ஃபானி புயல்: 190 கி.மீ வேகத்தில் வீசும் காற்று , 10 லட்சம் மக்களை தங்க வைக்க ஏற்பாடு

ஃபானி புயல்: வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்படும் ஆயிரக்கணக்கான மக்கள்

பட மூலாதாரம், Reuters

ஃபானி புயலின் காரணமாக வடகிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஆயிரக்கணக்காம்ன மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி மணிக்கு 190 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் நகர்ந்து கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒடிசாவில் கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தாழ்வான பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்தாலும், ஆந்திரம் மற்றும் தமிழகத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?

கிழக்கு ஆந்திர பகுதியில் வங்கக் கடலில் மேல்நோக்கி இந்த புயல் நகர்ந்து செல்கிறது.

ஃபானி புயல்

புவனேஸ்வரில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஹெச்.ஆர். பிஸ்வாஸ், குறைந்தது ஒடிசாவில் உள்ள 11 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்கிறார். மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பேரிடர் பாதுகாப்பு முகமையும், மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் எச்சரித்துள்ளது.

ஒடிசா கரையை அடைந்தவுடன், இந்த புயலானது வங்கதேசத்தின் சிட்டகோங்கை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?

பத்துலட்சம் மக்களை தங்க வைக்க 850 தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

81 தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையமும், அரசு துரிதமாக செயல்பட தங்களது விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.

என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?

பட மூலாதாரம், Facebook

இதற்கு மத்தியில் ஃபானி புயலுக்கு 309 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்துள்ளனர். கஜா புயலுக்கு தரப்படாத நிதி, தமிழகத்தை தாக்காத ஃபானி புயலுக்கு தரப்படுவது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :