான உதயகுமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :