மழை பெய்ய வேண்டி முக்கிய கோவில்களில் யாகம் நடந்த இந்துசமய அறநிலையத் துறை உத்தரவு

'மழை பெய்ய வேண்டி முக்கிய கோவில்களில் யாகம்'

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'மழை பெய்ய வேண்டி முக்கிய கோவில்களில் யாகம்'

தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் செய்தி பின்வருமாறு விவரிக்கிறது,

பணீந்திர ரெட்டி, அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், "2019-20-ம் ஆண்டு ஸ்ரீவிகாரி ஆண்டில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சில நிகழ்ச்சிகளை அவரவர் பிரிவில் உள்ள முக்கிய கோவில்களில், அந்தந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு நடத்த அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டு கொள்கிறேன்" என்றுள்ளது.

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

என்னென்ன யாகம் நடத்த வேண்டும்?

  • பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல்.
  • நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல்.
  • ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை (மழை வேண்டும் பதிகம்) ஓதுதல்.
  • திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ம் திருமுறையில் தேவார மழைப்பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல்.
  • நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை கொண்டு வாசித்து வழிபாடு செய்தல்.
  • சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா செய்தல்.
  • சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல்.
  • மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல்.
  • மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல்.
  • ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல்.
  • நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருப்புன்கூர் சிவன் கோவிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல்.
  • வருண சூக்த வேத மந்திர பாராயணம் செய்தல்.
  • வருண காயத்ரி மந்திர பாராயணம் செய்தல்.

இந்த நிகழ்ச்சிகளை அந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட அக்கறையுடன் செயல்பட வேண்டும். இந்த நிகழ்வு தொடர்பாக கற்றறிந்தவர்களை தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கைகளை சார்நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Presentational grey line
Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: உலகில் தொழில் தொடங்க சிறந்த நகரங்கள் - முதல் 100 இடங்களுக்குள் சென்னை

உலகளவில் தொழில் தொடங்க சிறந்த நகரங்கள் பட்டியலில் 74வது இடத்தில் சென்னை உள்ளதாக, ஸ்டார்ட்அப் பிளிங்க் நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த நகரங்கள் தொழில் தொடங்க ஏதுவான சூழலை சொண்டிருக்கிறது, என்பதை இந்த நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதில் முதல் இடத்தில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ உள்ளது.

இந்தியாவில் ஐந்து நகரங்கள் முதல் 100 இடத்துக்குள் இருக்கின்றன. பெங்களூரு 11வது இடத்திலும், புது டெல்லி 14வது இடத்திலும், மும்பை 29, சென்னை 74 மற்றும் ஹைத்திராபாத் 75வது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை நியூயார்க் நகரமும், மூன்றாவதாக லண்டன் நகரமும் பிடித்துள்ளன.

Presentational grey line

இந்து தமிழ்: 'நீதிபதிகளுக்கான தேர்வு: 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை'

தமிழகத்தில் 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

தமிழகத்தில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கான முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் 7-ம் தேதி நடந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணைந்து நடத்திய இந்தத் தேர்வில், சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3,562 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.

இதற்கான பிரதானத் தேர்வு மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

இந்நிலையில், முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற சிவில் நீதிபதிகள் உள்ளிட்ட 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

முதல் நிலைத் தேர்வில் பொதுப் பிரிவினர் 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52.5 மதிப்பெண்களும், பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடியினர் 45 மதிப்பெண்களும் பெற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்களைப் பெறாதவர்கள் பிரதான தேர்வில் கலந்துகொள்ள முடியாது.

இந்நிலையில்தான் தற்போது முதல் நிலைத் தேர்வில், தேர்வெழுதிய 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. எந்த ஆண்டும் இல்லாத வகையில் கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்ததாலும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

Presentational grey line

தினமணி: 'மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்'

'மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்'

பட மூலாதாரம், CMRL

சென்னையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் புதன்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"சென்னை, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி 8 ஊழியர்கள் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இப் பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நல உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் தரப்பில் சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலாளர் செளந்தரராஜன், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமைப் பொது மேலாளர் ராஜரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

வாபஸ்: இந்நிலையில், சென்னை குறளகத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பாக மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநரிடம் முறையீடு செய்தால், சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட ஊழியர்கள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர். இதனால், வியாழக்கிழமை அதிகாலை முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

போராட்டத்தின்போது, ரயில்களை இயக்குவதற்கான சிக்னல் அமைப்பில் தவறான கட்டளையைக் கொடுத்து ரயில் சேவைகளைத் தடுத்ததற்காக, போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மனோகரன், பிரேம் குமார், பணிமனை கட்டுப்பாட்டாளர் சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகிய மூவரை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது." என்கிறது தினமணி.

Presentational grey line
புதுச்சேரி

பட மூலாதாரம், இந்து தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :