ஆதி மனிதன் வாழந்த இடம் இதுதான் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஆதிமனிதன் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு
ஆதிமனிதர்களின் ஒரு வகையை சேர்ந்த டெனிசொவன்கள், உயரமான இடங்களில் வசித்திருக்கலாமென கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திபெத்தின் உயரமான பகுதிகளில் அவர்கள் வசித்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டெனிசொவன்கள் ஆசியாவில் வாழ்ந்த ஒரு விசித்திரமான மனித இனம். இப்போதைய நவீன மனித இனம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் வாழ்ந்தார்கள்.

மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜீய வெற்றியாக கருதப்படுகிறது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் இதனை தமது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய நாடுகள், சிறிய நாடுகள் அனைத்தும் இதில் இணைந்திருப்பதாக தமது ட்வீட்டில் தெரிவித்துள்ள அவர், அதற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். விளக்கம்: "பா.ஜ.கவுக்கு செல்லப்போகிறேனா?"

தான் பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போவதாக வந்துள்ள செய்திகள் பொய்யானவை என்றும் உயிர்போகும்போது தன் உடல் மீது அ.தி.மு.க. கொடி போர்த்தப்படுவதே தன் லட்சியம் என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். தமிழில் வெளிவரும் வாரமிருமுறை இதழ் ஒன்றில் "நிம்மதி போச்சு; எடப்பாடி டார்ச்சர் - காசியில் பொங்கிய பன்னீர்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், பிரதமர் நரேந்திர மோதி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது அதில் பங்கேற்பதற்காக ஒரு நாள் முன்னதாகவே ஓ. பன்னீர்செல்வம் சென்றதாகவும் அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்து அவர் புலம்பியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
விரிவாக படிக்க:"பா.ஜ.கவுக்கு செல்லப்போகிறேனா?" ஓ.பி.எஸ். விளக்கம்

இலங்கை தாக்குதல்: தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்கள் வெளியீடு

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 9 தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை போலீஸார் இன்று புதன்கிழமை வெளியிட்டனர். இந்த 9 பேர் தங்கியிருந்த இடங்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்கள் விசாரணை நடத்தும் போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த சொத்துக்களை எதிர்வரும் காலங்களில் அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விரிவாக படிக்க:இலங்கை தாக்குதல்: தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்கள் வெளியீடு

வெனிசுவேலா 'ராணுவ கிளர்ச்சியை' முறியடித்ததாக அறிவித்த அதிபர் மதுரோ

பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலாவில், எதிர்கட்சி தலைவர் குவான் குவைடோவால் நடத்தப்பட்ட ராணுவ கிளர்ச்சியை தாம் முறியடித்துவிட்டதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். செவ்வாயன்று 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த வன்முறையில், டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் எதிர்கட்சியின் பக்கம் இருந்தனர். ஆனால் தொலைக்காட்சி உரை ஒன்றில், அதிபர் மதுரோ தனக்கு எதிராக ராணுவத்தை திருப்பும் முயற்சியில் குவைடோ தோல்வியுற்றதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












